மீகா 1 : 1 (ECTA)
யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே: [* 2 அர 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 27:1-7; 28:1-32:33.. ]
மீகா 1 : 2 (ECTA)
சமாரியாவையும் எருசலேமையும் பற்றிய ஓலம் மக்களினங்களே, நீங்கள் அனைவரும் கேளுங்கள்; நிலவுலகே, அதில் உள்ளவையே, செவிகொடுங்கள். தலைவராகிய ஆண்டவர் தம் திருக்கோவிலிருந்து உங்களுக்கு எதிராகச் சான்றுபகரப் போகிறார்.
மீகா 1 : 3 (ECTA)
இதோ! ஆண்டவர் தாம் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு வருகின்றார்; அவர் இறங்கிவந்து நிலவுலகின் மலையுச்சிகள் மிதிபட நடப்பார்.
மீகா 1 : 4 (ECTA)
நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும், பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளம்போலவும், அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும்; பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.
மீகா 1 : 5 (ECTA)
யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பாவங்களை முன்னிட்டுமே இவை எல்லாம் நேரிடும். யாக்கோபின் குற்றத்திற்குக் காரணம் யாது? சமாரியா அன்றோ! யூதாவின் தொழுகைமேடுகளுக்குக் காரணம் யாது? எருசலேம் அன்றோ!
மீகா 1 : 6 (ECTA)
ஆதலால், சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும் திராட்சை நடும் தோட்டமாகவும் செய்திடுவேன்; அதன் கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு, அதன் அடித்தளங்கள் வெளியிலே தெரியும்படி செய்வேன்.
மீகா 1 : 7 (ECTA)
அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம் துகள் துகளாக நொறுக்கப்படும்; அதன் பணயங்கள் எல்லாம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்; அதன் சிலைகளை எல்லாம் உடைத்து கற்குவியல் ஆக்குவேன்; ஏனெனில், விலைமகளுக்குரிய பணயமாக அவை சேர்க்கப்பட்டன; விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும்.
மீகா 1 : 8 (ECTA)
இதை முன்னிட்டே நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்; வெறுங்காலோடு ஆடையின்றித் திரிவேன்; குள்ளநரிகளைப்போல் ஊளையிடுவேன்; நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன்.
மீகா 1 : 9 (ECTA)
ஏனெனில், சமாரியாவின் புண் ஆறாது; யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது; என் மக்களின் வாயிலாம் எருசலேமையும் வந்து எட்டியுள்ளது.
மீகா 1 : 10 (ECTA)
எதிரி எருசலேமின் அருகில் வந்துள்ளான் காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்; கதறியழவும் வேண்டாம்; பெத்லயப்ராவில் புழுதியில் விழுந்து புரளுங்கள்.
மீகா 1 : 11 (ECTA)
சாபீரில் குடியிருப்போரே, ஆடையின்றி மானக்கேடுற்று அகன்று போங்கள்; சானானில் குடியிருப்போரும் வெளியே வருவதில்லை; பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும். அங்கு உங்களுக்கு அடைக்கலம் கிடைக்காது.
மீகா 1 : 12 (ECTA)
மாரோத்தில் குடியிருப்போர் நன்மை வரும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்; ஏனெனில், தீமை ஆண்டவரிடம் இருந்து இறங்கி எருசலேமின் வாயில்மேல் விழுந்தது.
மீகா 1 : 13 (ECTA)
இலாக்கீசில் குடியிருப்போரே, விரைந்தோடும் குதிரைகளைத் தேரிலே பூட்டுங்கள்; மகள் சீயோனின் பாவத்திற்கு ஊற்று நீங்களே; இஸ்ரயேலின் குற்றங்கள் முதலில் காணப்பட்டது உங்களிடம்தான்.
மீகா 1 : 14 (ECTA)
ஆதலால், மோரசேத்துகாத்துக்கு நீ சீதனம் கொடுப்பாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும்.
மீகா 1 : 15 (ECTA)
மாரேசாவில் குடியிருப்போரே, கொள்ளைக்காரன் ஒருவன் உங்கள்மேல் திரும்பவும் வரும்படி செய்வேன்; இஸ்ரயேலின் மேன்மை அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும்.
மீகா 1 : 16 (ECTA)
உங்கள் அருமைப் பிள்ளைகளுக்காகத் துக்கங் கொண்டாட உங்கள் தலையை மொட்டையடித்துக்கொள்ளுங்கள்; கழுகைப்போல் முற்றிலும் மொட்டையடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16