மாற்கு 6 : 1 (ECTA)
சொந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்படுதல்
(மத் 13:53-58; லூக் 4:16-30)
அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
மாற்கு 6 : 2 (ECTA)
ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!
மாற்கு 6 : 3 (ECTA)
இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். [* யோவா 6: 42 ]
மாற்கு 6 : 4 (ECTA)
இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். [* யோவா 4: 44 ]
மாற்கு 6 : 5 (ECTA)
அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.
மாற்கு 6 : 6 (ECTA)
அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்.இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்துதல்பன்னிரு திருத்தூதர் அனுப்பப்படுதல்
(மத் 10:1, 5-15; லூக் 9:1-6)
(6b) அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.
மாற்கு 6 : 7 (ECTA)
அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.
மாற்கு 6 : 8 (ECTA)
மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். [* லூக் 10:4- 11 ]
மாற்கு 6 : 9 (ECTA)
ஆனால், மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். [* லூக் 10:4- 11 ; மத் 8: 10. ]
மாற்கு 6 : 10 (ECTA)
மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். [* லூக் 10:4- 11 ]
மாற்கு 6 : 11 (ECTA)
உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார்; [* லூக் 10:4- 11 ; திப 13: 51. ]
மாற்கு 6 : 12 (ECTA)
அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;
மாற்கு 6 : 13 (ECTA)
பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள். [* யாக் 5: 14 ]
மாற்கு 6 : 14 (ECTA)
திருமுழுக்கு யோவான் கொல்லப்படுதல்
(மத் 14:1-12; லூக் 9:7-9)
இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், “இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன” என்றனர். [* மத் 16: 14 ]
மாற்கு 6 : 15 (ECTA)
வேறு சிலர், “இவர் எலியா” என்றனர். மற்றும் சிலர், “ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே” என்றனர். [* மத் 16: 14 ]
மாற்கு 6 : 16 (ECTA)
இதைக் கேட்ட ஏரோது, “இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால், அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்” என்று கூறினான்.
மாற்கு 6 : 17 (ECTA)
இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். [* லூக் 3:19, 20 ]
மாற்கு 6 : 18 (ECTA)
ஏனெனில், யோவான் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லிவந்தார். [* லூக் 3:19, 20 ]
மாற்கு 6 : 19 (ECTA)
அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால், அவளால் இயலவில்லை.
மாற்கு 6 : 20 (ECTA)
ஏனெனில், யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். [* திப 24: 25 ]
மாற்கு 6 : 21 (ECTA)
ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான்.
மாற்கு 6 : 22 (ECTA)
அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான்.
மாற்கு 6 : 23 (ECTA)
“நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான். [* எஸ் 5: 3 ]
மாற்கு 6 : 24 (ECTA)
அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன்தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள்.
மாற்கு 6 : 25 (ECTA)
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள்.
மாற்கு 6 : 26 (ECTA)
இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும், விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை.
மாற்கு 6 : 27 (ECTA)
உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி,
மாற்கு 6 : 28 (ECTA)
அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
மாற்கு 6 : 29 (ECTA)
இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
மாற்கு 6 : 30 (ECTA)
ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்
(மத் 14:13-21; லூக் 9:10-17; யோவா 6:1-14)
திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.
மாற்கு 6 : 31 (ECTA)
அவர் அவர்களிடம், “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. [* மாற் 2:2; 3: 20 ]
மாற்கு 6 : 32 (ECTA)
அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
மாற்கு 6 : 33 (ECTA)
அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.
மாற்கு 6 : 34 (ECTA)
அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். [* எண் 17:17; 1 அர 22:17; 2 குறி 18:16; 34:5; செக் 10:2; மத் 9: 36 ]
மாற்கு 6 : 35 (ECTA)
இதற்குள் நெடுநேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது.
மாற்கு 6 : 36 (ECTA)
சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்” என்றனர்.
மாற்கு 6 : 37 (ECTA)
அவர் அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று பதிலளித்தார். அவர்கள், “நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு* அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?” என்று கேட்டார்கள். * ஒரு தெனாரியம் ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்.
மாற்கு 6 : 38 (ECTA)
அப்பொழுது அவர், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்” என்று கூற, அவர்களும் பார்த்து விட்டு, “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன” என்றார்கள்.
மாற்கு 6 : 39 (ECTA)
அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார்.
மாற்கு 6 : 40 (ECTA)
மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர்.
மாற்கு 6 : 41 (ECTA)
அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார்.
மாற்கு 6 : 42 (ECTA)
அனைவரும் வயிறார உண்டனர்.
மாற்கு 6 : 43 (ECTA)
பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
மாற்கு 6 : 44 (ECTA)
அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.
மாற்கு 6 : 45 (ECTA)
கடல்மீது நடத்தல்
(மத் 14:22-33; யோவா 6:15-21)
இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.
மாற்கு 6 : 46 (ECTA)
அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார்.
மாற்கு 6 : 47 (ECTA)
பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால், அவர் தனியே கரையில் இருந்தார்.
மாற்கு 6 : 48 (ECTA)
அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. * இரவு நான்கு பிரிவுகளாக (சாமங்களாக) பிரிக்கப்பட்டுக் காவல் பணி மேற்கொள்ளப்பட்டது. . இங்கே குறிக்கப்படுவது விடியற்காலை 3 மணி முதல் 6 மணி வரை உள்ள காலப்பிரிவு.
மாற்கு 6 : 49 (ECTA)
அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, “அது பேய்” என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.
மாற்கு 6 : 50 (ECTA)
ஏனெனில், எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்;
மாற்கு 6 : 51 (ECTA)
பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள்.
மாற்கு 6 : 52 (ECTA)
ஏனெனில், அப்பங்கள்பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது. [* மாற் 4: 13 ]
மாற்கு 6 : 53 (ECTA)
கெனசரேத்தில் நலமளித்தல்
(மத் 14:34-36)
அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள்.
மாற்கு 6 : 54 (ECTA)
அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து,
மாற்கு 6 : 55 (ECTA)
அச்சுற்றுப் பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள்.
மாற்கு 6 : 56 (ECTA)
மேலும், அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர். [* மாற் 5:27-28; திப 5: 15 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56