மாற்கு 4 : 1 (ECTA)
விதைப்பவர் உவமை
(மத் 13:1-9; லூக் 8:4-8) அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். [* லூக் 5:1- 3 ]
மாற்கு 4 : 2 (ECTA)
அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது;
மாற்கு 4 : 3 (ECTA)
“இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
மாற்கு 4 : 4 (ECTA)
அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.
மாற்கு 4 : 5 (ECTA)
வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.
மாற்கு 4 : 6 (ECTA)
ஆனால், கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின.
மாற்கு 4 : 7 (ECTA)
மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.
மாற்கு 4 : 8 (ECTA)
ஆனால், இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
மாற்கு 4 : 9 (ECTA)
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
மாற்கு 4 : 10 (ECTA)
உவமைகளின் நோக்கம்
(மத் 13:10-17; லூக் 8:9-10) அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள்.
மாற்கு 4 : 11 (ECTA)
அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. [* உரோ 16: 26 ]
மாற்கு 4 : 12 (ECTA)
எனவே, அவர்கள் ‘ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டு கொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்’” என்று கூறினார். [* எசா 6:9, 10 ]
மாற்கு 4 : 13 (ECTA)
விதைப்பவர் உவமையின் விளக்கம்
(மத் 13:18-23; லூக் 8:11-15) மேலும், அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?
மாற்கு 4 : 14 (ECTA)
விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார்.
மாற்கு 4 : 15 (ECTA)
வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால், அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.
மாற்கு 4 : 16 (ECTA)
பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள்.
மாற்கு 4 : 17 (ECTA)
ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.
மாற்கு 4 : 18 (ECTA)
முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்
மாற்கு 4 : 19 (ECTA)
இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.
மாற்கு 4 : 20 (ECTA)
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.
மாற்கு 4 : 21 (ECTA)
விளக்கு உவமை
(லூக் 8:16-18) இயேசு அவர்களிடம், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா? [* மத் 5:15; லூக் 11: 33 ]
மாற்கு 4 : 22 (ECTA)
வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. [* மத் 10:26; லூக் 12: 2 ]
மாற்கு 4 : 23 (ECTA)
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.
மாற்கு 4 : 24 (ECTA)
மேலும், அவர், “நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். [* மத் 7:2; லூக் 6: 38 ]
மாற்கு 4 : 25 (ECTA)
ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்று அவர்களிடம் கூறினார். [* மத் 13:12; லூக் 8:18; 19: 26 ]
மாற்கு 4 : 26 (ECTA)
முளைத்துத் தானாக வளரும் விதை உவமை தொடர்ந்து இயேசு, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்;
மாற்கு 4 : 27 (ECTA)
நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.
மாற்கு 4 : 28 (ECTA)
முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.
மாற்கு 4 : 29 (ECTA)
பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில், அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார். [* யோவே 3: 13 ]
மாற்கு 4 : 30 (ECTA)
கடுகு விதை உவமை
(மத் 13:31-32; லூக் 13:18-19) மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?
மாற்கு 4 : 31 (ECTA)
அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. * இங்கே குறிக்கப்படுவது பாலஸ்தீன நாட்டில் வளரும் ஒருவகை கடுகு மரம்..
மாற்கு 4 : 32 (ECTA)
அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்” என்று கூறினார்.
மாற்கு 4 : 33 (ECTA)
உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு
(மத் 13:34-35) அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.
மாற்கு 4 : 34 (ECTA)
உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால், தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.
மாற்கு 4 : 35 (ECTA)
காற்றையும் கடலையும் அடக்குதல்
(மத் 8:23-27; லூக் 8:22-25) அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார்.
மாற்கு 4 : 36 (ECTA)
அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.
மாற்கு 4 : 37 (ECTA)
அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.
மாற்கு 4 : 38 (ECTA)
அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
மாற்கு 4 : 39 (ECTA)
அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.
மாற்கு 4 : 40 (ECTA)
பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார்.
மாற்கு 4 : 41 (ECTA)
அவர்கள் பேரச்சம் கொண்டு, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41