சங்கீதம் 22 : 1 (ECTA)
துயர்மிகு புலம்பல்
(பாடகர் தலைவர்க்கு: ‘காலைப் பெண்மான்’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)
என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்? [* மத் 27:46; மாற் 15: 34 ]
சங்கீதம் 22 : 2 (ECTA)
என் கடவுளே, நான் பகலில் மன்றாடுகின்றேன்; நீர் பதில் அளிப்பதில்லை, இரவிலும் மன்றாடுகின்றேன்; எனக்கு அமைதி கிடைப்பதில்லை.
சங்கீதம் 22 : 3 (ECTA)
நீரோ தூயவராய் விளங்குகின்றீர்; இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்;
சங்கீதம் 22 : 4 (ECTA)
எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்.
சங்கீதம் 22 : 5 (ECTA)
உம்மை அவர்கள் வேண்டினார்கள்; விடுவிக்கப்பட்டார்கள்; உம்மை அவர்கள் நம்பினார்கள்; ஏமாற்றமடையவில்லை.
சங்கீதம் 22 : 6 (ECTA)
நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
சங்கீதம் 22 : 7 (ECTA)
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,
சங்கீதம் 22 : 8 (ECTA)
‛ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்பு கூர்ந்த அவனை அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர்.
சங்கீதம் 22 : 9 (ECTA)
என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர் நீரே; என் தாயிடம் பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்தவரும் நீரே!
சங்கீதம் 22 : 10 (ECTA)
கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே!
சங்கீதம் 22 : 11 (ECTA)
என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்; ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது; மேலும், உதவி செய்வார் யாருமில்லை.
சங்கீதம் 22 : 12 (ECTA)
காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன; பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன.
சங்கீதம் 22 : 13 (ECTA)
அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; இரைதேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்.
சங்கீதம் 22 : 14 (ECTA)
நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்; என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின; என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று; என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப்போயிற்று.
சங்கீதம் 22 : 15 (ECTA)
என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.
சங்கீதம் 22 : 16 (ECTA)
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.
சங்கீதம் 22 : 17 (ECTA)
என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.
சங்கீதம் 22 : 18 (ECTA)
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். [* மத் 27:35; மாற் 15:24; லூக் 23;34; யோவா 19: 24 ]
சங்கீதம் 22 : 19 (ECTA)
நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
சங்கீதம் 22 : 20 (ECTA)
வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்;
சங்கீதம் 22 : 21 (ECTA)
இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.
சங்கீதம் 22 : 22 (ECTA)
புகழ்ச்சிப் பாடல் உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். [* எபி 2: 12 ]
சங்கீதம் 22 : 23 (ECTA)
ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்.
சங்கீதம் 22 : 24 (ECTA)
ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை; அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை; தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை;
தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில்
அவர்களுக்குச் செவிசாய்த்தார்.
சங்கீதம் 22 : 25 (ECTA)
மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக! உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
சங்கீதம் 22 : 26 (ECTA)
எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!
சங்கீதம் 22 : 27 (ECTA)
பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.
சங்கீதம் 22 : 28 (ECTA)
ஏனெனில் அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்.
சங்கீதம் 22 : 29 (ECTA)
மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்;* புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். [ ‘உணவுண்டு அவரைப் பணிவர்’ என்பது எபிரேய பாடம்.. ]
சங்கீதம் 22 : 30 (ECTA)
வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.
சங்கீதம் 22 : 31 (ECTA)
அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு ‛இதை அவரே செய்தார்’ என்பர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31