மத்தேயு 5 : 1 (ECTA)
மலைப்பொழிவு இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
மத்தேயு 5 : 2 (ECTA)
அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
மத்தேயு 5 : 3 (ECTA)
பேறுபெற்றோர்
(லூக் 6:20-23) “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது.
மத்தேயு 5 : 4 (ECTA)
துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர். [* எசா 61: 2 ]
மத்தேயு 5 : 5 (ECTA)
கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.* [* திபா 37: 11 ; இங்கு பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொற்களுக்குப் பின்னால் உள்ள எபிரேயச் சொற்களின்படி ‘நிலமிழந்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் நிலத்தை உரிமையாக்கிக் கொள்வர்’ என்றும் மொழிபெயர்க்கலாம். ]
மத்தேயு 5 : 6 (ECTA)
நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர். [* எசா 55:1, 2 ]
மத்தேயு 5 : 7 (ECTA)
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.
மத்தேயு 5 : 8 (ECTA)
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர். [* திபா 24:3, 4 ]
மத்தேயு 5 : 9 (ECTA)
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
மத்தேயு 5 : 10 (ECTA)
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது. [* 1 பேது 3: 14 ]
மத்தேயு 5 : 11 (ECTA)
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! [* 1 பேது 4: 14 ]
மத்தேயு 5 : 12 (ECTA)
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள். [* 2 குறி 36:16; திப 7: 52 ]
மத்தேயு 5 : 13 (ECTA)
உப்பும் ஒளியும்
(மாற் 9:50; லூக் 14:34-35) நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. [* மாற் 9:30; லூக் 14:34, 35 ]
மத்தேயு 5 : 14 (ECTA)
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. [* யோவா 8:12; 9: 5 ]
மத்தேயு 5 : 15 (ECTA)
எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். [* மாற் 4:21; லூக் 8:16; 11: 33 ]
மத்தேயு 5 : 16 (ECTA)
இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். [* 1 பேது 2: 12 ]
மத்தேயு 5 : 17 (ECTA)
திருச்சட்டம் நிறைவேறுதல் திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். [* மாற் 4:21; லூக் 8:16; 11: 13 ]
மத்தேயு 5 : 18 (ECTA)
‘விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது’ என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். [* லூக் 16: 17 ]
மத்தேயு 5 : 19 (ECTA)
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.
மத்தேயு 5 : 20 (ECTA)
மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 5 : 21 (ECTA)
சினங்கொள்ளுதல் ‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். [* விப 20:13; இச 5: 17 ]
மத்தேயு 5 : 22 (ECTA)
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.
மத்தேயு 5 : 23 (ECTA)
ஆகையால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,
மத்தேயு 5 : 24 (ECTA)
அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
மத்தேயு 5 : 25 (ECTA)
உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.
மத்தேயு 5 : 26 (ECTA)
கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.
மத்தேயு 5 : 27 (ECTA)
விபசாரம்
(மத் 19:9; மாற் 10:11,12; லூக் 16:18) “‘விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். [* விப 20:14; இச 5: 18 ]
மத்தேயு 5 : 28 (ECTA)
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
மத்தேயு 5 : 29 (ECTA)
உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. [* மத் 18:9; மாற் 9: 47 ]
மத்தேயு 5 : 30 (ECTA)
உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. [* மத் 18:18; மாற் 9: 43 ]
மத்தேயு 5 : 31 (ECTA)
‘தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. [* இச 24:1-4; மத் 19:7; மாற் 10: 4 ]
மத்தேயு 5 : 32 (ECTA)
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.” [* மத் 19:9; மாற் 10:11,12; லூக் 16:18; 1 கொரி 7:10, 11 ]
மத்தேயு 5 : 33 (ECTA)
ஆணையிடுதல் “மேலும், ‘பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். [* லேவி 19:12; எண் 30:2; இச 23: 21 ]
மத்தேயு 5 : 34 (ECTA)
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால், அது கடவுளின் அரியணை. [* யாக் 5: 12 ]
மத்தேயு 5 : 35 (ECTA)
மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது பேரரசரின் நகரம்.
மத்தேயு 5 : 36 (ECTA)
உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில், உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.
மத்தேயு 5 : 37 (ECTA)
ஆகவே, நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.
மத்தேயு 5 : 38 (ECTA)
பழி வாங்குதல்
(லூக் 6:29-30) ‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். [* விப 21:24; லேவி 24:20; இச 19: 21 ]
மத்தேயு 5 : 39 (ECTA)
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
மத்தேயு 5 : 40 (ECTA)
ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.
மத்தேயு 5 : 41 (ECTA)
எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.
மத்தேயு 5 : 42 (ECTA)
உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.”
மத்தேயு 5 : 43 (ECTA)
பகைவரிடம் அன்பாயிருத்தல்
(லூக் 6:27-28, 32-36) “‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். [* லேவி 19: 18 ]
மத்தேயு 5 : 44 (ECTA)
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.*” * ‘பகைவரிடம் அன்பு கூருங்கள்’ என்னும் சொற்றொடருக்குப்பின் ‘உங்களைச் சபிக்கிறவர்களுக்கு ஆசி கூறுங்கள்; உங்களை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைத் தூற்றுகிறவர்களுக்காகவும், துன்புறுத்துகிறவர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்’ எனவும் சில முக்கியமல்லாத கையெழுத்துப்படிகளில் காணப்படுகிறது..
மத்தேயு 5 : 45 (ECTA)
“இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.
மத்தேயு 5 : 46 (ECTA)
உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?
மத்தேயு 5 : 47 (ECTA)
நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
மத்தேயு 5 : 48 (ECTA)
ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.” [* லேவி 19:2; இச 18:13; 1 யோவா 3: 3 ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48