மல்கியா 2 : 1 (ECTA)
“இப்பொழுது, குருக்களே! உங்களுக்கு நான் தரும் கட்டளை இதுவே: என் பெயருக்கு மாட்சி அளிக்கவேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.
மல்கியா 2 : 2 (ECTA)
எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள்மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன். ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன்” என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார்.
மல்கியா 2 : 3 (ECTA)
“இதோ உங்களை முன்னிட்டு நான் உங்கள் வழிமரபைக் கண்டிப்பேன். திருநாள் பலிவிலங்குகளின் சாணத்தை உங்கள் முகத்திலேயே வீசியடிப்பேன். அதோடு உங்களையும் தூக்கியெறிவேன்.
மல்கியா 2 : 4 (ECTA)
அப்பொழுது லேவியோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை நிலைத்திருக்கவே அக்கட்டளையை உங்களுக்குத் தந்தேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்” என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். [* எண் 3:11- 13 ]
மல்கியா 2 : 5 (ECTA)
“நான் அவனோடு செய்துகொண்ட உடன்படிக்கை, வாழ்வும் அமைதியும் தரும் உடன்படிக்கை. எனக்கு அவன் அஞ்சி நடக்கவே அவற்றை அவனுக்கு அளித்தேன். அவனும் எனக்கு அஞ்சி நடந்தான். என் பெயருக்கு நடுங்கினான். * எண் 25:12..
மல்கியா 2 : 6 (ECTA)
மெய்ப்போதனை அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. தீமை அவன் உதடுகளில் காணப்படவில்லை; அவன் என் திருமுன் அமைதியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டான்.
மல்கியா 2 : 7 (ECTA)
நெறிகேட்டிலிருந்து பலரைத் திருப்பிக்கொணர்ந்தான். ஒரு குருவின் உதடுகள் மெய்யறிவைக் காக்க வேண்டும். அவனது நாவினின்று திருச்சட்டத்தைக் கேட்க மக்கள் அவனை நாடவேண்டும். ஏனெனில் படைகளின் ஆண்டவருடைய தூதன் அவன்.
மல்கியா 2 : 8 (ECTA)
நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச்செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கிவிட்டீர்கள்.” என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.
மல்கியா 2 : 9 (ECTA)
“ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையிலும் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்; ஏனெனில், நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி ஒழுகவில்லை; உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள்.”
மல்கியா 2 : 10 (ECTA)
இறைமக்களின் நம்பிக்கைத் துரோகம் நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்?
மல்கியா 2 : 11 (ECTA)
யூதா நம்பிக்கைத் துரோகம் செய்தான்; இஸ்ரயேலிலும் எருசலேமிலும் அருவருப்பானவை நடந்தேறின. ஏனெனில், ஆண்டவர் விரும்பிய தூயகத்தைத் தீட்டுப்படுத்திவிட்டு, யூதா வேற்றுத் தெய்வத்தின் மகளை மணந்துகொண்டான்.
மல்கியா 2 : 12 (ECTA)
இதைச் செய்பவன் எவனாயிருந்தாலும் அவனுக்காகச் சான்று பகர்பவனோ, மறுமொழி கூறுபவனோ, படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வருபவனோ இல்லாதபடி, யாக்கோபின் கூடாரத்திலிருந்தும் ஆண்டவர் அழித்து விடுவாராக.
மல்கியா 2 : 13 (ECTA)
நீங்கள் செய்யும் இன்னொன்றும் உண்டு. ஆண்டவரது பலிபீடத்தைக் கண்ணீரால் நிரப்புகிறீர்கள். உங்கள் காணிக்கையை ஆண்டவர் கண்ணோக்காததாலும் அதை விருப்புடன் ஏற்றுக்கொள்ளாததாலும் நீங்கள் ஆண்டவரது பலிபீடத்தை அழுகையாலும் பெருமூச்சுகளாலும் நிரப்புகிறீர்கள்.
மல்கியா 2 : 14 (ECTA)
“இதற்குக் காரணம் யாது?” என்று வினவுகிறீர்கள். காரணம் இதுவே: உனக்கும் உன் மனைவிக்கும் உன் இளமையில் நிகழ்ந்த திருமணத்திற்கு ஆண்டவர் சாட்சியாய் இருந்தார். அப்படியிருக்க, உன் துணைவியும் உடன்படிக்கையால் உன் மனைவியுமான அவளுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் செய்தாயே.
மல்கியா 2 : 15 (ECTA)
உங்களை ஒன்றாக இணைத்தவர் அவரே, வாழ்வின் ஆவியும் அவரே. அவர் நாடுவது தம் மக்களாக வாழும் குழுந்தைகளை அன்றோ? ஆதலால், எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக.
மல்கியா 2 : 16 (ECTA)
ஏனெனில், “மணமுறிவை நான் வெறுக்கிறேன்” என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர். “மணமுறிவு செய்கிறவன் வன்முறையை மேலாடை கொண்டு மறைக்கிறான்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள்; நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.
மல்கியா 2 : 17 (ECTA)
தண்டனைத் தீர்ப்பு அண்மையில் உள்ளது உங்கள் பேச்சுகளினால் ஆண்டவரைச் சோர்வடையச் செய்யாதீர்கள். “எவ்வகையில் அவரை நாங்கள் சோர்வடையச் செய்தோம்?” என்று வினவுகிறீர்கள். “தீச்செயல் புரிவோர் அனைவரும் ஆண்டவர் கண்ணோக்கில் நல்லவரே; அவரும் அவர்கள் மட்டில் பூரிப்படைகிறார்” என்று சொல்கின்றீர்கள் அல்லது “நீதியின் கடவுள் எங்கே?” என்று கேட்கிறீர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17