எண்ணாகமம் 20 : 1 (ECTA)
காதேசு நிகழ்ச்சிகள்
(விப 17:1-7)
முதல் மாதத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது; மக்கள் காதேசில் தங்கினர். மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள்.
எண்ணாகமம் 20 : 2 (ECTA)
அப்போது மக்கள் கூட்டமைப்புக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒன்று கூடினர்.
எண்ணாகமம் 20 : 3 (ECTA)
மக்கள் மோசேயுடன் வாதாடிக் கூறியது: “ஆண்டவர் திருமுன் எங்கள் சகோதரர்கள் மாண்டபோது நாங்களும் மாண்டிருந்தால் நலமாயிருந்திருக்குமே!
எண்ணாகமம் 20 : 4 (ECTA)
ஆண்டவரின் சபையை இந்தப் பாலைநிலத்துக்கு நீங்கள் கொண்டு வந்தது ஏன்? நாங்களும் எங்கள் கால்நடைகளும் இங்குச் சாகவேண்டுமென்றா?
எண்ணாகமம் 20 : 5 (ECTA)
இந்தக் கொடிய இடத்துக்கு அழைத்துவர எங்களை எகிப்திலிருந்து வெளியேறப் பண்ணினது ஏன்? தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையுமே இங்கு இல்லை; குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே!”
எண்ணாகமம் 20 : 6 (ECTA)
பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர். ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது.
எண்ணாகமம் 20 : 7 (ECTA)
ஆண்டவர் மோசேயிடம்,
எண்ணாகமம் 20 : 8 (ECTA)
“கோலை எடுத்துக் கொள்; நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைக் கூடிவரச் செய்யுங்கள்; அவர்கள் பார்வையில் பாறைத் தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்; இவ்வாறு, அவர்களுக்காகப் பாறையிடமிருந்து நீங்கள் தண்ணீர் பெறுவீர்கள்; மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் கால்நடைகளுக்கும் குடிக்கக் கொடுப்பீர்கள்” என்றார்.
எண்ணாகமம் 20 : 9 (ECTA)
அவர் கட்டளைப்படியே மோசே ஆண்டவர் திருமுன்னின்று கோலை எடுத்தார்.
எண்ணாகமம் 20 : 10 (ECTA)
மோசேயும் ஆரோனும் பாறைக்கு முன்பாகச் சபையை ஒன்று கூட்டினர். மோசே அவர்களிடம், “கலகக்காரரே, இப்போது கேளுங்கள், இப்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைக்க எங்களால் கூடுமா?” என்று கேட்டார்.
எண்ணாகமம் 20 : 11 (ECTA)
பின் மோசே தம் கையை ஓங்கித் தம் கோலால் பாறையை இருமுறை அடித்தார்; தண்ணீர் தாராளமாக வந்தது, மக்கள் கூட்டமைப்பினரும் அவர்கள் கால்நடைகளும் குடித்தனர்.
எண்ணாகமம் 20 : 12 (ECTA)
ஆண்டவரோ மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரயேல் மக்கள் பார்வையில் நான் தூயவராக விளங்கும்படி நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக்கொடுக்கவிருக்கும் நாட்டில் கொண்டு சேர்க்க மாட்டீர்கள்” என்றார்.
எண்ணாகமம் 20 : 13 (ECTA)
இது மெரிபாவின்* தண்ணீர்; இங்குத்தான் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் வாதாடினர், அவர் அவர்களிடையே தம்மைத் தூயவராகக் காண்பித்தார். * எபிரேயத்தில், ‘வாதிடுதல்’ என்பது பொருள்..
எண்ணாகமம் 20 : 14 (ECTA)
ஏதோம் மன்னன் இஸ்ரயேலைத் தடுத்தல் காதேசிலிருந்து மோசே ஏதோம் மன்னனிடம் தூதரை அனுப்பிக் கூறியது: உன் சகோதரன் இஸ்ரயேல் கூறுவது இதுவே; எங்களுக்கு நேர்ந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் நீர் அறிவீர்;
எண்ணாகமம் 20 : 15 (ECTA)
எங்கள் மூதாதையர் எகிப்துக்குச் சென்றனர்; நாங்கள் எகிப்திலே நெடுங்காலம் தங்கியிருந்தோம்; எகிப்தியர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் மிகவும் கொடுமையாக நடத்தினார்கள்;
எண்ணாகமம் 20 : 16 (ECTA)
நாங்கள் ஆண்டவரை நோக்கி அழுதபோது அவர் எங்கள் குரலைக் கேட்டு எங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர ஒரு தூதனை அனுப்பினார்; நாங்கள் இங்கு உமது எல்லையின் ஓரத்திலுள்ள காதேசு நகரில் இருக்கிறோம்.
எண்ணாகமம் 20 : 17 (ECTA)
இப்போதும் உம் நாடு வழியே எங்களைப் போக விடும்; நாங்கள் வயலின் ஊடேயோ திராட்சைத் தோட்டத்தின் ஊடேயோ கடந்து செல்ல மாட்டோம்; எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கமாட்டோம்; நாங்கள் அரச நெடுஞ்சாலை வழியே செல்வோம்; உம் எல்லையைத் தாண்டும்வரை நாங்கள் வலப்புறமோ இடப்புறமோ திரும்ப மாட்டோம்.
எண்ணாகமம் 20 : 18 (ECTA)
ஆனால் ஏதோம், “நீங்கள் கடந்து செல்லக்கூடாது, மீறினால் நான் உங்களுக்கெதிராக வாளெடுத்து வரவேண்டியிருக்கும் “என்று அவருக்குக் கூறியனுப்பினான்.
எண்ணாகமம் 20 : 19 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் அவனிடம், “நாங்கள் நெடுஞ்சாலை வழியே செல்வோம்; நாங்களோ, எங்கள் கால்நடைகளோ, உம் தண்ணீரைக் குடித்தால், அதற்கான விலையைத் தருவோம்; கால்நடையாகக் கடந்து செல்லமட்டும் எங்களுக்கு அனுமதி தாரும், வேறெதுவும் வேண்டாம்” என்றனர்.
எண்ணாகமம் 20 : 20 (ECTA)
ஆனால் அவனோ, “நீங்கள் கடந்து செல்லவே கூடாது” என்று கூறிவிட்டான். ஏதோம் திரண்ட வலிமை மிகுந்த படையோடு அவர்களுக்கெதிராக வந்தான்.
எண்ணாகமம் 20 : 21 (ECTA)
இவ்வாறு, ஏதோம் தன் எல்லைக்குள் இஸ்ரயேலுக்கு வழி தர மறுத்தான்; எனவே, இஸ்ரயேலர் அவனை விட்டு விலகிப் போயினர்.
எண்ணாகமம் 20 : 22 (ECTA)
ஆரோன் இறத்தல் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் காதேசிலிருந்து பயணம்செய்து, ‘ஓர்’ என்ற மலைக்கு வந்தனர்.
எண்ணாகமம் 20 : 23 (ECTA)
ஆண்டவர் ஏதோம் நாட்டின் எல்லையில் ஓர் என்ற மலையில் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
எண்ணாகமம் 20 : 24 (ECTA)
ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுவான்; நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டுக்குள் அவன் நுழைய மாட்டான்; ஏனெனில், ‘மெரிபாவின் தண்ணீர்’ அருகில் நீங்கள் என் கட்டளையை மீறினீர்கள்.
எண்ணாகமம் 20 : 25 (ECTA)
ஆரோனையும் அவனுடைய மகன் எலயாசரையும் ஓர் என்ற மலைக்குக் கூட்டிக் கொண்டு வா;
எண்ணாகமம் 20 : 26 (ECTA)
ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவனுடைய மகன் எலயாசருக்கு உடுத்து; ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக் கொள்ளப்படுவான், அங்கேயே இறப்பான்”.
எண்ணாகமம் 20 : 27 (ECTA)
ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்; மக்கள் கூட்டமைப்பு முழுவதின் பார்வையிலும் அவர்கள் ஓர் என்ற மலைக்கு ஏறிப் போனார்கள்.
எண்ணாகமம் 20 : 28 (ECTA)
மோசே ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவர் மகன் எலயாசருக்கு உடுத்தினார்; ஆரோன் அங்கேயே மலையுச்சியில் இறந்தார். பின் மோசேயும் எலயாசரும் மலையைவிட்டுக் கீழிறங்கி வந்தனர். [* விப 29:29; எண் 33:38; இச 10: 6 ]
எண்ணாகமம் 20 : 29 (ECTA)
ஆரோன் இறந்ததை மக்கள் கூட்டமைப்பு அறிந்தது; இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரோனுக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29