நெகேமியா 8 : 1 (ECTA)
திருச்சட்டத்தை மக்கள்முன் எஸ்ரா வாசித்தல் மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு திருநூல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர்.
நெகேமியா 8 : 2 (ECTA)
அவ்வாறே ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார்.
நெகேமியா 8 : 3 (ECTA)
தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.
நெகேமியா 8 : 4 (ECTA)
திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மர மேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அருகே வலப்பக்கத்தில் மத்தித்தியா, சேமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசேயா ஆகியோரும், இடப்பக்கத்தில் பெதாயா, மிசாவேல், மல்கியா, ஆசும், அசுபதீனா, செக்கரியா, மெசுல்லாம் ஆகியோரும் நின்று கொண்டிருந்தார்கள்.
நெகேமியா 8 : 5 (ECTA)
எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள்.
நெகேமியா 8 : 6 (ECTA)
அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்! ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.
நெகேமியா 8 : 7 (ECTA)
மேலும் லேவியரான ஏசுவா, பானி, செரேபியா, யாமின், கூபு, சபத்தாய், ஓதியா, மாசேயா, கெலிற்றா, அசரியா, யோசபாத்து, அனான், பெலாயா ஆகியோர் சட்டத்தை மக்களுக்கு விளக்கினார்கள். மக்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.
நெகேமியா 8 : 8 (ECTA)
மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.
நெகேமியா 8 : 9 (ECTA)
ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுதுபுலம்ப வேண்டாம்” என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக்கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.
நெகேமியா 8 : 10 (ECTA)
அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று கூறினார்.
நெகேமியா 8 : 11 (ECTA)
எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, “அமைதியாயிருங்கள்; ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள்” எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள்.
நெகேமியா 8 : 12 (ECTA)
எல்லா மக்களும் அவர்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளைப் புரிந்துகொண்டதால், உண்ணவும், குடிக்கவும், உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுச் சென்றார்கள்.
நெகேமியா 8 : 13 (ECTA)
கூடாரத் திருவிழா இரண்டாம் நாள் அனைத்து மக்களின் குலத்தலைவர்களும், குருக்களும், லேவியர்களும், திருநூல் வல்லுநரான எஸ்ராவிடம் திருச்சட்டத்தின் சொற்களைக் கற்றுக்கொள்ளக் கூடி வந்தார்கள்.
நெகேமியா 8 : 14 (ECTA)
அப்பொழுது அவர்கள், “ஏழாம் மாதத் திருவிழாக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று ஆண்டவர் மோசே வழியாகத் தந்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள். * லேவி 23:33-36, 39-43; இச 16:13-15..
நெகேமியா 8 : 15 (ECTA)
ஆகையால், “திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, கூடாரங்கள் அமைப்பதற்கு மலைகளுக்குச் சென்று ஒலிவக் கிளைகள், காட்டு ஒலிவக் கிளைகள், மிருதுச்செடி கிளைகள், பேரீச்ச ஓலைகள் மற்றும் அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டு வாருங்கள்” என்று தங்களுடைய நகரங்கள் எல்லாவற்றிலும் எருசலேமிலும் பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்கள். * லேவி 23:33-36, 39-43; இச 16:13-15..
நெகேமியா 8 : 16 (ECTA)
எனவே மக்கள் புறப்பட்டுச் சென்று, அவற்றைக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும், தம் வீட்டின் மேல்மாடியிலும் தங்கள் முற்றங்களிலும், கடவுளின் இல்லமுற்றங்களிலும், தண்ணீர் வாயில் வளாகத்திலும், எப்ராயிம் வாயில் வளாகத்திலும் தமக்குக் கூடாரங்கள் அமைத்துக் கொண்டார்கள்.
நெகேமியா 8 : 17 (ECTA)
அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த சபையார் அனைவரும் கூடாரங்கள் அமைத்து அக்கூடாரங்களில் தங்கினர். நூனின் மகன் யோசுவாவின் காலத்திலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதம் செய்ததில்லை. அன்று பெருமகிழ்ச்சி நிலவியது.
நெகேமியா 8 : 18 (ECTA)
எஸ்ரா முதல்நாள் தொடங்கிக் கடைசிநாள்வரை கடவுளின் திருச்சட்டநூலை உரக்க வாசித்தார். அவர்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். சட்ட ஒழுங்கின்படி, எட்டாம் நாள் பெரும் சபையைக் கூட்டினர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18