எண்ணாகமம் 24 : 1 (ECTA)
இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்டபோது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார்.
எண்ணாகமம் 24 : 2 (ECTA)
பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது.
எண்ணாகமம் 24 : 3 (ECTA)
அவர் திருஉரையாகக் கூறியது: “பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
எண்ணாகமம் 24 : 4 (ECTA)
கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி!
எண்ணாகமம் 24 : 5 (ECTA)
யாக்கோபே! உன் கூடாரங்களும் இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை!
எண்ணாகமம் 24 : 6 (ECTA)
அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை; ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை; நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை.
எண்ணாகமம் 24 : 7 (ECTA)
அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்; அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்; அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்; அவனது அரசு உயர்த்தப்படும்.
எண்ணாகமம் 24 : 8 (ECTA)
கடவுள் அவனை எகிப்திலிருந்து கொண்டு வருகிறார்; காண்டா மிருகத்தின் கொம்புகள் அவனுக்குண்டு; அவன் தன் எதிரிகளாகிய வேற்று இனத்தவரை விழுங்கிவிடுவான்; அவர்கள் எலும்புகளைத் தூள் தூளாக நொறுக்குவான்; அவர்களைத் தன் அம்புகளால் ஊடுருவக் குத்துவான்;
எண்ணாகமம் 24 : 9 (ECTA)
அவன் துயில் கொண்டான்; சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்; அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்; எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்!” * தொநூ 12:3; 49:9..
எண்ணாகமம் 24 : 10 (ECTA)
எனவே,பிலயாம் மீது பாலாக்கு கடும் சினம் கொண்டு தன் கைகளைத் தட்டி பிலயாமிடம், “என் எதிரிகளைச் சபிக்கவே நான் உம்மை அழைத்தேன்; ஆனால், நீர் இம்மூன்று முறையும் அவர்களுக்கு ஆசி கூறியுள்ளீர்;
எண்ணாகமம் 24 : 11 (ECTA)
எனவே, உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்; “உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன்” என்று சொல்லியிருந்தேன்; ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார்” என்றான்.
எண்ணாகமம் 24 : 12 (ECTA)
பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாகக் கூறியது: “நீர் என்னிடம் அனுப்பிய உம் தூதரிடம் நான் சொல்லவில்லையா?
எண்ணாகமம் 24 : 13 (ECTA)
பாலாக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் ஆண்டவரின் வார்த்தையை மீறிச் சென்று என் விருப்பப்படி நன்மையோ தீமையோ செய்ய இயலாது; ஆண்டவர் பேசுவதையே நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?”
எண்ணாகமம் 24 : 14 (ECTA)
இப்போது நான் என் மக்களிடம் போகிறேன்; வாரும், பிற்காலத்தில் இம்மக்கள் உம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று உமக்குத் தெரிவிப்பேன்” என்றார்.
எண்ணாகமம் 24 : 15 (ECTA)
பிலயாமின் இறுதி உரைகள் அவர் திரு உரையாகக் கூறியது: “பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
எண்ணாகமம் 24 : 16 (ECTA)
கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றலுடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி!
எண்ணாகமம் 24 : 17 (ECTA)
நான் அவரைக் காண்பேன்; ஆனால், இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்! அது மோவாபின் நெற்றிப் பிறையை நசுக்கும்; சேத்தின் புதல்வர் அனைவரையும் அழித்துவிடும்.
எண்ணாகமம் 24 : 18 (ECTA)
அவன் எதிரியான ஏதோம் பாழாகி விடும்; சேயிரும் கைப்பற்றப்படும்; இஸ்ரயேலோ வலிமையுடன் செயல்படும்.
எண்ணாகமம் 24 : 19 (ECTA)
யாக்கோபு ஆளுகை செய்வான்; நகர்களில் எஞ்சியிருப்போர் அழிக்கப்படுவர்.”
எண்ணாகமம் 24 : 20 (ECTA)
பின் அவர் அமலேக்கைப் பார்த்துத் திருவுரையாகக் கூறியது: “வேற்றினங்களில் முதன்மை யானவன் அமலேக்கு; இறுதியில் அவன் அழிந்துபோவான்.”
எண்ணாகமம் 24 : 21 (ECTA)
அடுத்துக் கேனியனை நோக்கித் திருவுரையாக் கூறியது: “உன் வாழ்விடம் உறுதியானது; உன் கூடு பாறையில் அமைந்துள்ளது;
எண்ணாகமம் 24 : 22 (ECTA)
ஆயினும், கேனியன் பாழாய்ப் போவான்; அசீரியர் உன்னைச் சிறைப் பிடித்துச் செல்ல எவ்வளவு காலந்தான் ஆகும்?”
எண்ணாகமம் 24 : 23 (ECTA)
பின்னும் அவர் திருவுரையாகக் கூறியது: அந்தோ, கடவுள் இதனைச் செய்யும்போது எவன்தான் பிழைப்பான்?
எண்ணாகமம் 24 : 24 (ECTA)
கித்திம் தன் கப்பல்களால் அசீரியாவையும் ஏபேரையும் துன்புறுத்துவான்”
எண்ணாகமம் 24 : 25 (ECTA)
பின்பு, பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்; பாலாக்கும் தன்வழியே சென்றான்!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25