மீகா 7 : 1 (ECTA)
இஸ்ரயேலின் நெறிகேடு ஐயோ! நான் கோடைக்காலக் கனிகளைக் கொய்வதற்குச் சென்றவனைப் போலானேன்; திராட்சை பறித்து முடிந்தபின் பழம் பறிக்கச் சென்றவனைப் போலானேன்; அப்பொழுது தின்பதற்கு ஒரு திராட்சைக் குலையும் இல்லை; என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழம்கூட இல்லை;
மீகா 7 : 2 (ECTA)
நாட்டில் இறைப்பற்றுள்ளோர் அற்றுப்போனார்; மனிதருள் நேர்மையானவர் எவருமே இல்லை. அவர்கள் அனைவரும் இரத்தப் பழிவாங்கப் பதுங்கிக் காத்திருக்கின்றனர்; ஒருவர் ஒருவரைப் பிடிக்கக் கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர்.
மீகா 7 : 3 (ECTA)
தீமை செய்வதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்; தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர்; பெரிய மனிதர் தாம் விரும்பியதை வாய்விட்டுக் கூறுகின்றனர்; இவ்வாறு, நெறிதவறி நடக்கின்றனர்.
மீகா 7 : 4 (ECTA)
அவர்களுள் சிறந்தவர் முட்செடி போன்றவர்! அவர்களுள் நேர்மையாளர் வேலிமுள் போன்றவர்! அவர்களுடைய காவலர்கள் அறிவித்த தீர்ப்பின் நாள் வந்துவிட்டது; இப்பொழுதே அவர்களுக்குத் திகில்.
மீகா 7 : 5 (ECTA)
அடுத்திருப்பவன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டாம்; தோழனிடத்திலும் நம்பிக்கை வைக்கவேண்டாம். உன் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவி முன்பும் உன் வாய்க்குப் பூட்டுப்போடு!
மீகா 7 : 6 (ECTA)
ஏனெனில், மகன் தன் தந்தையை அவமதிக்கின்றான்; மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகின்றாள், மருமகள், தன் மாமியாரை எதிர்க்கின்றாள்; ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். [* மத் 10:35-36; லூக் 12:53.. ]
மீகா 7 : 7 (ECTA)
நானோ, ஆண்டவரை விழிப்புடன் நோக்கியிருப்பேன்; என்னை மீட்கும் என் கடவுளுக்காகக் காத்திருப்பேன். என் கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள்வார்.
மீகா 7 : 8 (ECTA)
ஆண்டவர் அளிக்கும் விடுதலை என் பகைவனே, என்னைக் குறித்துக் களிப்படையாதே; ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சிபெறுவேன். நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்.
மீகா 7 : 9 (ECTA)
நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்; ஆதலால், அவரது கடும் சினத்தை , அவர் எனக்காக வழக்காடி எனக்கு நீதி வழங்கும்வரை, தாங்கிக்கொள்வேன்; அவர் என்னை ஒளிக்குள் கொண்டு வருவார்; அவரது நீதியை நான் காண்பேன்.
மீகா 7 : 10 (ECTA)
அப்போது, என்னோடு பகைமைகொண்டவர்கள் அதைக் காண்பார்கள்; “உன் கடவுளாகிய ஆண்டவர் எங்கே?” என்று என்னிடம் கேட்டவள் வெட்கம் அடைவாள்; என் கண்கள் அவளைக் கண்டு களிகூரும். அப்பொழுது, தெருச் சேற்றைப்போல அவள் மிதிபடுவாள்.
மீகா 7 : 11 (ECTA)
உன் மதில்களைத் திரும்பக் கட்டும் நாள் வருகின்றது; அந்நாளில், நாட்டின் எல்லை வெகு தொலைவிற்கு விரிந்து பரவும்.
மீகா 7 : 12 (ECTA)
அந்நாளில், அசீரியாவிலிருந்து எகிப்திலுள்ள நகர்கள் வரை, எகிப்திலிருந்து பேராறு வரை, ஒரு கடல்முதல் மறுகடல் வரை, ஒரு மலைமுதல் மறு மலைவரை உள்ள மக்கள் அனைவரும் உன்னிடம் திரும்புவார்கள்.
மீகா 7 : 13 (ECTA)
நிலவுலகம் அங்குக் குடியிருப்போரின் செயல்களின் விளைவால் பாழடைந்து போகும்.
மீகா 7 : 14 (ECTA)
ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்!
மீகா 7 : 15 (ECTA)
எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டுவந்த நாளில் நடந்ததுபோல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.
மீகா 7 : 16 (ECTA)
வேற்றினத்தார் இதைப் பார்த்துத் தங்கள் ஆற்றல் அனைத்தையும் குறித்து நாணமடைவர்; அவர்கள் தங்கள் வாயைக் கையால் மூடிக்கொள்வார்கள்; அவர்களுடைய காதுகள் செவிடாய்ப் போகும்.
மீகா 7 : 17 (ECTA)
அவர்கள் பாம்பைப் போலவும் நிலத்தில் ஊர்வன போலவும் மண்ணை நக்குவார்கள்; தங்கள் எல்லைக் காப்புகளில் இருந்து நடுநடுங்கி வெளியே வருவார்கள்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அஞ்சி நடுங்குவார்கள். உமக்கே அவர்கள் அஞ்சுவார்கள்.
மீகா 7 : 18 (ECTA)
உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்;
மீகா 7 : 19 (ECTA)
அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.
மீகா 7 : 20 (ECTA)
பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியதுபோல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20