மத்தேயு 10 : 1 (ECTA)
திருத்தூதுப் பொழிவுபன்னிரு திருத்தூதர்
(மாற் 3:13-19; லூக் 6:12-16) இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
மத்தேயு 10 : 2 (ECTA)
அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு; முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான்,
மத்தேயு 10 : 3 (ECTA)
பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரி தண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,
மத்தேயு 10 : 4 (ECTA)
தீவிரவாதியாய் இருந்த சீமோன்*, இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து. * மூல பாடத்தில் ‘கனனேயனான சீமோன்’ என்றுள்ளது. . ‘கனனேயன்’ என்றால் அரமேயத்தில் ‘தீவிரவாதி’ எனப் பொருள்படும்.
மத்தேயு 10 : 5 (ECTA)
திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்
(மாற் 6:7-13; லூக் 9:1-6) இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.
மத்தேயு 10 : 6 (ECTA)
மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
மத்தேயு 10 : 7 (ECTA)
அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்.
மத்தேயு 10 : 8 (ECTA)
நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.
மத்தேயு 10 : 9 (ECTA)
பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
மத்தேயு 10 : 10 (ECTA)
பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில், வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. [* 1 கொரி 9:14; 1 திமொ 5:18; 3 யோவா 8 ]
மத்தேயு 10 : 11 (ECTA)
நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.
மத்தேயு 10 : 12 (ECTA)
அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.
மத்தேயு 10 : 13 (ECTA)
வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.
மத்தேயு 10 : 14 (ECTA)
உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். [* திப 13: 51 ]
மத்தேயு 10 : 15 (ECTA)
தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [* மத் 11: 24 ]
மத்தேயு 10 : 16 (ECTA)
அனுப்பப்பட்டவர் அடையும் துன்பங்கள்
(மாற் 13:9-13; லூக் 21:12-19) “இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே, பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். [* லூக் 10: 3 ]
மத்தேயு 10 : 17 (ECTA)
எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.
மத்தேயு 10 : 18 (ECTA)
என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.
மத்தேயு 10 : 19 (ECTA)
இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
மத்தேயு 10 : 20 (ECTA)
ஏனெனில், பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.
மத்தேயு 10 : 21 (ECTA)
சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். [* மாற் 13:12; லூக் 21: 16 ]
மத்தேயு 10 : 22 (ECTA)
என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். [* மத் 24:9; மாற் 13:13; லூக் 21: 17 ]
மத்தேயு 10 : 23 (ECTA)
அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 10 : 24 (ECTA)
சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல. [* லூக் 6:40; யோவா 13:16; 15: 20 ]
மத்தேயு 10 : 25 (ECTA)
சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா? [* மத் 9:34; 12: 24 ]
மத்தேயு 10 : 26 (ECTA)
அஞ்சாதீர்கள்
(லூக் 12:2-7) “எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில், வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. [* மாற் 4:22; லூக் 8: 17 ]
மத்தேயு 10 : 27 (ECTA)
நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.
மத்தேயு 10 : 28 (ECTA)
ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.
மத்தேயு 10 : 29 (ECTA)
காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.
மத்தேயு 10 : 30 (ECTA)
உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.
மத்தேயு 10 : 31 (ECTA)
சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே, அஞ்சாதிருங்கள். [* 1 பேது 3: 14 ]
மத்தேயு 10 : 32 (ECTA)
மக்கள் முன்னிலையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்தல்
(லூக் 12:8-9) “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்.
மத்தேயு 10 : 33 (ECTA)
மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன். [* 2 திமொ 2:12; திவெ 3: 5 ]
மத்தேயு 10 : 34 (ECTA)
பிளவு ஏற்படுதல்
(லூக் 12:51-53; மாற் 14:26-27) “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.
மத்தேயு 10 : 35 (ECTA)
தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். [* மீக் 7: 6 ]
மத்தேயு 10 : 36 (ECTA)
ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். [* மீக் 7: 6 ]
மத்தேயு 10 : 37 (ECTA)
என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
மத்தேயு 10 : 38 (ECTA)
தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். [* மத் 16:24; மாற் 8:34; லூக் 9: 23 ]
மத்தேயு 10 : 39 (ECTA)
தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். [* மத் 16:25; மாற் 8:35; லூக் 9:24; 17:33; யோவா 12: 25 ]
மத்தேயு 10 : 40 (ECTA)
கைம்மாறு பெறுதல்
(மாற் 9:41) “உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். [* மாற் 9:37; லூக் 9:48; 10:16; யோவா 13: 20 ]
மத்தேயு 10 : 41 (ECTA)
இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.
மத்தேயு 10 : 42 (ECTA)
இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42