மத்தேயு 6 : 1 (ECTA)
அறச்செயல்கள் “மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
மத்தேயு 6 : 2 (ECTA)
தர்மம் செய்தல் “நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 6 : 3 (ECTA)
நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.
மத்தேயு 6 : 4 (ECTA)
அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.”
மத்தேயு 6 : 5 (ECTA)
இறைவேண்டல்
(லூக் 11:2-4)
“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [* லூக் 18:10- 14 ]
மத்தேயு 6 : 6 (ECTA)
ஆனால், நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
மத்தேயு 6 : 7 (ECTA)
மேலும், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
மத்தேயு 6 : 8 (ECTA)
நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில், நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6 : 9 (ECTA)
ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்:‘விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!
மத்தேயு 6 : 10 (ECTA)
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக!
மத்தேயு 6 : 11 (ECTA)
இன்று தேவையான உணவை* எங்களுக்குத் தாரும். * ‘இன்று தேவையான உணவை’ என்னும் சொற்றொடரை ‘எங்கள் அன்றாட உணவை’ அல்லது ‘நாளைய உணவை’ எனவும் மொழிபெயர்க்கலாம்.
மத்தேயு 6 : 12 (ECTA)
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்.
மத்தேயு 6 : 13 (ECTA)
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். [‘ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.’] * “ஆட்சியும்… ஆமென்” என்னும் அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்றொடர் இவ்வேண்டலின் இறுதியில் சில முக்கியமல்லாத கையெழுத்துப்படிகளில் மட்டும் காணப்படுகிறது.
மத்தேயு 6 : 14 (ECTA)
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். [* மாற் 11:25- 26 ]
மத்தேயு 6 : 15 (ECTA)
மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார். [* மாற் 11:25- 26 ]
மத்தேயு 6 : 16 (ECTA)
நோன்பு இருத்தல் மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 6 : 17 (ECTA)
நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.
மத்தேயு 6 : 18 (ECTA)
அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.
மத்தேயு 6 : 19 (ECTA)
உண்மைச் செல்வம் “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். [* யாக் 5:2, 3 ]
மத்தேயு 6 : 20 (ECTA)
ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
மத்தேயு 6 : 21 (ECTA)
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.”
மத்தேயு 6 : 22 (ECTA)
உடலுக்கு விளக்கு
(லூக் 11:34-36)
“கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.
மத்தேயு 6 : 23 (ECTA)
அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக. உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிருந்தால் இருள் எப்படியிருக்கும்!”கடவுளா? செல்வமா?
(லூக் 16:13)
மத்தேயு 6 : 24 (ECTA)
“எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
மத்தேயு 6 : 25 (ECTA)
கவலை வேண்டாம்
(லூக் 12:22-34)
“ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
மத்தேயு 6 : 26 (ECTA)
வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!
மத்தேயு 6 : 27 (ECTA)
கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?* * ‘தமது … முடியும்?’ என்னும் சொற்றொடரை ‘தமது ஆயுளோடு ஒரு நாளைக் கூட்ட முடியும்?’ எனவும் மொழிபெயர்க்கலாம்.
மத்தேயு 6 : 28 (ECTA)
உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.
மத்தேயு 6 : 29 (ECTA)
ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். [* 1 அர 10:1- 29 ]
மத்தேயு 6 : 30 (ECTA)
நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?
மத்தேயு 6 : 31 (ECTA)
ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.
மத்தேயு 6 : 32 (ECTA)
ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.
மத்தேயு 6 : 33 (ECTA)
ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும்* நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். * ‘அவருக்கு’ என்னும் சொல்லை ‘அதற்கு’ எனவும் மொழிபெயர்க்கலாம்..
மத்தேயு 6 : 34 (ECTA)
ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில், நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34