சங்கீதம் 144 : 1 (ECTA)
வெற்றிக்கு நன்றி
(தாவீதுக்கு உரியது) என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே!
சங்கீதம் 144 : 2 (ECTA)
என் கற்பாறையும்* கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! [* ‘பேரன்பும்’ என்றும் பொருள்படும்.. ]
சங்கீதம் 144 : 3 (ECTA)
ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்? [* யோபு 7:17-18; திபா 8: 4 ]
சங்கீதம் 144 : 4 (ECTA)
மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை.
சங்கீதம் 144 : 5 (ECTA)
ஆண்டவரே! உம் வான்வெளியை வளைத்து இறங்கிவாரும்; மலைகளைத் தொடும்; அவை புகை கக்கும்.
சங்கீதம் 144 : 6 (ECTA)
மின்னலை மின்னச் செய்து, அவர்களைச் சிதறடியும்; உம் அம்புகளை எய்து, அவர்களைக் கலங்கடியும்.
சங்கீதம் 144 : 7 (ECTA)
வானின்று உமது கையை நீட்டி எனக்கு விடுதலை வழங்கும்; பெருவெள்ளம் போல் எழும் வேற்றினத்தார் கையினின்று என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 144 : 8 (ECTA)
அவர்களது வாய் பேசுவது பொய்! அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!
சங்கீதம் 144 : 9 (ECTA)
இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.
சங்கீதம் 144 : 10 (ECTA)
அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே!
சங்கீதம் 144 : 11 (ECTA)
எனக்கு விடுதலை வழங்கும்; வேற்றினத்தார் கையினின்று என்னை விடுவித்தருளும்; அவர்களது வாய் பேசுவது பொய்! அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!
சங்கீதம் 144 : 12 (ECTA)
எம் புதல்வர்கள் இளமையில் செழித்து வளரும் செடிகள்போல் இருப்பார்களாக! எம் புதல்வியர் அரண்மனைக்கு அழகூட்டும் செதுக்கிய சிலைகள்போல் இருப்பார்களாக!
சங்கீதம் 144 : 13 (ECTA)
எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக! வகைவகையான தானியங்களால் நிறைந்திருப்பனவாக! எங்கள் வயல்களில் ஆடுகள் ஆயிரம், பல்லாயிரம் மடங்கு பலுகட்டும்!
சங்கீதம் 144 : 14 (ECTA)
எங்கள் மாடுகள் சுமைசுமப்பனவாக! எவ்விதச் சிதைவோ இழப்போ இல்லாதிருக்கட்டும்! எங்கள் தெருக்களில் அழுகுரல் இல்லாதிருக்கட்டும்.
சங்கீதம் 144 : 15 (ECTA)
இவற்றை உண்மையாகவே அடையும் மக்கள் பேறுபெற்றோர்! ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட மக்கள் பேறுபெற்றோர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15