நீதிமொழிகள் 19 : 1 (ECTA)
முறைகேடாய் நடக்கும் செல்வரை விட மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.
நீதிமொழிகள் 19 : 2 (ECTA)
எண்ணிப் பாராமல் செயலில் இறங்கு வதால் பயனில்லை; பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.
நீதிமொழிகள் 19 : 3 (ECTA)
மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர்; ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்.
நீதிமொழிகள் 19 : 4 (ECTA)
பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர்; ஏழைக்கு இருக்கும் ஒரே நண்பரும் அவரை விட்டுப் பிரிவார்.
நீதிமொழிகள் 19 : 5 (ECTA)
பொய்ச் சான்று சொல்பவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரையே கூறுபவர் தப்பித்துக் கொள்ளமாட்டார்.
நீதிமொழிகள் 19 : 6 (ECTA)
வள்ளலின் தயவை நாடி வருவோர் பலர்; நன்கொடையாளருக்கு எல்லாருமே நண்பர்.
நீதிமொழிகள் 19 : 7 (ECTA)
வறியவரை அவருடைய உடன்பிறந்தாரே வெறுப்பர்; அவருடைய நண்பர் அவரைவிட்டு அகலாதிருப்பரோ? அவர் கெஞ்சி வேண்டினாலும் அவர்கள் ஓடிவிடுவார்கள்.
நீதிமொழிகள் 19 : 8 (ECTA)
ஞானத்தைப் பெறுதலே உண்மையான தன்னலமாகும்; மெய்யறிவைப் பேணிக்காப்பவர் நன்மை அடைவார்.
நீதிமொழிகள் 19 : 9 (ECTA)
பொய்ச் சான்று சொல்பவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரை கூறுபவர் அழிந்து போவார்.
நீதிமொழிகள் 19 : 10 (ECTA)
அரண்மனை வாழ்வு அறிவிலிக்கு அடுத்ததல்ல; மேலானோரை ஆளும் பதவி அடிமைக்குச் சற்றும் ஏற்றதல்ல.
நீதிமொழிகள் 19 : 11 (ECTA)
விவேகமுடையோர் எளிதில் சினமடையார்; குற்றம் பாராதிருத்தல் நன்மதிப்பைத் தரும்.
நீதிமொழிகள் 19 : 12 (ECTA)
அரசரின் சீற்றம் சிங்கத்தின் முழக்கம் போன்றது; அவர் காட்டும் கருணை பயிர்மீது பெய்யும் பருவ மழைக்கு ஒப்பாகும்.
நீதிமொழிகள் 19 : 13 (ECTA)
மதிகெட்ட மகனால் அவன் தந்தைக்குக் கேடு வரும்; மனைவியின் நச்சரிப்பு ஓட்டைக் கூரையினின்று ஓயாது ஒழுகும் நீர் போன்றது.
நீதிமொழிகள் 19 : 14 (ECTA)
வீடும் சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்; ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை.
நீதிமொழிகள் 19 : 15 (ECTA)
சோம்பல் ஒருவரை தூங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்; சோம்பேறி பசியால் வருந்துவார்.
நீதிமொழிகள் 19 : 16 (ECTA)
திருக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்; ஆண்ட வருடைய வழிகளைக் கவனியாது நடப்பவர் அழிந்து போவார்.
நீதிமொழிகள் 19 : 17 (ECTA)
ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்து விடுவார்.
நீதிமொழிகள் 19 : 18 (ECTA)
மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே அவனைக் கண்டித்துத் திருத்து; இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு நீ காரணமாயிருப்பாய்.
நீதிமொழிகள் 19 : 19 (ECTA)
கடுஞ்சினங்கொள்பவர் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும். இக்கட்டினின்று அவரை விடுவிப்பாயானால், மீண்டும் அவ்வாறே செய்ய வேண்டியிருக்கும். [* ‘அரண்சூழ் நகரைக் கைவசப்படுத்துவதைவிட, சினங்கொண்ட சகோதரனை தன் வசப்படுத்துவது கடினம்; அவனது பகைமை கோட்டைத் தாழ்ப்பாள்களைப் போன்றதாகும்’ என்பது வேறு பாடம்.. ]
நீதிமொழிகள் 19 : 20 (ECTA)
அறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்; பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.
நீதிமொழிகள் 19 : 21 (ECTA)
மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்; ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்துநிற்கும்.
நீதிமொழிகள் 19 : 22 (ECTA)
நற்பண்பாளர் வாக்குப் பிறழாமையை நாடுவர். பொய்யராயிருப்பதைவிட ஏழையா யிருப்பதே மேல்.
நீதிமொழிகள் 19 : 23 (ECTA)
ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்; அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்; தீங்கும் அவரை அணுகாது.
நீதிமொழிகள் 19 : 24 (ECTA)
சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போகச் சோம்பலடைவார்.
நீதிமொழிகள் 19 : 25 (ECTA)
ஏளனம் செய்வோரை அடி; அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவரைக் கடிந்துகொள், அவர் மேலும் அறிவுடையவராவார்.
நீதிமொழிகள் 19 : 26 (ECTA)
தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக்கேட்டையும் இழிவையும் வருவித்துக்கொள்வான்.
நீதிமொழிகள் 19 : 27 (ECTA)
பிள்ளாய், நல்லுரை கேட்பதை நிறுத்தாதே; நிறுத்தினால் அறிவுதரும் நன்மொழிகளைப் புறக்கணிக்கிறவன் ஆவாய்.
நீதிமொழிகள் 19 : 28 (ECTA)
தீக்குணமுள்ள சாட்சி நியாயத்தை மதிக்காதவர். பொல்லாரின் சான்று குற்றத்தைப் பெருகச் செய்யும்.
நீதிமொழிகள் 19 : 29 (ECTA)
இகழ்வாருக்குத் தண்டனை காத்திருக் கிறது; முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு காத் திருக்கிறது.
❮
❯