நீதிமொழிகள் 21 : 1 (ECTA)
மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப்போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார்.
நீதிமொழிகள் 21 : 2 (ECTA)
மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
நீதிமொழிகள் 21 : 3 (ECTA)
பலிசெலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும்; நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.
நீதிமொழிகள் 21 : 4 (ECTA)
மேட்டிமையான பார்வை, இறுமாப்புக்கொண்ட உள்ளம் - இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும்; பாவங்கள்.
நீதிமொழிகள் 21 : 5 (ECTA)
திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.
நீதிமொழிகள் 21 : 6 (ECTA)
ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்துவிடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும்.
நீதிமொழிகள் 21 : 7 (ECTA)
பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களையே வாரிக் கொண்டுபோகும்.
நீதிமொழிகள் 21 : 8 (ECTA)
குற்றம் செய்பவர் வழி கோணலானது; குற்றமற்றவர் செய்கை நேர்மையானது.
நீதிமொழிகள் 21 : 9 (ECTA)
மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட, குடிசை வாழ்க்கையே மேல்.
நீதிமொழிகள் 21 : 10 (ECTA)
பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை.
நீதிமொழிகள் 21 : 11 (ECTA)
ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும் போது அவர் மேலும் அறிவுடையவராவார்.
நீதிமொழிகள் 21 : 12 (ECTA)
நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்; அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்துவிடுகிறார்.
நீதிமொழிகள் 21 : 13 (ECTA)
ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக்கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவி கொடுக்கமாட்டார்.
நீதிமொழிகள் 21 : 14 (ECTA)
மறைவாக நன்கொடை கொடுத்து சினத்தைத் தணிப்பார்கள்; மடியில் கைக்கூலி திணித்துச் சீற்றத்தை ஆற்றுவார்கள்.
நீதிமொழிகள் 21 : 15 (ECTA)
நீதி நிலைநாட்டுவது நேர்மையானவருக்கு மகிழ்ச்சியளிக்கும்; தீமை செய்வோருக்கோ அது திகிலுண்டாக்கும்.
நீதிமொழிகள் 21 : 16 (ECTA)
விவேகம் காட்டும் வழியை விட்டு விலகிச் செல்பவர், செத்தாரிடையே தங்க விரைபவர்.
நீதிமொழிகள் 21 : 17 (ECTA)
ஒய்யாரமான வாழ்க்கையை நாடுகிறவர் ஏழையாவார்; மதுவையும் நறுமணப் பொருள்களையும் விரும்புகிறவர் செல்வராகமாட்டார்.
நீதிமொழிகள் 21 : 18 (ECTA)
நல்லவருக்குப் பொல்லாங்கு செய்யப் பார்ப்பவர் தாமே அவருக்குப் பதிலாள் ஆகிவிடுவார்; நேர்மையானவரை வஞ்சிக்கப் பார்ப்பவர் அவருக்குப் பதிலாகத் தாமே வஞ்சனைக்கு ஆளாவார்.
நீதிமொழிகள் 21 : 19 (ECTA)
நச்சரிப்பவளும் சிடுசிடுப்பவளுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலை நிலத்தில் தனியே வாழ்வதே மேல்.
நீதிமொழிகள் 21 : 20 (ECTA)
ஞானமுள்ளவர் வீட்டில் செல்வமும் அரும்பொருள்களும் இருக்கும்; மதிகேடர் தம் செல்வத்தைக் கரைத்துவிடுவார்.
நீதிமொழிகள் 21 : 21 (ECTA)
நேர்மையையும் இரக்கத்தையும் கடைப்பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்.
நீதிமொழிகள் 21 : 22 (ECTA)
வீரர் நிறைந்த பட்டணத்தையும் நல்வாழ்வையும் ஞானமுள்ளவர் கைப்பற்றுவார்; அவர்கள் நம்பியிருந்த அரணையும் இடித்துக் தள்ளுவார்.
நீதிமொழிகள் 21 : 23 (ECTA)
தம் வாயையும் நாவையும் காப்பவர், இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.
நீதிமொழிகள் 21 : 24 (ECTA)
ஏளனம் செய்யும் செருக்குடையோரின் பெயர் இறுமாப்பு; அளவு கடந்த பெருமையுடன் நடப்பதே அவர் போக்கு.
நீதிமொழிகள் 21 : 25 (ECTA)
சோம்பேறியின் அவா அவரைக் கொல்லும்; ஏனெனில், அவர் கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.
நீதிமொழிகள் 21 : 26 (ECTA)
அவர் நாள் முழுதும் பிறர் பொருளுக்காக ஏக்கங்கொண்டிருப்பார்; ஆனால் சான்றோர் தம் பொருளை இல்லையென்னாது வழங்குவர்.
நீதிமொழிகள் 21 : 27 (ECTA)
பொல்லார் செலுத்தும் பலி அருவருக்கத்தக்கது; தீய நோக்கத்தோடு அவர்கள் செலுத்தும் பலி இன்னும் அருவருக்கத்தக்கதன்றோ?
நீதிமொழிகள் 21 : 28 (ECTA)
பொய்ச்சான்று கூறுபவன் கெட்டழிவான்; உன்னிப்பாய்க் கேட்பவன் பேச்சோ என்றைக்கும் ஏற்புடையதாகும்.
நீதிமொழிகள் 21 : 29 (ECTA)
பொல்லார் முகத்தில் போலி வீரம் காணப்படும்; நேர்மையானவர் தம் நடத்தை சீரானது என்னும் உறுதியுடனிருப்பார்.
நீதிமொழிகள் 21 : 30 (ECTA)
ஆண்டவரின் எதிரில் நிற்கக் கூடிய ஞானமுமில்லை, விவேகமுமில்லை, அறிவுரையுமில்லை.
நீதிமொழிகள் 21 : 31 (ECTA)
போர் நாளுக்கென்று குதிரையை ஆயத்தமாக வைத்திருக்கலாம்; ஆனால் வெற்றி கிடைப்பது ஆண்டவராலேயே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

BG:

Opacity:

Color:


Size:


Font: