நெகேமியா 5 : 1 (ECTA)
ஏழைகள் ஒடுக்கப்படுதல் பின்னர் ஆடவரும் பெண்டிரும் தங்கள் இனத்தவரான யூதர்களுக்கு எதிராகப் பெரிதும் முறையிட்டனர்.
நெகேமியா 5 : 2 (ECTA)
அவர்களில் சிலர், “எங்கள் புதல்வர், புதல்வியர் உள்பட நாங்கள் பலர். எனவே நாங்கள் உண்டு, உயிர் வாழும் பொருட்டு எங்களுக்குத் தானியம் கிடைக்கும்படி செய்யும்” என்றனர்.
நெகேமியா 5 : 3 (ECTA)
இன்னும் சிலர் கூறியது: “எங்கள் நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடைமானம் வைத்துப் பஞ்சத்தில் பிழைக்கத் தானியம் வாங்கினோம்” என்றனர்.
நெகேமியா 5 : 4 (ECTA)
வேறு சிலர் கூறியது: “எங்கள் நிலங்களுக்காகவும் திராட்சைத் தோட்டத்திற்காகவும் மண்ணுக்குச் செலுத்த வேண்டிய தீர்வைக்காகக் கடன் வாங்கினோம். எங்கள் மக்களும் அவர்களின் மக்களைப் போன்றவர்கள் தாமே!
நெகேமியா 5 : 5 (ECTA)
எங்கள் சகோதரர்களும் எங்களைப் போன்றவர்கள் தாமே! இருப்பினும் நாங்கள், எங்கள் புதல்வரையும் புதல்வியரையும் அடிமைகளாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே! எங்கள் புதல்வியர் ஏற்கனவே அடிமைகளாகி விட்டனர். அவர்களை மீட்க எங்களிடம் வசதியில்லை. ஏனெனில் எங்கள் நிலங்களும், திராட்சைத் தோட்டங்களும் மற்றவர் கையில் உள்ளன”.
நெகேமியா 5 : 6 (ECTA)
அவர்களது முறையீடுகளையும், இவ்வார்த்தைகளையும் கேட்டபொழுது, நான் மிகவும் சினமுற்றேன்.
நெகேமியா 5 : 7 (ECTA)
நான் என்னுள் சிந்தித்தேன். பின் தலைவர்களையும், அதிகாரிகளையும் கண்டித்து அவர்களிடம் கூறியது: “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரர்களிடமிருந்து அநியாய வட்டி வாங்குவதேன்?” பிறகு அவர்களுக்கு எதிராகப் பெரும் சபையைக் கூட்டினேன். * விப 22:25; லேவி 25:35-37; இச 23:19-20..
நெகேமியா 5 : 8 (ECTA)
அவர்களைப் பார்த்து நான், “வேற்றினத்தாருக்கு விற்கப்பட்டிருந்த யூத சகோதரர்களை, நம்மால் முடிந்த அளவு மீட்டு வந்துள்ளோம். அப்படியிருக்க நீங்கள் உங்கள் சகோதரர்களை விற்கலாமா? அவர்கள் நமக்கே விற்கப்படவேண்டுமா?” என்று கேட்டேன். அவர்களோ மறுமொழி கூற இயலாது மௌனமாக இருந்தனர்.
நெகேமியா 5 : 9 (ECTA)
மீண்டும் நான் கூறியது: “நீங்கள் செய்வது சரியில்லை. நம் எதிரிகளான வேற்றினத்தார் நம்மை ஏளனம் செய்யாதவாறு நீங்கள் நம் கடவுளுக்கு அஞ்சி நடப்பதே முறை.
நெகேமியா 5 : 10 (ECTA)
நானும் என் சகோதரரும் என் பணியாளரும் கடனாகப் பணத்தையும், தானியத்தையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அக்கடனைக் கேளாது விட்டு விடுவோம்.
நெகேமியா 5 : 11 (ECTA)
இன்றே நீங்களும் அவர்களது நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும், வீடுகளையும் நூற்றுக்கு ஒன்று வட்டியாக வாங்கிய பணம், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவைகளையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்”.
நெகேமியா 5 : 12 (ECTA)
அதற்கு அவர்கள், “நீர் சொன்னபடியே நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். நாங்கள் அவர்களிடமிருந்து எதையும் கேட்கமாட்டோம்” என்றனர். நான் குருக்களை அழைத்து இவ் வார்த்தையின்படி செய்வோம் என்று அவர்களை ஆணையிட்டுக் கூற வைத்தேன்.
நெகேமியா 5 : 13 (ECTA)
மேலும், நான் என் ஆடையை உதறிவிட்டு, இவ் வார்த்தையின்படி நடக்காத ஒவ்வொருவரையும் கடவுள் இவ்வாறே தம் வீட்டினின்றும், திருப்பணியினின்றும் உதறிவிடுவாராக. அவர்கள் இவ்வாறு உதறிவிடப்பட்டு, வெறுமையாக்கப்படுவர்” என்றேன். இதற்குச் சபையார் அனைவரும் “ஆமென்” என்று சொல்லி ஆண்டவரைப் புகழ்ந்தனர். பின்னர் மக்கள் தாங்கள் வாக்களித்தபடியே செய்தனர்.
நெகேமியா 5 : 14 (ECTA)
நெகேமியாவின் தன்னலமின்மை மேலும் யூதா நாட்டில் ஆளுநராய் இருக்குமாறு அர்த்தக்சஸ்தா என்னை நியமித்த நாள்முதல், அதாவது மன்னரது ஆட்சியின் இருபதாம் ஆண்டுமுதல் முப்பத்திரண்டாம் ஆண்டுவரை, ஆக இப்பன்னிரண்டு ஆண்டுகளாய், நானும் என் சகோதரரும், ஆளுநர்களுக்குரிய படியை வாங்கி உண்ணவில்லை.
நெகேமியா 5 : 15 (ECTA)
எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் அதிகத் தீர்வை விதித்து மக்களை வதைத்தனர். உணவு, திராட்சை இரசத்தோடு நாற்பது செக்கேல் வெள்ளியும் அவர்களிடம் வசூலித்தனர். அவர்களுடைய அலுவலர்கள் மக்கள்மீது அதிகாரம் காட்டி வந்தனர். நானோ கடவுளுக்கு அஞ்சி அவ்வாறெல்லாம் செய்யவில்லை.
நெகேமியா 5 : 16 (ECTA)
மேலும் இம்மதில் வேலைக்கு என்னை முற்றும் ஈடுபடுத்திக் கொண்டேன். என் பணியாளர்கள் அனைவரும் அவ்வேலைக்கே அங்குக் கூடிவந்தார்கள். நாங்கள் நிலம் ஏதும் வாங்கிச் சேர்க்கவில்லை.
நெகேமியா 5 : 17 (ECTA)
மேலும் யூதர்களும், மக்கள் தலைவர்களுமான நூற்றைம்பது பேரும், எங்களைச் சுற்றி அண்டை நாட்டினின்று வந்திருந்த அனைவரும் எனது பந்தியில் உணவருந்தினார்கள்.
நெகேமியா 5 : 18 (ECTA)
ஒவ்வொரு நாளும் என் பந்திக்குத் தயார் செய்யப்பட்டவை பின்வருமாறு: ஒரு காளை, கொழுத்த ஆறு ஆடுகள், மேலும் கோழி வகைகள் பத்து. நாளுக்கு ஒருமுறை எல்லாவித இரசமும் ஏராளமாகக் கொள்முதல் செய்யப்பட்டது; எனினும் ஆளுநருக்குரிய படிக்கு நான் உரிமை கொண்டாடவில்லை. ஏனெனில் இம்மக்கள் பட்ட பாடு மிகப்பெரிது.
நெகேமியா 5 : 19 (ECTA)
என் இறைவா! இம் மக்களுக்கு நான் செய்துள்ள எல்லா நன்மைகளுக்கும் ஏற்ப எனக்கு ஆதரவாயிரும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19