மத்தேயு 28 : 1 (ECTA)
ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.
மத்தேயு 28 : 2 (ECTA)
திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.
மத்தேயு 28 : 3 (ECTA)
அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.
மத்தேயு 28 : 4 (ECTA)
அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.
மத்தேயு 28 : 5 (ECTA)
அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, "நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும்.
மத்தேயு 28 : 6 (ECTA)
அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
மத்தேயு 28 : 7 (ECTA)
நீங்கள் விரைந்து சென்று, "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்" என்றார்.
மத்தேயு 28 : 8 (ECTA)
அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.
மத்தேயு 28 : 9 (ECTA)
திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.
மத்தேயு 28 : 10 (ECTA)
அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.
மத்தேயு 28 : 11 (ECTA)
அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர்.
மத்தேயு 28 : 12 (ECTA)
அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து,
மத்தேயு 28 : 13 (ECTA)
"நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர்" எனச் சொல்லுங்கள்.
மத்தேயு 28 : 14 (ECTA)
ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம்" என்று அவர்களிடம் கூறினார்கள்.
மத்தேயு 28 : 15 (ECTA)
அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.
மத்தேயு 28 : 16 (ECTA)
பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.
மத்தேயு 28 : 17 (ECTA)
அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.
மத்தேயு 28 : 18 (ECTA)
இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.
மத்தேயு 28 : 19 (ECTA)
எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
மத்தேயு 28 : 20 (ECTA)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: