நீதிமொழிகள் 8 : 1 (ECTA)
ஞானத்திற்குப் புகழுரை ஞானம் அழைக்கிறதன்றோ? மெய்யறிவு குரல் எழுப்புகிறதன்றோ? [* நீமொ 1:20- 21 ]
நீதிமொழிகள் 8 : 2 (ECTA)
வழியருகிலுள்ள உயரமான இடத்திலும், தெருக்கள் கூடும் இடத்திலும் அது நிற்கின்றது. [* நீமொ 1:20- 21 ]
நீதிமொழிகள் 8 : 3 (ECTA)
நகருக்குள் நுழையும் வாயிலருகே, நகர வாயிலை நெருங்கும் இடத்திலே, அது நின்று கொண்டு இவ்வாறு உரத்துச் சொல்லுகிறது: [* நீமொ 1:20- 21 ]
நீதிமொழிகள் 8 : 4 (ECTA)
மானிடரே! உங்களுக்கே நான் இதை உரைக்கின்றேன்; ஒவ்வொரு மனிதருக்கும் சொல்லுகின்றேன்.
நீதிமொழிகள் 8 : 5 (ECTA)
முன்மதியற்றோரே! விவேகமாயிருக்க கற்றுக்கொள்ளுங்கள்; மதிகேடரே! உணர்வைப் பெறுங்கள்.
நீதிமொழிகள் 8 : 6 (ECTA)
நான் சொல்வதைக் கவனியுங்கள்; மிகத் தெளிவாகச் சொல்கின்றேன்; நான் ஒளிவு மறைவின்றிக் கூறுகின்றேன்.
நீதிமொழிகள் 8 : 7 (ECTA)
ஏனெனில், என் வாய் உண்மையே பேசும்; பொல்லாங்கான பேச்சு என் நாவுக்கு அருவருப்பு.
நீதிமொழிகள் 8 : 8 (ECTA)
என் வார்த்தைகளெல்லாம் நேர்மையானவை; உருட்டும் புரட்டும் அவற்றில் இல்லை.
நீதிமொழிகள் 8 : 9 (ECTA)
உணர்வாற்றல் உள்ளோர்க்கு அவையாவும் மிகத் தெளிவு; அறிவை அடைந்தோர்க்கு அவை நேர்மையானவை.
நீதிமொழிகள் 8 : 10 (ECTA)
வெள்ளியைவிட மேலாக என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்; பசும் பொன்னைவிட மேலாக அறிவை விரும்புங்கள்.
நீதிமொழிகள் 8 : 11 (ECTA)
பவளத்திலும் ஞானமே சிறந்தது; நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.
நீதிமொழிகள் 8 : 12 (ECTA)
நானே ஞானம்; நான் விவேகத்தோடு வாழ்கின்றேன்; அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளேன்.
நீதிமொழிகள் 8 : 13 (ECTA)
ஆண்டவருக்கு அஞ்சுவது தீமையைப் பகைக்கச் செய்யும்; ஆணவத்தையும் இறுமாப்பையும் தீமையையும் உருட்டையும் புரட்டையும் நான் வெறுக்கின்றேன்.
நீதிமொழிகள் 8 : 14 (ECTA)
திட்டம் இடுவதும் நானே; இட்டதைச் செய்வதும் நானே. உணர்வும் நானே; வலிமையும் எனதே.
நீதிமொழிகள் 8 : 15 (ECTA)
அரசர் ஆட்சி செலுத்துவதும் என்னால்; ஆட்சியாளர் சட்டம் இயற்றுவதும் என்னால்.
நீதிமொழிகள் 8 : 16 (ECTA)
அதிகாரிகள் ஆளுவதும் என்னாலே; உலக நீதிபதிகள் அனைவரும் உண்மைத் தீர்ப்பு வழங்குவதும் என்னாலே,
நீதிமொழிகள் 8 : 17 (ECTA)
எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
நீதிமொழிகள் 8 : 18 (ECTA)
என்னிடம் செல்வமும் மேன்மையும், அழியாப் பொருளும் அனைத்து நலமும் உண்டு.
நீதிமொழிகள் 8 : 19 (ECTA)
என்னை அடைந்தவர்கள் பெறும் பயன் பசும்பொன்னைவிடச் சிறந்தது; என்னை அடைந்தவர்களுக்குக் கிடைக்கும் விளைச்சல் தூய வெள்ளியை விட மேலானது.
நீதிமொழிகள் 8 : 20 (ECTA)
நான் நேர்மையான வழியைப் பின்பற்றுகின்றேன்; என் பாதை முறையான பாதை.
நீதிமொழிகள் 8 : 21 (ECTA)
என்மீது அன்புகூர்வோருக்குச் செல்வம் வழங்குகின்றேன்; அவர்களுடைய களஞ்சியங்களை நிரப்புகின்றேன்.
நீதிமொழிகள் 8 : 22 (ECTA)
ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார். [* திவெ 3: 14 ; ‘வழியின் தொடக்கம்’ என்பது எபிரேய பாடம். ]
நீதிமொழிகள் 8 : 23 (ECTA)
தொடக்கத்தில், பூவுலகு உண்டாகு முன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்.
நீதிமொழிகள் 8 : 24 (ECTA)
கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை.
நீதிமொழிகள் 8 : 25 (ECTA)
மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்.
நீதிமொழிகள் 8 : 26 (ECTA)
அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.
நீதிமொழிகள் 8 : 27 (ECTA)
வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்த போது, நான் அங்கே இருந்தேன்.
நீதிமொழிகள் 8 : 28 (ECTA)
உயரத்தில் மேகங்களை அவர் அமைத்த போது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன்.
நீதிமொழிகள் 8 : 29 (ECTA)
அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது,
நீதிமொழிகள் 8 : 30 (ECTA)
நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய்* இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். [* ‘செல்லப்பிள்ளையாய்’ என்றும் பொருள்படும்.. ]
நீதிமொழிகள் 8 : 31 (ECTA)
அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.
நீதிமொழிகள் 8 : 32 (ECTA)
எனவே, பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்!
நீதிமொழிகள் 8 : 33 (ECTA)
நற்பயிற்சி பெற்று ஞானத்தை அடையுங்கள்; அதைப் புறக்கணியாதீர்கள்.
நீதிமொழிகள் 8 : 34 (ECTA)
என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்!
நீதிமொழிகள் 8 : 35 (ECTA)
என்னைத் தேடி அடைவோர் வாழ்வடைவர்; ஆண்டவரின் கருணை அவர்களுக்குக் கிடைக்கும்.
நீதிமொழிகள் 8 : 36 (ECTA)
என்னைத் தேடி அடையாதோர் தமக்குக் கேடு வருவித்துக் கொள்வர்; என்னை வெறுக்கும் அனைவரும் சாவை விரும்புவோர் ஆவர்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36