நீதிமொழிகள் 29 : 1 (ECTA)
பன்முறை கண்டிக்கப்பட்டும் ஒருவர் பிடிவாதமுள்ளவராகவே இருந்தால், அவர் ஒருநாள் திடீரென அழிவார்; மீண்டும் தலைதூக்கமாட்டார். [* யாக் 4:13-16.. ]
நீதிமொழிகள் 29 : 2 (ECTA)
நேர்மையானவர்கள் ஆட்சி செலுத்தினால், குடிமக்கள் மகிழ்ச்சியுடனிருப்பார்கள்; பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
நீதிமொழிகள் 29 : 3 (ECTA)
ஞானத்தை விரும்புவோர் தம் தந்தையை மகிழ்விப்பார்; விலைமகளின் உறவை விரும்பு கிறவர் சொத்தை அழித்துவிடுவார்.
நீதிமொழிகள் 29 : 4 (ECTA)
நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும்; அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.
நீதிமொழிகள் 29 : 5 (ECTA)
தமக்கு அடுத்திருப்போரை அவர்கள் எதிரிலேயே அளவுமீறிப் புகழ்கிறவர் அவரைக் கண்ணியில் சிக்கவைக்கிறார்.
நீதிமொழிகள் 29 : 6 (ECTA)
தீயவர் தம் தீவினையில் சிக்கிக் கொள்வர்; நேர்மையாளரோ மகிழ்ந்து களிகூர்வர்.
நீதிமொழிகள் 29 : 7 (ECTA)
ஏழைகளின் உரிமைகளைக் காப்பதில் நேர்மையாளர் அக்கறை கொள்வர்; இவ்வாறு அக்கறைகொள்வது பொல்லருக்குப் புரியாது.
நீதிமொழிகள் 29 : 8 (ECTA)
வன்முறையாளர் ஊரையே கொளுத்தி விடுவர்; ஞானமுள்ளவர்களோ மக்களின் சினத்தைத் தணிப்பார்கள்.
நீதிமொழிகள் 29 : 9 (ECTA)
போக்கிரியின்மீது ஞானமுள்ளவர் வழக்குத் தொடுப்பாராயின், அவர் சீறுவார், இகழ்ச்சியோடு சிரிப்பார், எதற்கும் ஒத்துவரமாட்டார்.
நீதிமொழிகள் 29 : 10 (ECTA)
தீங்கறியாதவனைக் கொலைகாரர் பகைப்பர்; நேர்மையானவர்களோ அவருடைய உயிரைக் காக்க முயல்வார்கள்.
நீதிமொழிகள் 29 : 11 (ECTA)
அறிவில்லாதவர் தம் சினத்தை அடக்க மாட்டார்; ஞானமுள்ளவரோ பொறுமையோ டிருப்பதால், அவர் சினம் ஆறும்.
நீதிமொழிகள் 29 : 12 (ECTA)
ஆட்சி செலுத்துகிறவர் பொய்யான செய்திகளுக்குச் செவி கொடுப்பாராயின், அவருடைய ஊழியரெல்லாரும் தீயவராவர்.
நீதிமொழிகள் 29 : 13 (ECTA)
ஏழைக்கும் அவரை ஒடுக்குவோருக்கும் பொதுவானது ஒன்று உண்டு; இருவருக்கும் உயிரளிப்பவர் ஆண்டவரே.
நீதிமொழிகள் 29 : 14 (ECTA)
திக்கற்றவர்களின் வழக்கில் அரசர் நியாயமான தீர்ப்பு வழங்குவாராயின், அவரது ஆட்சி பல்லாண்டு நீடித்திருக்கும்.
நீதிமொழிகள் 29 : 15 (ECTA)
பிரம்பும் கண்டித்துத் திருத்துதலும் ஞானத்தைப் புகட்டும்; தம் விருப்பம் போல் நடக்கவிடப்பட்ட பிள்ளைகள் தாய்க்கு வெட்கக் கேட்டை வருவிப்பர்.
நீதிமொழிகள் 29 : 16 (ECTA)
பொல்லாரின் ஆட்சி தீவினையைப் பெருக்கும்; அவர்களது வீழ்ச்சியை நல்லார் காண்பர்.
நீதிமொழிகள் 29 : 17 (ECTA)
உன் பிள்ளையைத் தண்டித்துத் திருத்து; அவர் உனக்கு ஆறுதலளிப்பார், மனத்தை மகிழ்விப்பார்.
நீதிமொழிகள் 29 : 18 (ECTA)
எங்கே இறைவெளிப்பாடு இல்லையோ, அங்கே குடிமக்கள் கட்டுங்கடங்காமல் திரி வார்கள்; நீதி போதனையின்படி நடப்பவர் நற்பேறு பெற்று மகிழ்வார்.
நீதிமொழிகள் 29 : 19 (ECTA)
வெறும் வார்த்தைகளினால் வேலைக் காரர் திருந்தமாட்டார்; அவை அவருக்கு விளங்கினாலும் அவற்றைப் பொருட்படுத்த மாட்டார்.
நீதிமொழிகள் 29 : 20 (ECTA)
பேசத் துடிதுடித்துக்கொண்டிருப்பவரை நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.
நீதிமொழிகள் 29 : 21 (ECTA)
அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால், அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார்.
நீதிமொழிகள் 29 : 22 (ECTA)
எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்.
நீதிமொழிகள் 29 : 23 (ECTA)
இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்.
நீதிமொழிகள் 29 : 24 (ECTA)
திருடனுக்குக் கூட்டாளியாயிருப்பவர் தம்மையே அழித்துக் கொள்கிறார்; அவர் உண்மையைச் சொன்னால் தண்டிக்கப்படுவார்; சொல்லாவிடில், கடவுளின் சாபம் அவர்மீது விழும்.
நீதிமொழிகள் 29 : 25 (ECTA)
பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார்; ஆண்டவரை நம்புகிற வருக்கோ அடைக்கலம் கிடைக்கும்.
நீதிமொழிகள் 29 : 26 (ECTA)
பலர் ஆட்சியாளரின் தயவை நாடுவதுண்டு; ஆனால் எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ?
நீதிமொழிகள் 29 : 27 (ECTA)
நேர்மையற்றவரை நல்லார் அருவருப்பர்; நேரிய வழி நடப்போரை பொல்லார் அருவருப்பர்.
❮
❯