சங்கீதம் 18 : 1 (ECTA)
அரசரின் வெற்றிப்பாடல்
(பாடகர் தலைவர்க்கு: ஆண்டவரின் அடியாராகிய தாவீது, தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் அவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப் பாடியது)
அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
சங்கீதம் 18 : 2 (ECTA)
ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.
சங்கீதம் 18 : 3 (ECTA)
போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.
சங்கீதம் 18 : 4 (ECTA)
சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.
சங்கீதம் 18 : 5 (ECTA)
பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.
சங்கீதம் 18 : 6 (ECTA)
என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.
சங்கீதம் 18 : 7 (ECTA)
அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன; அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின.
சங்கீதம் 18 : 8 (ECTA)
அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது; அவரிடமிருந்து நெருப்புக்கனல்
வெளிப்பட்டது.
சங்கீதம் 18 : 9 (ECTA)
வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்; கார் முகில் அவரது காலடியில் இருந்தது.
சங்கீதம் 18 : 10 (ECTA)
கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்; காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.
சங்கீதம் 18 : 11 (ECTA)
காரிருளைத் தமக்கு அவர் மூடுதிரை ஆக்கிக்கொண்டார்; நீர்கொண்ட முகிலைத் தமக்குக் கூடாரம் ஆக்கிக்கொண்டார்.
சங்கீதம் 18 : 12 (ECTA)
அவர்தம் திருமுன்னின் பேரொளியில், மேகங்கள் கல் மழையையும் நெருப்புக் கனலையும் பொழிந்தன.
சங்கீதம் 18 : 13 (ECTA)
ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்; உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார். கல் மழையையும் நெருப்புக் கனலையும்
பொழிந்தார்.
சங்கீதம் 18 : 14 (ECTA)
தம் அம்புகளை எய்து அவர் அவர்களைச் சிதறடித்தார்; பெரும் மின்னல்களைத் தெறித்து அவர்களைக் கலங்கடித்தார்.
சங்கீதம் 18 : 15 (ECTA)
ஆண்டவரே, உமது கடிந்துரையாலும் உமது மூச்சுக்காற்றின் வலிமையாலும் நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது; நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.
சங்கீதம் 18 : 16 (ECTA)
உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்; வெள்ளப்பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார்.
சங்கீதம் 18 : 17 (ECTA)
என் வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவித்தார்; என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார்;
சங்கீதம் 18 : 18 (ECTA)
எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்; ஆண்டவரோ எனக்கு ஊன்றுகோலாய் இருந்தார்.
சங்கீதம் 18 : 19 (ECTA)
நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்; நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால், அவர் என்னை விடுவித்தார்.
சங்கீதம் 18 : 20 (ECTA)
ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்; என் மாசற்ற செயலுக்கு ஏற்ப கைம்மாறு செய்தார்.
சங்கீதம் 18 : 21 (ECTA)
ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்; பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.
சங்கீதம் 18 : 22 (ECTA)
அவர்தம் நீதிநெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்; அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.
சங்கீதம் 18 : 23 (ECTA)
அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்; தீங்கு செய்யாவண்ணம் என்னைக் காத்துக் கொண்டேன்.
சங்கீதம் 18 : 24 (ECTA)
ஆண்டவர், என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்; அவர்தம் பார்வையில் நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.
சங்கீதம் 18 : 25 (ECTA)
ஆண்டவரே, மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குவீர்.
சங்கீதம் 18 : 26 (ECTA)
தூயோருக்குத் தூயவராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.
சங்கீதம் 18 : 27 (ECTA)
எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்; செருக்குற்றோரை ஏளனத்துடன்
நீர் பார்க்கின்றீர்.
சங்கீதம் 18 : 28 (ECTA)
ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.
சங்கீதம் 18 : 29 (ECTA)
உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்; என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்.
சங்கீதம் 18 : 30 (ECTA)
இந்த இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.
சங்கீதம் 18 : 31 (ECTA)
ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு கடவுள் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?
சங்கீதம் 18 : 32 (ECTA)
வலிமையை அரைக்கச்சையாக அளித்த இறைவன் அவரே; என் வழியைப் பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.
சங்கீதம் 18 : 33 (ECTA)
அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்; உயர்ந்த இடத்தில் என்னை நிலைநிறுத்துகின்றார். [* அப 3: 19 ]
சங்கீதம் 18 : 34 (ECTA)
போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்; எனவே, வெண்கல வில்லையும்
என் புயங்கள் வளைக்கும்.
சங்கீதம் 18 : 35 (ECTA)
ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்; உமது வலக்கரத்தால் என்னைத் தாங்கிக் கொண்டீர்; உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர்.
சங்கீதம் 18 : 36 (ECTA)
நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்; என் கால்கள் தடுமாறவில்லை.
சங்கீதம் 18 : 37 (ECTA)
என் எதிரிகளைத் துரத்திச்சென்று நான் அவர்களைப் பிடித்தேன்; அவர்களை அழித்தொழிக்கும் வரையில் திரும்பவில்லை.
சங்கீதம் 18 : 38 (ECTA)
அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்; அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.
சங்கீதம் 18 : 39 (ECTA)
போரிடும் ஆற்றலை நீர் எனக்கு அரைக்கச்சையாக அளித்தீர்; என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.
சங்கீதம் 18 : 40 (ECTA)
என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்; என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.
சங்கீதம் 18 : 41 (ECTA)
உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்; ஆனால், அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை. அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்; ஆனால், அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
சங்கீதம் 18 : 42 (ECTA)
எனவே, நான் அவர்களை நொறுக்கிக் காற்றடித்துச் செல்லும் புழுதிபோல் ஆக்கினேன்; தெருச் சேறென அவர்களைத் தூர எறிந்து விட்டேன்.
சங்கீதம் 18 : 43 (ECTA)
என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்; பிற இனங்களுக்கு என்னைத் தலைவன் ஆக்கினீர்; நான் முன்பின் அறியாத மக்கள் எனக்குப் பணிவிடை செய்தனர்.
சங்கீதம் 18 : 44 (ECTA)
அவர்கள் என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குப் பணிந்தனர்; வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக் குறுகி வந்தனர்.
சங்கீதம் 18 : 45 (ECTA)
வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.
சங்கீதம் 18 : 46 (ECTA)
ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர்
போற்றப் பெறுவாராக!
என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!
சங்கீதம் 18 : 47 (ECTA)
எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்; மக்களினங்களை எனக்குக்
கீழ்ப்படுத்தியவரும் அவரே!
சங்கீதம் 18 : 48 (ECTA)
என் பகைவரிடமிருந்து என்னை விடுவித்தவரும் அவரே! ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்!
சங்கீதம் 18 : 49 (ECTA)
ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன். [* உரோ 15:9.. ]
சங்கீதம் 18 : 50 (ECTA)
தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50