மாற்கு 12 : 1 (ECTA)
இயேசு அவர்களிடம் உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்; "ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார்.
மாற்கு 12 : 2 (ECTA)
பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார்.
மாற்கு 12 : 3 (ECTA)
ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
மாற்கு 12 : 4 (ECTA)
மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள்.
மாற்கு 12 : 5 (ECTA)
அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.
மாற்கு 12 : 6 (ECTA)
இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன், தம்மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார்.
மாற்கு 12 : 7 (ECTA)
அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், "இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும்" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
மாற்கு 12 : 8 (ECTA)
அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.
மாற்கு 12 : 9 (ECTA)
திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார்.
மாற்கு 12 : 10 (ECTA)
"கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று.
மாற்கு 12 : 11 (ECTA)
ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று" என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா?" என்று அவர் கேட்டார்.
மாற்கு 12 : 12 (ECTA)
தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.
மாற்கு 12 : 13 (ECTA)
பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.
மாற்கு 12 : 14 (ECTA)
அவர்கள் அவரிடம் வந்து, "போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?" என்று கேட்டார்கள்.
மாற்கு 12 : 15 (ECTA)
அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, "ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்" என்றார்.
மாற்கு 12 : 16 (ECTA)
அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், "இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "சீசருடையவை" என்றார்கள்.
மாற்கு 12 : 17 (ECTA)
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.
மாற்கு 12 : 18 (ECTA)
உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி,
மாற்கு 12 : 19 (ECTA)
"போதகரே, ஒருவர் மகப் பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார்.
மாற்கு 12 : 20 (ECTA)
சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.
மாற்கு 12 : 21 (ECTA)
இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது.
மாற்கு 12 : 22 (ECTA)
ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
மாற்கு 12 : 23 (ECTA)
அவர்கள் உயிர்த்தெழும் போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!" என்று கேட்டனர்.
மாற்கு 12 : 24 (ECTA)
அதற்கு இயேசு அவர்களிடம், "உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
மாற்கு 12 : 25 (ECTA)
இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்.
மாற்கு 12 : 26 (ECTA)
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா? "ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள் நானே" என்று கடவுள் அவரிடம் சொன்னாரே!
மாற்கு 12 : 27 (ECTA)
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று கூறினார்.
மாற்கு 12 : 28 (ECTA)
அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டார்.
மாற்கு 12 : 29 (ECTA)
அதற்கு இயேசு, "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
மாற்கு 12 : 30 (ECTA)
உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக" என்பது முதன்மையான கட்டளை.
மாற்கு 12 : 31 (ECTA)
"உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்றார்.
மாற்கு 12 : 32 (ECTA)
அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, "கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை" என்று நீர் கூறியது உண்மையே.
மாற்கு 12 : 33 (ECTA)
அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது" என்று கூறினார்.
மாற்கு 12 : 34 (ECTA)
அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
மாற்கு 12 : 35 (ECTA)
இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, "மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி?
மாற்கு 12 : 36 (ECTA)
தூய ஆவியின் தூண்டுதலால், "ஆண்டவர் என் தலைவரிடம், "நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று உரைத்தார்" எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா!
மாற்கு 12 : 37 (ECTA)
தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?" என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
மாற்கு 12 : 38 (ECTA)
இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, "மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்;
மாற்கு 12 : 39 (ECTA)
தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்;
மாற்கு 12 : 40 (ECTA)
கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே" என்று கூறினார்.
மாற்கு 12 : 41 (ECTA)
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.
மாற்கு 12 : 42 (ECTA)
அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
மாற்கு 12 : 43 (ECTA)
அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, "இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மாற்கு 12 : 44 (ECTA)
ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்" என்று அவர்களிடம் கூறினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44

BG:

Opacity:

Color:


Size:


Font: