நீதிமொழிகள் 15 : 1 (ECTA)
கனிவான மறுமொழி கடுஞ்சினத் தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்..
நீதிமொழிகள் 15 : 2 (ECTA)
ஞானமுள்ளவர்களின் நா அறிவை வழங்கும்; மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும்.
நீதிமொழிகள் 15 : 3 (ECTA)
ஆண்டவருடைய கண்கள் எங்கும் நோக்கும்; நல்லாரையும் பார்க்கும், பொல்லா ரையும் பார்க்கும்.
நீதிமொழிகள் 15 : 4 (ECTA)
சாந்தப்படுத்தும் சொல், வாழ்வளிக்கும் மரம் போன்றது; வஞ்சகப் பேச்சாலோ மனமுடைந்துபோகும்.
நீதிமொழிகள் 15 : 5 (ECTA)
தன் தந்தையின் நல்லுரையைப் புறக்கணிப்பவர் மூடர்; கண்டிப்புரையை ஏற்பவர் விவேகமுள்ளவர்.
நீதிமொழிகள் 15 : 6 (ECTA)
நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்; பொல்லாரின் வருவாயால் விளைவது தொல்லையே.
நீதிமொழிகள் 15 : 7 (ECTA)
ஞானிகளின் பேச்சு அறிவை வளர்க்கும் தன்மையது; மதிகேடரின் உள்ளம் அத் தகையதல்ல.
நீதிமொழிகள் 15 : 8 (ECTA)
பொல்லார் செலுத்தும் பலி ஆண்டவருக்கு அருவருப்பைத் தரும்; நேர்மையானவர்களின் மன்றாட்டு அவருக்கு உகந்ததாயிருக்கும்.
நீதிமொழிகள் 15 : 9 (ECTA)
பொல்லாரின் செயல்கள் ஆண்டவருக்கு அருவருப்பு; நீதியைப் பின்பற்றுவோரிடம் அவர் அன்புகொள்கிறார்.
நீதிமொழிகள் 15 : 10 (ECTA)
நெறி தவறிச் செல்பவருக்குத் தண்டனை கடுமையாயிருக்கும்; கண்டிப்பை வெறுப்பவர் மரணம் அடைவார்.
நீதிமொழிகள் 15 : 11 (ECTA)
பாதாளமும் படுகுழியுமே ஆண்டவர் பார்வையில் இருக்க, மனிதரின் உள்ளம் அவர் பார்வைக்கு மறைவாயிருக்குமா?
நீதிமொழிகள் 15 : 12 (ECTA)
ஏளனம் செய்வோர் தம்மைக் கடிந்து கொள்பவரை விரும்பார்; ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்; [* நீமொ 16:25.. ]
நீதிமொழிகள் 15 : 13 (ECTA)
அகமகிழ்ச்சியால் முகம் மலரும்; மனத் துயரால் உள்ளம் உடையும்.
நீதிமொழிகள் 15 : 14 (ECTA)
விவேகமுள்ளவர் மனம் அறிவை நாடும்; மதிகேடர் வாய்க்கு மடமையே உணவு.
நீதிமொழிகள் 15 : 15 (ECTA)
ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே; மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே.
நீதிமொழிகள் 15 : 16 (ECTA)
பெருஞ்செல்வமும் அதனோடு கவ லையும் இருப்பதைவிட, சிறுதொகையும் அதனோடு ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.
நீதிமொழிகள் 15 : 17 (ECTA)
பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்.
நீதிமொழிகள் 15 : 18 (ECTA)
எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்; பொறுமை உடையவர் சண்டையைத் தீர்த்து வைப்பார்.
நீதிமொழிகள் 15 : 19 (ECTA)
சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே; சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்.
நீதிமொழிகள் 15 : 20 (ECTA)
ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்; அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.
நீதிமொழிகள் 15 : 21 (ECTA)
மூடன் தன் மடமை குறித்து மகிழ்ச்சி யடைகின்றான்; மெய்யறிவுள்ளவன் நேர்மை யானதைச் செய்வான்.
நீதிமொழிகள் 15 : 22 (ECTA)
எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்; பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.
நீதிமொழிகள் 15 : 23 (ECTA)
தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்; காலமும் வேளையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது.
நீதிமொழிகள் 15 : 24 (ECTA)
விவேகமுள்ளவன் செல்லும் பாதை பாதாளத்திற்குச் செல்லும் பாதை அல்ல; அது வாழ்விற்குச் செல்லும் பாதையாகும்.
நீதிமொழிகள் 15 : 25 (ECTA)
இறுமாப்புள்ளவர் வீட்டை ஆண்டவர் இடித்துத் தள்ளுவார்; கைம்பெண்ணினது நிலத்தின் எல்லைகளைப் பாதுகாப்பார்.
நீதிமொழிகள் 15 : 26 (ECTA)
தீயோரின் எண்ணங்களை ஆண்டவர் அருவருக்கிறார்; மாசற்றோரின் சொற்களே உவப்பளிப்பவை.
நீதிமொழிகள் 15 : 27 (ECTA)
வன்முறையில் செல்வம் சேர்ப்பவர் தம் குடும்பத்திற்குத் தொல்லை வருவிப்பார்; கைக்கூலி வாங்க மறுப்பவர் நீடித்து வாழ்வார்.
நீதிமொழிகள் 15 : 28 (ECTA)
சான்றோர் எண்ணிப் பார்த்து மறுமொழி கூறுவர்; பொல்லாரின் வாய் தீய சொற்களைப் பொழியும்.
நீதிமொழிகள் 15 : 29 (ECTA)
ஆண்டவர் பொல்லாருக்கு நெடுந் தொலையில் இருக்கிறார்; தமக்கு அஞ்சி நடப்போரின் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறார்.
நீதிமொழிகள் 15 : 30 (ECTA)
இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்; நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும்.
நீதிமொழிகள் 15 : 31 (ECTA)
நலம் தரும் அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர், ஞானிகளோடு உறவு கொண்டி ருப்பதை விரும்புவார்.
நீதிமொழிகள் 15 : 32 (ECTA)
கண்டிக்கப்படுவதைப் புறக்கணிக்கிறவர் தமக்கே கேடு வருவித்துக் கொள்கிறார்; அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர் உணர்வை அடைவார்.
நீதிமொழிகள் 15 : 33 (ECTA)
ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி; மேன்மை அடையத் தாழ்மையே வழி.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33