சங்கீதம் 10 : 1 (ECTA)
நீதிக்காக வேண்டல் ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்?
சங்கீதம் 10 : 2 (ECTA)
பொல்லார் தம் இறுமாப்பினால் எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றனர்; அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில் அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக.
சங்கீதம் 10 : 3 (ECTA)
பொல்லார் தம் தீய நாட்டங்களில் தற்பெருமை கொள்கின்றனர்; பேராசையுடையோர் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணிக்கின்றனர்.
சங்கீதம் 10 : 4 (ECTA)
பொல்லார் செருக்கு உள்ளவராதலால் அவரைத் தேடார்; அவர்கள் எண்ணமெல்லாம் ‛கடவுள் இல்லை!
சங்கீதம் 10 : 5 (ECTA)
எம் வழிகள் என்றும் நிலைக்கும்’ என்பதே. உம் தீர்ப்புகளோ மிக மேலானவை; அவர்களின் அறிவுக்கு எட்டாதவை. தம் பகைவர் அனைவரையும் பார்த்து அவர்கள் நகைக்கின்றனர்.
சங்கீதம் 10 : 6 (ECTA)
‛எவராலும் என்னை அசைக்க முடியாது; எந்தத் தலைமுறையிலும் எனக்குக் கேடு வராது’ என்று அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.
சங்கீதம் 10 : 7 (ECTA)
அவர்களது வாய் சாபமும் கபடும் கொடுமையும் நிறைந்தது; அவர்களது நாவினடியில் கேடும் தீங்கும் இருக்கின்றன. [* உரோ 3:14.. ]
சங்கீதம் 10 : 8 (ECTA)
ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்; சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்; திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.
சங்கீதம் 10 : 9 (ECTA)
குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள் மறைவில் பதுங்கியிருக்கின்றனர்; எளியோரைப் பிடிப்பதற்காகவே அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்; தம் வலையில் சிக்கவைத்து இழுத்துச் செல்கின்றனர்.
சங்கீதம் 10 : 10 (ECTA)
அவர்கள் எளியோரை நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்; அவர்களது கொடிய வலிமையால் ஏழைகள் வீழ்த்தப்படுகின்றனர்.
சங்கீதம் 10 : 11 (ECTA)
‛இறைவன் மறந்துவிட்டார்; தம் முகத்தை மூடிக்கொண்டார்; என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்’ என்று பொல்லார் தமக்குள் சொல்லிக் கொள்கின்றனர்.
சங்கீதம் 10 : 12 (ECTA)
ஆண்டவரே, எழுந்தருளும்!
இறைவா, எமது ஆற்றலை வெளிப்படுத்தும்! எளியோரை மறந்துவிடாதேயும்.
சங்கீதம் 10 : 13 (ECTA)
பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்? அவர் தம்மை விசாரணை செய்யமாட்டாரென்று அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?
சங்கீதம் 10 : 14 (ECTA)
ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்; கேட்டையும் துயரத்தையும் பார்த்து, உதவி செய்யக் காத்திருக்கின்றீர்; திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்; அனாதைக்கு நீரே துணை.
சங்கீதம் 10 : 15 (ECTA)
பொல்லார் மற்றும் தீயோர் கைகளை முறித்துவிடும்; அவர்களது பொல்லாங்கைத் தேடிக் கண்டுபிடித்து, அது அற்றுப்போகச் செய்யும்.
சங்கீதம் 10 : 16 (ECTA)
ஆண்டவர் என்றுமுள அரசர்; அவரது நிலத்தினின்று வேற்றினத்தார் அகன்று விடுவர்.
சங்கீதம் 10 : 17 (ECTA)
ஆண்டவரே, எளியோரின் விருப்பத்தை நீர் நிறைவேற்றுகின்றீர்; அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர்.
சங்கீதம் 10 : 18 (ECTA)
நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் நீதி வழங்குகின்றீர்; மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18