நெகேமியா 1 : 1 (ECTA)
எருசலேம் குறித்து நெகேமியா கவலைப்படல் அக்கல்யா மகனான நெகேமியா கூறியது: இருபதாம் ஆண்டின் கிசிலேவு மாதத்தில், நான் தலைநகரான சூசாவில் இருந்தேன்.
நெகேமியா 1 : 2 (ECTA)
அப்பொழுது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும் சில ஆண்களும் யூதாவிலிருந்து வந்தார்கள். அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக்கொண்டு உயிரோடிருக்கும் யூதர்களைப்பற்றியும் எருசலேமைப் பற்றியும் அவர்களிடம் விசாரித்தேன்.
நெகேமியா 1 : 3 (ECTA)
அதற்கு அவர்கள், “அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக் கொண்டு அம்மாநிலத்தில் உயிரோடிருப்பவர்கள் பெருந் துயரும் சிறுமையும் அடைகிறார்கள். எருசலேமின் மதில்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன; அதன் வாயிற்கதவுகள் தீக்கு இரையாகிவிட்டன” என்று கூறினர்.
நெகேமியா 1 : 4 (ECTA)
இவற்றைப் பற்றிக் கேள்விபட்டதும் நான் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன்; பல நாள்கள் துக்கம் கொண்டாடினேன்; மேலும் நான் நோன்பிருந்து விண்ணகக் கடவுளின்முன் மன்றாடினேன்:
நெகேமியா 1 : 5 (ECTA)
“விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே! பெரியவரும் அஞ்சுதற்கு உரியவரும் ஆனவரே! தமக்கு அன்பு காட்டுபவர்களிடமும் தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடமும் உடன்படிக்கையையும் இரக்கத்தையும் காப்பவரே!
நெகேமியா 1 : 6 (ECTA)
உம் ஊழியர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்காக இரவும் பகலும் இன்று உம்முன் மன்றாடினேன்; இஸ்ரயேல் மக்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிறேன். அடியேனுடைய மன்றாட்டைக் கேட்பதற்கு உம் செவிகள் திறந்திருப்பதாக! உன் கண்கள் விழித்திருப்பதாக! நானும் என் தந்தை வீட்டாரும் பாவம் செய்தோம்.
நெகேமியா 1 : 7 (ECTA)
நாங்கள் உமக்கு எதிராக முறைகேடாக நடந்து கொண்டோம். உமது ஊழியரான மோசேக்குத் தந்த கட்டளைகளையும், சட்டங்களையும், நீதி முறைமைகளையும் கடைப்பிடிக்கவில்லை.
நெகேமியா 1 : 8 (ECTA)
உம் ஊழியரான மோசேக்கு நீர் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தருளும். ‘நீங்கள் நேர்மையற்றவர்களாக இருப்பீர்களேயாகில் உங்களை மக்களினங்களிடையே சிதறடிப்பேன்; [* லேவி 26: 33 ]
நெகேமியா 1 : 9 (ECTA)
இருப்பினும், நீங்கள் என்னிடம் திரும்பிவந்து, என் கட்டளைகளைப் பின்பற்றி நடப்பீர்களாகில், நீங்கள் உலகின் கடை எல்லைக்கு ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பினும், அங்கிருந்து உங்களை ஒன்று சேர்த்து எனது பெயர் விளங்கும் பொருட்டு நான் தேர்ந்துகொண்ட இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்’. * இச 30:1-5..
நெகேமியா 1 : 10 (ECTA)
உமது பேராற்றலாலும் கைவன்மையாலும் நீர் மீட்ட உம் மக்களும் ஊழியர்களும் இவர்களே.
நெகேமியா 1 : 11 (ECTA)
ஆண்டவரே, உம் ஊழியனான அடியேனின் மன்றாட்டையும், உமது பெயருக்கு அஞ்சி நடக்க விரும்பும் உம் ஊழியர்களின் மன்றாட்டையும் கேட்டருளும். உம் ஊழியனாகிய எனக்கு இன்று வெற்றியை அருளும். இம்மனிதர் எனக்கு இரக்கம் காட்டச் செய்தருளும்”. அப்பொழுது, நான் மன்னருக்குப் பானம் பரிமாறுவோனாக இருந்தேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11