சங்கீதம் 135 : 1 (ECTA)
அல்லேலூயா! ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்; ஆண்டவரின் ஊழியரே! அவரைப் புகழுங்கள்.
சங்கீதம் 135 : 2 (ECTA)
ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே! நம் கடவுளின் கோவில் முற்றங்களில் உள்ளவர்களே!
சங்கீதம் 135 : 3 (ECTA)
ஆண்டவரைப் புகழுங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்; அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்; ஏனெனில், அவர் இனியவர்.
சங்கீதம் 135 : 4 (ECTA)
ஆண்டவர் யாக்கோபைத் தமக்கென்று தேர்ந்துகொண்டார்; இஸ்ரயேலைத் தமக்குரிய தனிச் சொத்தாகத் தெரிந்தெடுத்தார்.
சங்கீதம் 135 : 5 (ECTA)
ஆண்டவர் மேன்மைமிக்கவர் என்பதை அறிவேன்; நம் ஆண்டவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர் என்பதும் எனக்குத் தெரியும்.
சங்கீதம் 135 : 6 (ECTA)
விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும் எல்லா ஆழ்பகுதிகளிலும், ஆண்டவர் தமக்கு விருப்பமான யாவற்றையும் செய்கின்றார்.
சங்கீதம் 135 : 7 (ECTA)
அவர் பூவுலகின் கடையெல்லைகளிலிருந்து மேகங்களை எழச் செய்கின்றார். மழை பெய்யும்படி மின்னலை உண்டாக்குகின்றார்; காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து வெளிவரச் செய்கின்றார்.
சங்கீதம் 135 : 8 (ECTA)
அவர் எகிப்தின் தலைப்பேறுகளைத் தாக்கினார்; மனிதர், கால்நடைகளின் தலைப்பேறுகளை அழித்தார்.
சங்கீதம் 135 : 9 (ECTA)
எகிப்து நாடே! உன் நடுவில் பார்வோனையும் அவனுடைய எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு, அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் அவர் நிகழச் செய்தார்.
சங்கீதம் 135 : 10 (ECTA)
அவர் பல்வேறு இனத்தவரைத் தாக்கினார்; வலிமைவாய்ந்த மன்னர்களைக் கொன்றார்.
சங்கீதம் 135 : 11 (ECTA)
எமோரியரின் மன்னனாகிய சீகோனையும் பாசானின் மன்னனாகிய ஓகையும் கானானின் எல்லா அரசுகளையும் அழித்தார்;
சங்கீதம் 135 : 12 (ECTA)
அவர்கள் நாட்டைத் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாக, சொந்த உடைமையாகக் கொடுத்தார்.
சங்கீதம் 135 : 13 (ECTA)
ஆண்டவரே! உமது பெயர் என்றுமுள்ளது; ஆண்டவரே! உம்மைப்பற்றிய நினைவு தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும்.
சங்கீதம் 135 : 14 (ECTA)
ஆண்டவர் தம் மக்களை நீதியுடன் தீர்ப்பிடுவார்; தம் அடியாருக்கு இரக்கம் காட்டுவார்.
சங்கீதம் 135 : 15 (ECTA)
வேற்றினத்தார் வழிபடும் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே; அவை மனிதரின் கையால் செய்யப்பட்டவையே!
சங்கீதம் 135 : 16 (ECTA)
அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; அவை காண்பதில்லை;
சங்கீதம் 135 : 17 (ECTA)
காதுகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை மூச்சுவிடுவதில்லை.
சங்கீதம் 135 : 18 (ECTA)
அவற்றைச் செய்து வைப்பவரும் அவற்றில் நம்பிக்கை வைக்கும் யாவரும் அவற்றைப் போலவே இருப்பார்கள்.
சங்கீதம் 135 : 19 (ECTA)
இஸ்ரயேல் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்! ஆரோன் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!
சங்கீதம் 135 : 20 (ECTA)
லேவி குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்! அவருக்கு அஞ்சி நடப்போரே! அவரைப் போற்றுங்கள்!
சங்கீதம் 135 : 21 (ECTA)
எருசலேமைத் தம் உறைவிடமாகக் கொண்டிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக; சீயோனிலிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக அல்லேலூயா!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

BG:

Opacity:

Color:


Size:


Font: