நீதிமொழிகள் 13 : 1 (ECTA)
ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வான்; இறுமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான்.
நீதிமொழிகள் 13 : 2 (ECTA)
நல்லோர் தம் சொற்களின் பலனான நல்லுணவை உண்கிறார்; வஞ்சகச் செயல்களே வஞ்சகர் உண்ணும் உணவு.
நீதிமொழிகள் 13 : 3 (ECTA)
நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்; நாவைக் காவாதவன் கெட்டழிவான்.
நீதிமொழிகள் 13 : 4 (ECTA)
சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள், உணவோ இல்லை; ஊக்கமுள்ளவரோ உண்டு கொழுக்கிறார்.
நீதிமொழிகள் 13 : 5 (ECTA)
நல்லார் பொய்யுரையை வெறுப்பர்; பொல்லாரோ வெட்கக்கேடாகவும் இழிவாகவும் நடந்துகொள்வர்.
நீதிமொழிகள் 13 : 6 (ECTA)
நேர்மையாக நடப்போரை நீதி பாதுகாக்கும்; பொல்லாரை அவர்களின் பாவம் கீழே வீழ்த்தும்.
நீதிமொழிகள் 13 : 7 (ECTA)
ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு; மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு.
நீதிமொழிகள் 13 : 8 (ECTA)
அச்சுறுத்தப்படும்போது செல்வர் தம் பொருளைத் தந்து தம் உயிரை மீட்டுக்கொள்வர். ஏழையோ அச்சுறுத்துதலுக்கு அஞ்சான்.
நீதிமொழிகள் 13 : 9 (ECTA)
சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும்; பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.
நீதிமொழிகள் 13 : 10 (ECTA)
மூடன் தன் இறுமாப்பினாலே சண்டை மூட்டுவான்; பிறருடைய அறிவுரைகளை ஏற்போரிடம் ஞானம் காணப்படும்.
நீதிமொழிகள் 13 : 11 (ECTA)
விரைவில் வரும் செல்வம் விரைவில் கரையும்; சிறிது சிறிதாய்ச் சேர்ப்பவனின் செல்வமே பெருகும்.
நீதிமொழிகள் 13 : 12 (ECTA)
நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச் சோர்வை உண்டாக்கும்; விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்.
நீதிமொழிகள் 13 : 13 (ECTA)
அறிவுரையைப் புறக்கணிக்கிறவர் அழிவுறுவார்; போதிக்கிறவரின் சொல்லை மதிக்கிறவர் பயனடைவார்.
நீதிமொழிகள் 13 : 14 (ECTA)
ஞானமுள்ளவரது அறிவுரை வாழ் வளிக்கும் ஊற்றாகும்; அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் கண்ணிகளிலிருந்து தப்புவிக்கும்.
நீதிமொழிகள் 13 : 15 (ECTA)
நல்லறிவு மக்களின் நல்லெண்ணத்தை வருவிக்கும்; நம்பிக்கைத் துரோகமோ கேடு அடையச் செய்யும்.
நீதிமொழிகள் 13 : 16 (ECTA)
கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துகொள்வார்; மூடர் தன் மடமையை விளம்பரப்படுத்துவார்.
நீதிமொழிகள் 13 : 17 (ECTA)
தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார்; நல்ல தூதரோ அமைதி நிலவச் செய்வார்.
நீதிமொழிகள் 13 : 18 (ECTA)
நல்லுரையைப் புறக்கணிப்பவர் வறுமையும் இகழ்ச்சியும் அடைவார்; கண்டிப்புரையை ஏற்பவரோ புகழடைவார்.
நீதிமொழிகள் 13 : 19 (ECTA)
நினைத்தது கிடைப்பின் மனத்திற்கு இன்பம்; மூடர் தம் தீமையை வெறுக்காதிருப்பதும் இதனாலேயே.
நீதிமொழிகள் 13 : 20 (ECTA)
ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவர்; மூடரோடு நட்புக் கொள்கிறவர் துன்புறுவார்.
நீதிமொழிகள் 13 : 21 (ECTA)
பாவிகளைத் தீங்கு பின்தொடரும்; கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு நற்பேறு கிட்டும்.
நீதிமொழிகள் 13 : 22 (ECTA)
நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்; பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும்.
நீதிமொழிகள் 13 : 23 (ECTA)
தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்; ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.
நீதிமொழிகள் 13 : 24 (ECTA)
பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.
நீதிமொழிகள் 13 : 25 (ECTA)
கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு வயிறார உணவு கிடைக்கும்; பொல்லாரின் வயிறோ பசியால் வாடும்.
❮
❯