சங்கீதம் 102 : 1 (ECTA)
துன்புறுவோரின் மன்றாட்டு
(துன்புறும் ஒருவர் மனம் தளர்ந்து ஆண்டவரை நோக்கித் தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் மன்றாட்டு)
ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக!
சங்கீதம் 102 : 2 (ECTA)
நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்!
சங்கீதம் 102 : 3 (ECTA)
என் வாழ்நாள்கள் புகையென மறைகின்றன; என் எலும்புகள் தீச்சூழையென எரிகின்றன.
சங்கீதம் 102 : 4 (ECTA)
என் இதயம் புல்லைப்போலத் தீய்ந்து கருகுகின்றது; என் உணவையும் நான் உண்ண மறந்தேன்.
சங்கீதம் 102 : 5 (ECTA)
என் பெருமூச்சின் பேரொலியால், என் எலும்புகள் சதையோடு ஒட்டிக் கொண்டன.
சங்கீதம் 102 : 6 (ECTA)
நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்; பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்.
சங்கீதம் 102 : 7 (ECTA)
நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்; கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன்.
சங்கீதம் 102 : 8 (ECTA)
என் எதிரிகள் நாள்முழுதும் என்னை இழித்துரைக்கின்றனர்; என்னை எள்ளி நகையாடுவோர் என் பெயரைச் சொல்லிப் பிறரைச் சபிக்கின்றனர்.
சங்கீதம் 102 : 9 (ECTA)
சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்; என் மதுக்கலவையோடு கண்ணீரைக் கலக்கின்றேன்.
சங்கீதம் 102 : 10 (ECTA)
ஏனெனில், உமது சினத்திற்கும் சீற்றத்திற்கும் உள்ளானேன்; நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர்.
சங்கீதம் 102 : 11 (ECTA)
மாலை நிழலைப்போன்றது எனது வாழ்நாள்; புல்லென நான் உலர்ந்து போகின்றேன்.
சங்கீதம் 102 : 12 (ECTA)
ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்; உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும்.
சங்கீதம் 102 : 13 (ECTA)
நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்; இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.
சங்கீதம் 102 : 14 (ECTA)
அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்; அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர்.
சங்கீதம் 102 : 15 (ECTA)
வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
சங்கீதம் 102 : 16 (ECTA)
ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
சங்கீதம் 102 : 17 (ECTA)
திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார்.
சங்கீதம் 102 : 18 (ECTA)
இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
சங்கீதம் 102 : 19 (ECTA)
ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.
சங்கீதம் 102 : 20 (ECTA)
அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.
சங்கீதம் 102 : 21 (ECTA)
சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும்.
சங்கீதம் 102 : 22 (ECTA)
அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர்.
சங்கீதம் 102 : 23 (ECTA)
என் வாழ்க்கைப் பாதையின் நடுவில் ஆண்டவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்; அவர் என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.
சங்கீதம் 102 : 24 (ECTA)
நான் உரைத்தது; “என் இறைவா! என் வாழ்நாளின் இடையில் என்னை எடுத்துக் கொள்ளாதேயும்; உமது காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ?
சங்கீதம் 102 : 25 (ECTA)
முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்; விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ! [* எபி 1:10-12.. ]
சங்கீதம் 102 : 26 (ECTA)
அவையோ அழிந்துவிடும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்; அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்; அவையும் மறைந்துபோம். [* எபி 1:10-12.. ]
சங்கீதம் 102 : 27 (ECTA)
நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது. [* எபி 1:10-12.. ]
சங்கீதம் 102 : 28 (ECTA)
உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28