சங்கீதம் 109 : 1 (ECTA)
துன்புற்றவரின் முறையீடு
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாய் இராதேயும்.
சங்கீதம் 109 : 2 (ECTA)
தீயோரும் வஞ்சனை செய்வோரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்; எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசியுள்ளனர்.
சங்கீதம் 109 : 3 (ECTA)
பகைவரின் சொற்கள் என்னைச் சூழ்ந்துள்ளன; அவர்கள் காரணமின்றி என்னைத் தாக்குகின்றனர்.
சங்கீதம் 109 : 4 (ECTA)
நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றம் சாட்டினர்; நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.
சங்கீதம் 109 : 5 (ECTA)
நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமையே செய்தனர்; அன்புக்குப் பதிலாக அவர்கள் வெறுப்பையே காட்டினர்;
சங்கீதம் 109 : 6 (ECTA)
அவர்கள் கூறியது: “அவனுக்கு எதிராகத் தீயவனை எழும்பச் செய்யும்! ‘குற்றம் சாட்டுவோன்’ அவனது வலப்பக்கம் நிற்பானாக!
சங்கீதம் 109 : 7 (ECTA)
நீதி விசாரணையின்போது அவன் தண்டனை பெறட்டும்! அவன் செய்யும் வேண்டுகோள் குற்றமாகக் கருதப்படுவதாக!
சங்கீதம் 109 : 8 (ECTA)
அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்; அவனது பதவியை வேறோருவன் எடுத்துக் கொள்ளட்டும்! [* திப 1: 20 ]
சங்கீதம் 109 : 9 (ECTA)
அவனுடைய பிள்ளைகள் தந்தை இழந்தோர் ஆகட்டும்! அவனுடைய மனைவி கைம்பெண் ஆகட்டும்!
சங்கீதம் 109 : 10 (ECTA)
அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்! பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்!
சங்கீதம் 109 : 11 (ECTA)
அவனுக்கு உரியவற்றை எல்லாம் கடன் கொடுத்தவன் பறித்துக் கொள்ளட்டும்! அவனது உழைப்பின் பயனை அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!
சங்கீதம் 109 : 12 (ECTA)
அவனுக்கு இரக்கங்காட்ட ஒருவனும் இல்லாதிருக்கட்டும்! தந்தையை இழந்த, அவனுடைய பிள்ளைகள்மேல் யாரும் இரங்காதிருக்கட்டும்!
சங்கீதம் 109 : 13 (ECTA)
அவன் வழி மரபு அடியோடு அழியட்டும்! அடுத்த தலைமுறைக்கு அவர்களுடைய பெயர் இல்லாது போகட்டும்!
சங்கீதம் 109 : 14 (ECTA)
அவனுடைய மூதாதையரின் குற்றத்தை ஆண்டவர் நினைவில் கொள்ளட்டும்! அவனுடைய தாய் செய்த பாவத்தை அவர் மன்னியாது இருக்கட்டும்!
சங்கீதம் 109 : 15 (ECTA)
அவை என்றும் ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்! அவனது நினைவை பூவுலகினின்று அடியோடு அவர் அகற்றட்டும்!
சங்கீதம் 109 : 16 (ECTA)
ஏனெனில், அவன் இரக்கம் காட்ட நினைக்கவில்லை; எளியோரையும் வறியோரையும் கொடுமைப்படுத்தினான்; நெஞ்சம் நொறுங்குண்டோரைக் கொலைசெய்யத் தேடினான்.
சங்கீதம் 109 : 17 (ECTA)
சபிப்பதையே அவன் விரும்பினான்; விரும்பிய அதுவே அவன்மீது விழட்டும்! ஆசி வழங்குவதை அவன் விரும்பவில்லை; ஆகவே அது அவனைவிட்டுத் தொலைவில் செல்லட்டும்!
சங்கீதம் 109 : 18 (ECTA)
சாபமே அவன் அணிந்த ஆடை; தண்ணீரென அவன் உடலையும் எண்ணெயென அவன் எலும்புகளையும் அது நனைக்கட்டும்!
சங்கீதம் 109 : 19 (ECTA)
அது அவனைப் போர்த்தும் ஆடைபோல் இருக்கட்டும்! நாள்தோறும் அவன் கட்டும் கச்சைபோல் இருக்கட்டும்!
சங்கீதம் 109 : 20 (ECTA)
என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும், எனக்கு எதிராகத் தீயன பேசுவோருக்கும் ஆண்டவர் அளிக்கும் கைம்மாறாக அது இருப்பதாக!
சங்கீதம் 109 : 21 (ECTA)
ஆனால், என் தலைவராகிய கடவுளே! உமது பெயரை முன்னிட்டு என் சார்பாகச் செயல்படும்! உமது பேரன்பின் இனிமைபொருட்டு என்னை மீட்டருளும்!
சங்கீதம் 109 : 22 (ECTA)
நானோ எளியவன்; வறியவன்; என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.
சங்கீதம் 109 : 23 (ECTA)
மாலைநேர நிழலைப்போல் நான் மறைந்து போகின்றேன்; வெட்டுக் கிளியைப் போல நான் காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றேன்.
சங்கீதம் 109 : 24 (ECTA)
நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன; என் உடல் வலிமை இழந்து மெலிந்து போகின்றது.
சங்கீதம் 109 : 25 (ECTA)
நானோ அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்; என்னைப் பார்க்கின்றோர் தலையை ஆட்டுகின்றனர். [* மத் 27:39; மாற் 15:29.. ]
சங்கீதம் 109 : 26 (ECTA)
ஆண்டவரே! என் கடவுளே! எனக்கு உதவியருளும்! உமது பேரன்பிற்கேற்ப மீட்டருளும்!
சங்கீதம் 109 : 27 (ECTA)
இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என அவர்கள் அறியட்டும்! ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என அவர்கள் உணரட்டும்.
சங்கீதம் 109 : 28 (ECTA)
அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் எனக்கு ஆசி வழங்கும்! எனக்கு எதிராக எழுவோர் இழிவுறட்டும்! உம் ஊழியனாகிய நான் அகமகிழ்வேன்.
சங்கீதம் 109 : 29 (ECTA)
என்னைக் குற்றஞ்சாட்டுவோர்க்கு மானக்கேடு மேலாடை ஆகட்டும்! அவர்களின் வெட்கம் அவர்களுக்கு மேலங்கி ஆகட்டும்!
சங்கீதம் 109 : 30 (ECTA)
என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்; பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன்.
சங்கீதம் 109 : 31 (ECTA)
ஏனெனில், வறியோரின் வலப்பக்கம் அவர் நிற்கின்றார்; தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31