சங்கீதம் 104 : 1 (ECTA)
படைப்பின் மேன்மை என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
சங்கீதம் 104 : 2 (ECTA)
பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்;
சங்கீதம் 104 : 3 (ECTA)
நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!
சங்கீதம் 104 : 4 (ECTA)
காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். [* எபி 1: 7 ]
சங்கீதம் 104 : 5 (ECTA)
நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது.
சங்கீதம் 104 : 6 (ECTA)
அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது;
சங்கீதம் 104 : 7 (ECTA)
நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது; நீவீர் இடியென முழங்க, அது திகைப்புற்று ஓடியது;
சங்கீதம் 104 : 8 (ECTA)
அது மலைகள்மேல் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அதற்கெனக் குறித்த இடத்தை அடைந்தது;
சங்கீதம் 104 : 9 (ECTA)
அது மீறிச்செல்லாதவாறு அதற்கு எல்லை வகுத்தீர்; பூவுலகை அது மீண்டும் மூடிவிடாதபடி செய்தீர்;
சங்கீதம் 104 : 10 (ECTA)
பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;
சங்கீதம் 104 : 11 (ECTA)
அவை காட்டு விலங்குகள் அனைத்திற்கும் குடிக்கத் தரும்; காட்டுக் கழுதைகள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்;
சங்கீதம் 104 : 12 (ECTA)
நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக் கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன;
சங்கீதம் 104 : 13 (ECTA)
உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.
சங்கீதம் 104 : 14 (ECTA)
கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்; இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்;
சங்கீதம் 104 : 15 (ECTA)
மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும், முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும் மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர்.
சங்கீதம் 104 : 16 (ECTA)
ஆண்டவரின் மரங்களுக்கு — லெபனோனில் அவர் நட்ட கேதுரு மரங்களுக்கு — நிறைய நீர் கிடைக்கின்றது.
சங்கீதம் 104 : 17 (ECTA)
அங்கே பறவைகள் கூடுகள் கட்டுகின்றன; தேவதாரு மரங்களில் கொக்குகள் குடியிருக்கின்றன.
சங்கீதம் 104 : 18 (ECTA)
உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்; கற்பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.
சங்கீதம் 104 : 19 (ECTA)
காலங்களைக் கணிக்க நிலவை நீர் அமைத்தீர்; ஆதவன் தான் மறையும் நேரத்தை அறிவான்.
சங்கீதம் 104 : 20 (ECTA)
இருளை நீர் தோன்றச் செய்யவே, இரவு வருகின்றது; அப்போது, காட்டு விலங்குகள் அனைத்தும் நடமாடும்.
சங்கீதம் 104 : 21 (ECTA)
இளஞ்சிங்கங்கள் இரைக்காகக் கர்ச்சிக்கின்றன; அவை இறைவனிடமிருந்து தங்கள் உணவைத் தேடுகின்றன.
சங்கீதம் 104 : 22 (ECTA)
கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று தம் குகைகளுக்குள் படுத்துக்கொள்கின்றன.
சங்கீதம் 104 : 23 (ECTA)
அப்பொழுது மானிடர் வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்; அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர்.
சங்கீதம் 104 : 24 (ECTA)
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
சங்கீதம் 104 : 25 (ECTA)
இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.
சங்கீதம் 104 : 26 (ECTA)
அங்கே கப்பல்கள் செல்கின்றன; அங்கே துள்ளிவிளையாட லிவியத்தானைப் படைத்தீர்! [* யோபு 41:1; திபா 74:14; எசா 27:1.. ]
சங்கீதம் 104 : 27 (ECTA)
தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன.
சங்கீதம் 104 : 28 (ECTA)
நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன.
சங்கீதம் 104 : 29 (ECTA)
நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
சங்கீதம் 104 : 30 (ECTA)
உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
சங்கீதம் 104 : 31 (ECTA)
ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!
சங்கீதம் 104 : 32 (ECTA)
மண்ணுலகின்மீது அவர் தம் பார்வையைத் திருப்ப, அது நடுங்கும்; மலைகளை அவர் தொட, அவை புகை கக்கும்.
சங்கீதம் 104 : 33 (ECTA)
நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; என்னுயிர் உள்ளவரையிலும் என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன்.
சங்கீதம் 104 : 34 (ECTA)
என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.
சங்கீதம் 104 : 35 (ECTA)
பாவிகள் பூவுலகினின்று ஒழிந்து போவார்களாக! தீயோர்கள் இனி இல்லாது போவார்களாக! என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35