மாற்கு 11 : 1 (ECTA)
எருசலேமில் மானிடமகன்வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல்
(மத் 21:1-11; லூக் 19:28-40; யோவா 12:12-19)
இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி,
மாற்கு 11 : 2 (ECTA)
“உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.
மாற்கு 11 : 3 (ECTA)
யாராவது உங்களிடம், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.
மாற்கு 11 : 4 (ECTA)
அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில்,
மாற்கு 11 : 5 (ECTA)
அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், “என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
மாற்கு 11 : 6 (ECTA)
அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர்.
மாற்கு 11 : 7 (ECTA)
பிறகு, அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார்.
மாற்கு 11 : 8 (ECTA)
பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர்.
மாற்கு 11 : 9 (ECTA)
முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், “ஓசன்னா!* ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! [* திபா 118: 26 ; ‘ஓசன்னா’ என்னும் எபிரேயச் சொல்லுக்கு ‘விடுவித்தருளும்’ என்பதே பொருள். . ஆனால், எபிரேய வழக்கில் வாழ்த்தைத் தெரிவிக்கும் சொல்லாகவும் அது அமைந்தது ]
மாற்கு 11 : 10 (ECTA)
வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தனர்.
மாற்கு 11 : 11 (ECTA)
அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மாற்கு 11 : 12 (ECTA)
அத்தி மரத்தைச் சபித்தல்
(மத் 21:18-19)
மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.
மாற்கு 11 : 13 (ECTA)
இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில், அது அத்திப் பழக்காலம் அல்ல.
மாற்கு 11 : 14 (ECTA)
அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
மாற்கு 11 : 15 (ECTA)
இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்
(மத் 21:12-17; லூக் 19:45-48; யோவா 2:13-22)
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
மாற்கு 11 : 16 (ECTA)
கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை.
மாற்கு 11 : 17 (ECTA)
17 “‘என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அவர்களுக்குக் கற்பித்தார்; “ஆனால், நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்றார். * எசா 56:7; எரே 7: 11.
மாற்கு 11 : 18 (ECTA)
தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். எனினும், கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள்.
மாற்கு 11 : 19 (ECTA)
மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.
மாற்கு 11 : 20 (ECTA)
பட்டுப்போன அத்தி மரம் தரும் பாடம்
(மத் 21:20-22)
காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள்.
மாற்கு 11 : 21 (ECTA)
அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, “ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று” என்றார்.
மாற்கு 11 : 22 (ECTA)
அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
மாற்கு 11 : 23 (ECTA)
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எவராவது இந்த மலையைப் பார்த்து, ‘பெயர்ந்து கடலில் விழு’ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும். [* மத் 17:20,21; லூக் 17:6; 1 கொரி 13: 2 ]
மாற்கு 11 : 24 (ECTA)
ஆகவே, உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.
மாற்கு 11 : 25 (ECTA)
நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். [* மத் 6:14, 15 ]
மாற்கு 11 : 26 (ECTA)
அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்” என்று கூறினார். [* மத் 6:14, 15 ; ‘நீங்கள் மன்னிக்காவிட்டால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார்’ என்னும் இவ்வசனம் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது.. ]
மாற்கு 11 : 27 (ECTA)
இயேசுவின் அதிகாரத்திற்குச் சவால்
(மத் 21:23-27; லூக் 20:1-8)
அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து,
மாற்கு 11 : 28 (ECTA)
“எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?” என்று கேட்டனர்.
மாற்கு 11 : 29 (ECTA)
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன்.
மாற்கு 11 : 30 (ECTA)
திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார்.
மாற்கு 11 : 31 (ECTA)
(31-32) அவர்கள், “‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். எனவே ‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமா?” என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள்.
மாற்கு 11 : 32 (ECTA)
மாற்கு 11 : 33 (ECTA)
எனவே, அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன்” என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33