சங்கீதம் 105 : 1 (ECTA)
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
சங்கீதம் 105 : 2 (ECTA)
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
சங்கீதம் 105 : 3 (ECTA)
அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
சங்கீதம் 105 : 4 (ECTA)
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
சங்கீதம் 105 : 5 (ECTA)
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
சங்கீதம் 105 : 6 (ECTA)
அவரின்; ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
சங்கீதம் 105 : 7 (ECTA)
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.
சங்கீதம் 105 : 8 (ECTA)
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
சங்கீதம் 105 : 9 (ECTA)
ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்கு தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார்.
சங்கீதம் 105 : 10 (ECTA)
யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார்.
சங்கீதம் 105 : 11 (ECTA)
'கானான் நாட்டை உங்களுக்கு அளிப்பேன்; அப் பங்கே உங்களுக்கு உரிமைச் சொத்தாய் இருக்கும்' என்றார் அவர்.
சங்கீதம் 105 : 12 (ECTA)
அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் குறைந்தவராய் இருந்தார்கள்; அங்கே அவர்கள் அன்னியராய் இருந்தார்கள்.
சங்கீதம் 105 : 13 (ECTA)
அவர்கள் ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்து திரிந்தார்கள்.
சங்கீதம் 105 : 14 (ECTA)
யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டு விடவில்லை; அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார்.
சங்கீதம் 105 : 15 (ECTA)
'நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்! என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்' என்றார் அவர்.
சங்கீதம் 105 : 16 (ECTA)
நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார்.
சங்கீதம் 105 : 17 (ECTA)
அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பிவைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார்.
சங்கீதம் 105 : 18 (ECTA)
அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர்.
சங்கீதம் 105 : 19 (ECTA)
காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது.
சங்கீதம் 105 : 20 (ECTA)
மன்னர் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்;
சங்கீதம் 105 : 21 (ECTA)
அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார்.
சங்கீதம் 105 : 22 (ECTA)
அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்; அவருடைய அவைப்பெரியோருக்கு நல்லறிவு புகட்டினார்.
சங்கீதம் 105 : 23 (ECTA)
பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்; யாக்கோபு காம் நாட்டில் அன்னியராய் வாழ்ந்தார்.
சங்கீதம் 105 : 24 (ECTA)
ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.
சங்கீதம் 105 : 25 (ECTA)
தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார்.
சங்கீதம் 105 : 26 (ECTA)
அவர்தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.
சங்கீதம் 105 : 27 (ECTA)
அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர்.
சங்கீதம் 105 : 28 (ECTA)
அவர் இருளை அனுப்பி நாட்டை இருட்டாக்கினார்; அவருடைய சொற்களை எதிர்ப்பார் இல்லை.
சங்கீதம் 105 : 29 (ECTA)
அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார்; அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார்.
சங்கீதம் 105 : 30 (ECTA)
அவர்களது நாட்டிற்குள் தவளைகள் ஏறிவந்தன; மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும் அவை நுழைந்தன.
சங்கீதம் 105 : 31 (ECTA)
அவர் கட்டளையிட, அவர்களுடைய நாடு முழுவதிலும் ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன.
சங்கீதம் 105 : 32 (ECTA)
அவர் நீருக்குப் பதிலாகக் கல்லை மழையாகப் பொழிந்தார்; அவர்களது நாடெங்கும் மின்னல் தெறிக்கச் செய்தார்.
சங்கீதம் 105 : 33 (ECTA)
அவர் அவர்களின் திராட்சைச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்; அவர்களது நாடெங்குமுள்ள மரங்களை முறித்தார்.
சங்கீதம் 105 : 34 (ECTA)
அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும் எண்ணற்ற வெட்டுப்புழுக்களும் அங்கே தோன்றின.
சங்கீதம் 105 : 35 (ECTA)
அவை அவர்களது நாட்டின் பயிர் பச்சைகளைத் தின்றுத்தீர்த்தன; அவர்களது நிலத்தின் விளைச்சல்களை விழுங்கிவிட்டன.
சங்கீதம் 105 : 36 (ECTA)
அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்; அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார்.
சங்கீதம் 105 : 37 (ECTA)
அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்; அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை.
சங்கீதம் 105 : 38 (ECTA)
அவர்கள் வெளியேறுகையில் எகிப்தியர் அகமகிழ்ந்தனர்; ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.
சங்கீதம் 105 : 39 (ECTA)
அவர் அவர்களைப் பாதுகாக்க மேகத்தைப் பரப்பினார்; இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார்.
சங்கீதம் 105 : 40 (ECTA)
அவர்கள் கேட்டதால் அவர் காடைகளை வரச்செய்தார்; வானினின்று வந்த உணவால் அவர்களை நிறைவுறச் செய்தார்.
சங்கீதம் 105 : 41 (ECTA)
அவர் கற்பாறையைப் பிளந்தார்; தண்ணீர் பொங்கி வழிந்தது; அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று.
சங்கீதம் 105 : 42 (ECTA)
ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
சங்கீதம் 105 : 43 (ECTA)
அவர் தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.
சங்கீதம் 105 : 44 (ECTA)
அவர் வேற்றினத்தாரின் நாடுகளை அவர்களுக்கு அளித்தார்; மக்களினங்களது உழைப்பின் பயனை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தார்.
சங்கீதம் 105 : 45 (ECTA)
அவர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45

BG:

Opacity:

Color:


Size:


Font: