சங்கீதம் 139 : 1 (ECTA)
முழுமையாய் அறிந்து காக்கும் கடவுள்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா) ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
சங்கீதம் 139 : 2 (ECTA)
நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
சங்கீதம் 139 : 3 (ECTA)
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.
சங்கீதம் 139 : 4 (ECTA)
ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.
சங்கீதம் 139 : 5 (ECTA)
எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்; உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர்.
சங்கீதம் 139 : 6 (ECTA)
என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது.
சங்கீதம் 139 : 7 (ECTA)
உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?
சங்கீதம் 139 : 8 (ECTA)
நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்!
சங்கீதம் 139 : 9 (ECTA)
நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும், [ …* ‘வைகறையின் இறக்கைகளால்’ என்பது எபிரேய பாடம்.. ]
சங்கீதம் 139 : 10 (ECTA)
அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும்.
சங்கீதம் 139 : 11 (ECTA)
‘உண்மையில் இருள் என்னை மூடிக்கொள்ளாதோ? ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?’ என்று நான் சொன்னாலும்,
சங்கீதம் 139 : 12 (ECTA)
இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை; இரவும் பகலைப்போல ஒளியாய் இருக்கின்றது; இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.
சங்கீதம் 139 : 13 (ECTA)
ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!
சங்கீதம் 139 : 14 (ECTA)
அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்.
சங்கீதம் 139 : 15 (ECTA)
என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.
சங்கீதம் 139 : 16 (ECTA)
உம் கண்கள் கருமுளையில் என் உறுப்புகளைக் கண்டன; நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே உமது நூலில் எழுதப்பட்டுள்ளன.
சங்கீதம் 139 : 17 (ECTA)
இறைவா! உம்முடைய நினைவுகளை நான் அறிந்துகொள்வது எத்துணைக் கடினம்! அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது!
சங்கீதம் 139 : 18 (ECTA)
அவற்றைக் கணக்கிட நான் முற்பட்டால், அவை கடல் மணலிலும் மிகுதியாய் உள்ளன; அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால், நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.
சங்கீதம் 139 : 19 (ECTA)
கடவுளே! நீர் தீயோரைக் கொன்றுவிட்டால், எவ்வளவு நலம்! இரத்தப்பழிகாரர் என்னிடமிருந்து அகன்றால், எத்துணை நன்று!
சங்கீதம் 139 : 20 (ECTA)
ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன் உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்; அவர்கள் தலைதூக்கி உமக்கு எதிராய்ச் சதி செய்கின்றார்கள்.
சங்கீதம் 139 : 21 (ECTA)
ஆண்டவரே! உம்மை வெறுப்போரை நானும் வெறுக்காதிருப்பேனோ? உம்மை எதிர்க்க எழுவோரை நானும் வெறுக்கின்றேன் அன்றோ?
சங்கீதம் 139 : 22 (ECTA)
நான் அவர்களை அடியோடு வெறுக்கின்றேன்; அவர்கள் எனக்கும் எதிரிகள் ஆனார்கள்.
சங்கீதம் 139 : 23 (ECTA)
இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்; என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும்.
சங்கீதம் 139 : 24 (ECTA)
உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்; என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24