மத்தேயு 20 : 1 (ECTA)
திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.
மத்தேயு 20 : 2 (ECTA)
அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம்* கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். * ஒரு தெனாரியம் ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்..
மத்தேயு 20 : 3 (ECTA)
ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.
மத்தேயு 20 : 4 (ECTA)
அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார்.
மத்தேயு 20 : 5 (ECTA)
அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.
மத்தேயு 20 : 6 (ECTA)
ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
மத்தேயு 20 : 7 (ECTA)
அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.
மத்தேயு 20 : 8 (ECTA)
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். [* லேவி 19:13; இச 24: 15 ]
மத்தேயு 20 : 9 (ECTA)
எனவே, ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.
மத்தேயு 20 : 10 (ECTA)
அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால், அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.
மத்தேயு 20 : 11 (ECTA)
அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,
மத்தேயு 20 : 12 (ECTA)
‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள்.
மத்தேயு 20 : 13 (ECTA)
அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?
மத்தேயு 20 : 14 (ECTA)
உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.
மத்தேயு 20 : 15 (ECTA)
எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.
மத்தேயு 20 : 16 (ECTA)
இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார். [* மத் 19:30; மாற் 10:31; லூக் 13: 30 ]
மத்தேயு 20 : 17 (ECTA)
இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தல்
(மாற் 10:32-34; லூக் 18:31-34) இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து,
மத்தேயு 20 : 18 (ECTA)
“இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.
மத்தேயு 20 : 19 (ECTA)
அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால், அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்று அவர்களிடம் கூறினார்.
மத்தேயு 20 : 20 (ECTA)
செபதேயுவின் மக்கள் சார்பில் வேண்டுகோள்
(மாற் 10:35-45) பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.
மத்தேயு 20 : 21 (ECTA)
“உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார்.
மத்தேயு 20 : 22 (ECTA)
அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள் “எங்களால் இயலும்” என்றார்கள்.
மத்தேயு 20 : 23 (ECTA)
அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.
மத்தேயு 20 : 24 (ECTA)
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.
மத்தேயு 20 : 25 (ECTA)
இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். [* லூக் 22:25, 26 ]
மத்தேயு 20 : 26 (ECTA)
உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். [* லூக் 22:25, 26 ; மத் 23:11; மாற் 9:35; லூக் 22:26; யோவா 13:4, 15. ]
மத்தேயு 20 : 27 (ECTA)
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். [* மத் 23:11; மாற் 9:35; லூக் 22:26; யோவா 13:4, 15 ]
மத்தேயு 20 : 28 (ECTA)
இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார். [* மத் 26:28; உரோ 5:6; 1 திமொ 2: 6 ]
மத்தேயு 20 : 29 (ECTA)
பார்வையற்றோர் இருவர் பார்வை பெறுதல்
(மாற் 10:46-52; லூக் 18:35-42) அவர்கள் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.
மத்தேயு 20 : 30 (ECTA)
அப்பொழுது வழியோரத்தில் உட்கார்ந்திருந்த பார்வையற்றோர் இருவர் இயேசு அவ்வழியே கடந்து செல்கிறார் என்று கேள்விப்பட்டு, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்தினர்.
மத்தேயு 20 : 31 (ECTA)
மக்கள் கூட்டத்தினர் அவர்களைப் பேசாதிருக்குமாறு அதட்டினர். ஆனால், அவர்கள், “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் கத்தினார்கள்.
மத்தேயு 20 : 32 (ECTA)
இயேசு நின்று, அவர்களைக் கூப்பிட்டு, “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
மத்தேயு 20 : 33 (ECTA)
அதற்கு அவர்கள், “ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்தருளும்” என்றார்கள்.
மத்தேயு 20 : 34 (ECTA)
இயேசு பரிவு கொண்டு அவர்களுடைய விழிகளைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றினார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34