சங்கீதம் 31 : 1 (ECTA)
இறைவனின் நம்பிக்கை
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா) ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்;
சங்கீதம் 31 : 2 (ECTA)
உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும்; எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
சங்கீதம் 31 : 3 (ECTA)
ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.
சங்கீதம் 31 : 4 (ECTA)
அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.
சங்கீதம் 31 : 5 (ECTA)
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். [* லூக் 23:46.. ]
சங்கீதம் 31 : 6 (ECTA)
நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
சங்கீதம் 31 : 7 (ECTA)
உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்; என் இக்கட்டுகளையும் நீர் அறிந்துள்ளீர்.
சங்கீதம் 31 : 8 (ECTA)
என் எதிரியின் கையில் என்னை நீர் விட்டுவிடவில்லை; அகன்ற இடத்தில் என்னைக் காலூன்றி நிற்கவைத்தீர்.
சங்கீதம் 31 : 9 (ECTA)
ஆண்டவரே, எனக்கு இரங்கும்; ஏனெனில் நான் இக்கட்டான நிலையில் உள்ளேன்; துயரத்தால் என் கண்ணும் என் உயிரும் என் உடலும் தளர்ந்து போயின.
சங்கீதம் 31 : 10 (ECTA)
என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது; ஆம், என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது; துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது; என் எலும்புகள் தளர்ந்து போகின்றன.
சங்கீதம் 31 : 11 (ECTA)
என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்; என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்; என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்; என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்.
சங்கீதம் 31 : 12 (ECTA)
இறந்தோர் போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்; உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்.
சங்கீதம் 31 : 13 (ECTA)
பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது; எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள்.
சங்கீதம் 31 : 14 (ECTA)
ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‛நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.
சங்கீதம் 31 : 15 (ECTA)
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 31 : 16 (ECTA)
உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 31 : 17 (ECTA)
ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்; என்னை வெட்கமுற விடாதேயும்; பொல்லார் வெட்கிப்போவார்களாக! பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக!
சங்கீதம் 31 : 18 (ECTA)
பொய்சொல்லும் வாய் அடைபட்டுப் போவதாக! செருக்கும் பழிப்புரையும் கொண்டு, நேர்மையாளருக்கு எதிராக இறுமாப்புடன் பேசும் நா
கட்டுண்டு கிடப்பதாக!
சங்கீதம் 31 : 19 (ECTA)
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி!
சங்கீதம் 31 : 20 (ECTA)
மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்!
சங்கீதம் 31 : 21 (ECTA)
ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில், அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார்.
சங்கீதம் 31 : 22 (ECTA)
நானோ, கலக்கமுற்ற நிலையில் ‛உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்’ என்று சொல்லிக் கொண்டேன்; ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தீர்.
சங்கீதம் 31 : 23 (ECTA)
ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார்.
சங்கீதம் 31 : 24 (ECTA)
ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24