சங்கீதம் 118 : 1 (ECTA)
நன்றிப் புகழ் மாலை ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. [* குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 107:1; 136:1; எரே 33: 11 ]
சங்கீதம் 118 : 2 (ECTA)
‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
சங்கீதம் 118 : 3 (ECTA)
‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!
சங்கீதம் 118 : 4 (ECTA)
‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக!
சங்கீதம் 118 : 5 (ECTA)
நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்.
சங்கீதம் 118 : 6 (ECTA)
ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? [* எபி 13: 6 ]
சங்கீதம் 118 : 7 (ECTA)
எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்; என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக் கண்ணாரக் காண்பேன்.
சங்கீதம் 118 : 8 (ECTA)
மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
சங்கீதம் 118 : 9 (ECTA)
உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்!
சங்கீதம் 118 : 10 (ECTA)
வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.
சங்கீதம் 118 : 11 (ECTA)
எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.
சங்கீதம் 118 : 12 (ECTA)
தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; நெருப்பிலிட்ட முட்களைப்போல் அவர்கள் சாம்பலாயினர்; ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.
சங்கீதம் 118 : 13 (ECTA)
அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
சங்கீதம் 118 : 14 (ECTA)
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. [* விப 15:2; எசா 12: 2 ]
சங்கீதம் 118 : 15 (ECTA)
நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
சங்கீதம் 118 : 16 (ECTA)
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
சங்கீதம் 118 : 17 (ECTA)
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;
சங்கீதம் 118 : 18 (ECTA)
கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.
சங்கீதம் 118 : 19 (ECTA)
நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
சங்கீதம் 118 : 20 (ECTA)
ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
சங்கீதம் 118 : 21 (ECTA)
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.
சங்கீதம் 118 : 22 (ECTA)
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! [* லூக் 20:17; திப 4:11; 1 பேது 2: 7 ; மத் 21:42; மாற் 12:10- 11. ]
சங்கீதம் 118 : 23 (ECTA)
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! [* மத் 21:42; மாற் 12:10- 11 ]
சங்கீதம் 118 : 24 (ECTA)
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
சங்கீதம் 118 : 25 (ECTA)
ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! [* மத் 21:9; மாற் 11:9; யோவா 12: 13 ]
சங்கீதம் 118 : 26 (ECTA)
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். [* மத் 21:9; 23:39; மாற் 11:9; லூக் 18:35; 19:38; யோவா 12:13.. ]
சங்கீதம் 118 : 27 (ECTA)
ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.
சங்கீதம் 118 : 28 (ECTA)
என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.
சங்கீதம் 118 : 29 (ECTA)
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29