மாற்கு 15 : 1 (ECTA)
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்
(மத் 27:1-2, 11-14; லூக் 23:1-5; யோவா 18:28-38) பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர்.
மாற்கு 15 : 2 (ECTA)
பிலாத்து அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்க அவர், “அவ்வாறு நீர் சொல்கிறீர்” என்று பதில் கூறினார்.
மாற்கு 15 : 3 (ECTA)
தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள்.
மாற்கு 15 : 4 (ECTA)
மீண்டும் பிலாத்து, “நீ பதில் ஒன்றும் சொல்ல மாட்டாயா? உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!” என்று அவரிடம் கேட்டான்.
மாற்கு 15 : 5 (ECTA)
இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே, பிலாத்து வியப்புற்றான்.
மாற்கு 15 : 6 (ECTA)
இயேசுவுக்கு மரண தண்டனை விதித்தல்
(மத் 27:15-26; லூக் 23:13-25; யோவா 18:39-19:16) விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு.
மாற்கு 15 : 7 (ECTA)
பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன்.
மாற்கு 15 : 8 (ECTA)
மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது.
மாற்கு 15 : 9 (ECTA)
அதற்குப் பிலாத்து, “யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
மாற்கு 15 : 10 (ECTA)
ஏனெனில், தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான்.
மாற்கு 15 : 11 (ECTA)
ஆனால், தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள்.
மாற்கு 15 : 12 (ECTA)
பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, “அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
மாற்கு 15 : 13 (ECTA)
அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும்” என்று மீண்டும் கத்தினார்கள்.
மாற்கு 15 : 14 (ECTA)
அதற்குப் பிலாத்து, “இவன் செய்த குற்றம் என்ன?” என்று கேட்க, அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.
மாற்கு 15 : 15 (ECTA)
ஆகவே, பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
மாற்கு 15 : 16 (ECTA)
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்
(மத் 27:27-31; யோவா 19:2-3) பிறகு, படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்;
மாற்கு 15 : 17 (ECTA)
அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி,
மாற்கு 15 : 18 (ECTA)
“யூதரின் அரசே வாழ்க!” என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்;
மாற்கு 15 : 19 (ECTA)
மேலும், கோலால் அவர் தலையில் அடித்து. அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர்.
மாற்கு 15 : 20 (ECTA)
அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர்.
மாற்கு 15 : 21 (ECTA)
இயேசுவைச் சிலுவையில் அறைதல்
(மத் 27:32-44; லூக் 23:26-43; யோவா 19:17-27) அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.
மாற்கு 15 : 22 (ECTA)
அவர்கள் “மண்டைஓட்டு இடம்” எனப்பொருள்படும் “கொல்கொதா” வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்;
மாற்கு 15 : 23 (ECTA)
அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால், அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை.
மாற்கு 15 : 24 (ECTA)
பிறகு, அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். [* திபா 22: 18 ]
மாற்கு 15 : 25 (ECTA)
அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி.
மாற்கு 15 : 26 (ECTA)
அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க “யூதரின் அரசன்” என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்;
மாற்கு 15 : 27 (ECTA)
அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக,
மாற்கு 15 : 28 (ECTA)
இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். [* எசா 53:12; லூக் 22: 37 ; “இவ்வாறு, ‘கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்’ என்ற மறைநூல் வாக்கு நிறைவேறிற்று″ என்னும் இவ்வசனம் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது.. ]
மாற்கு 15 : 29 (ECTA)
(29-30) அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்” என்று அவரைப் பழித்துரைத்தார்கள். [* திபா 22:7; 109:25; மாற் 14:58; யோவா 2: 19 ]
மாற்கு 15 : 31 (ECTA)
அவ்வாறே, தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, “பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
மாற்கு 15 : 32 (ECTA)
அவர்கள், “இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்” என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
மாற்கு 15 : 33 (ECTA)
இயேசு உயிர்விடுதல்
(மத் 27:45-56; லூக் 23:44-49; யோவா 19:28-30) நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.
மாற்கு 15 : 34 (ECTA)
பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, “எலோயி, எலோயி, லெமா சபக்தானி?” என்று உரக்கக் கத்தினார். “என் இறைவா, என் இறைவா
ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பது அதற்குப் பொருள். [* திபா 22: 1 ]
மாற்கு 15 : 35 (ECTA)
சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, “இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர்.
மாற்கு 15 : 36 (ECTA)
அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, “பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்” என்றார். [* திபா 69: 21 ]
மாற்கு 15 : 37 (ECTA)
இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.
மாற்கு 15 : 38 (ECTA)
அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. [* விப 31: 33 ]
மாற்கு 15 : 39 (ECTA)
அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்” என்றார்.
மாற்கு 15 : 40 (ECTA)
பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். [* லூக் 8:2, 3 ]
மாற்கு 15 : 41 (ECTA)
இயேசு கலிலேயாவில் இருந்த போது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள். [* லூக் 8:2, 3 ]
மாற்கு 15 : 42 (ECTA)
இயேசுவின் அடக்கம்
(மத் 27:57-61; லூக் 23:50-56; யோவா 19:38-42) இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால்,
மாற்கு 15 : 43 (ECTA)
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.
மாற்கு 15 : 44 (ECTA)
ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, “அவன் இதற்குள் இறந்து விட்டானா?” என்று கேட்டான்.
மாற்கு 15 : 45 (ECTA)
நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.
மாற்கு 15 : 46 (ECTA)
யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.
மாற்கு 15 : 47 (ECTA)
அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47