மத்தேயு 21 : 1 (ECTA)
வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல்
(மாற் 11:1-11; லூக் 19:28-38; யோவா 12:12-19)
இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி,
மத்தேயு 21 : 2 (ECTA)
“நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.
மத்தேயு 21 : 3 (ECTA)
யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், ‘இவை ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்” என்றார்.
மத்தேயு 21 : 4 (ECTA)
(4-5) “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்” என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. [* செக் 9: 9 ]
மத்தேயு 21 : 5 (ECTA)
[* செக் 9: 9 ]
மத்தேயு 21 : 6 (ECTA)
சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.
மத்தேயு 21 : 7 (ECTA)
அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். [* 1 அர 1: 33 ]
மத்தேயு 21 : 8 (ECTA)
பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். [* 2 அர 9: 13 ]
மத்தேயு 21 : 9 (ECTA)
அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். [* திபா 118: 26 ; ‘ஓசன்னா’ என்னும் எபிரேயச் சொல்லுக்கு ‘விடுவித்தருளும்’ என்பது பொருள். . ஆனால், எபிரேய வழக்கில் வாழ்த்தைத் தெரிவிக்கும் சொல்லாகவும் அது அமைந்தது ]
மத்தேயு 21 : 10 (ECTA)
அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, “இவர் யார்?” என்னும் கேள்வி எழுந்தது.
மத்தேயு 21 : 11 (ECTA)
அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று பதிலளித்தனர்.
மத்தேயு 21 : 12 (ECTA)
இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்
(மாற் 11:15-19; லூக் 19:45-48; யோவா 2:13-22)
பின்பு, இயேசு கோவிலுக்குள் சென்றார்; கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.
மத்தேயு 21 : 13 (ECTA)
“என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால், நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார். [* எசா 56: 7 ]
மத்தேயு 21 : 14 (ECTA)
பின்பு, பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர். இயேசு அவர்களைக் குணமாக்கினார்.
மத்தேயு 21 : 15 (ECTA)
அவர் வியத்தகு செயல்கள் செய்வதையும் “தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்று கோவிலுக்குள் சிறு பிள்ளைகள் ஆர்ப்பரிப்பதையும் கண்டு தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் கோபம் அடைந்தனர். [* யோவா 12: 19 ]
மத்தேயு 21 : 16 (ECTA)
அவர்கள் அவரிடம், “இவர்கள் சொல்வது கேட்கிறதா?” என, இயேசு அவர்களிடம், “ஆம்! ‘பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்’ என்று ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா?” என்று கேட்டார். [* திபா 8: 2 ]
மத்தேயு 21 : 17 (ECTA)
பின்பு, அவர் அவர்களை விட்டு அகன்று நகரத்திற்கு வெளியே உள்ள பெத்தானியாவுக்குச் சென்று அன்றிரவு அங்குத் தங்கினார்.
மத்தேயு 21 : 18 (ECTA)
அத்தி மரத்தைச் சபித்தல்
(மாற் 11:12-14, 20-24)
காலையில் நகரத்திற்குத் திரும்பி வந்தபொழுது அவருக்குப் பசி உண்டாயிற்று.
மத்தேயு 21 : 19 (ECTA)
வழியோரத்தில் ஓர் அத்தி மரத்தை அவர் கண்டு அதன் அருகில் சென்றார். அதில் இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணாமல், “இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்” என்று அதைப் பார்த்துக் கூறினார். உடனே அந்த அத்தி மரம் பட்டுப் போயிற்று.
மத்தேயு 21 : 20 (ECTA)
இதனைக் கண்ட சீடர்கள் வியப்புற்று, “இந்த அத்தி மரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று?” என்று கேட்டார்கள்,
மத்தேயு 21 : 21 (ECTA)
இயேசு அவர்களிடம் மறுமொழியாக, “நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் அத்தி மரத்துக்கு நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அது மட்டுமல்ல, இந்த மலையைப் பார்த்து, ‘பெயர்ந்து கடலில் விழு’ என்றாலும் அது அப்படியே நடக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [* மத் 17:20; லூக் 17:6; யோவா 14:12; 1 கொரி 13: 2 ]
மத்தேயு 21 : 22 (ECTA)
நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்” என்று கூறினார்.
மத்தேயு 21 : 23 (ECTA)
இயேசுவின் அதிகாரத்திற்குச் சவால்
(மாற் 11:27-33; லூக் 20:1-8)
இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். [* யோவா 2: 18 ]
மத்தேயு 21 : 24 (ECTA)
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.
மத்தேயு 21 : 25 (ECTA)
யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?” என்று அவர் கேட்டார். அவர்கள் “‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். [* யோவா 3: 27 ]
மத்தேயு 21 : 26 (ECTA)
‘மனிதரிடமிருந்து’ என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில், அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
மத்தேயு 21 : 27 (ECTA)
எனவே, அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம் “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.
மத்தேயு 21 : 28 (ECTA)
இரு புதல்வர்கள் உவமை மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார்.
மத்தேயு 21 : 29 (ECTA)
அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால், பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.
மத்தேயு 21 : 30 (ECTA)
அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால், போகவில்லை.
மத்தேயு 21 : 31 (ECTA)
இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 21 : 32 (ECTA)
ஏனெனில், யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” என்றார். [* லூக் 3:12; 7:29, 30 ]
மத்தேயு 21 : 33 (ECTA)
கொடிய குத்தகைக்காரர் உவமை
(மாற் 12:1-12; லூக் 20:9-19)
“மேலும், ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி* வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். [* எசா 5:1- 7 ; பிழிவுக்குழி என்பது திராட்சைப் பழங்களை மிதித்துச் சாறு பிழிவதற்காகப் பாறையில் வெட்டப்படுவது.. ]
மத்தேயு 21 : 34 (ECTA)
பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.
மத்தேயு 21 : 35 (ECTA)
தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.
மத்தேயு 21 : 36 (ECTA)
மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.
மத்தேயு 21 : 37 (ECTA)
தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.
மத்தேயு 21 : 38 (ECTA)
அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
மத்தேயு 21 : 39 (ECTA)
பின்பு, அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.
மத்தேயு 21 : 40 (ECTA)
எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார்.
மத்தேயு 21 : 41 (ECTA)
அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள்.
மத்தேயு 21 : 42 (ECTA)
இயேசு அவர்களிடம், “‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? [* திபா 118:22,23; திப 4:11; 1 பேது 2: 7 ]
மத்தேயு 21 : 43 (ECTA)
எனவே, உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 21 : 44 (ECTA)
இந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார். இது யார் மேல் விழுமோ அவரும் நசுங்கிப் போவார்” என்றார்.
மத்தேயு 21 : 45 (ECTA)
தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர்.
மத்தேயு 21 : 46 (ECTA)
அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46