லூக்கா 7 : 1 (ECTA)
நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல்
(மத் 8:5-13; யோவா 4:43-54)
இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார்.
லூக்கா 7 : 2 (ECTA)
அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.
லூக்கா 7 : 3 (ECTA)
அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.
லூக்கா 7 : 4 (ECTA)
அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்;
லூக்கா 7 : 5 (ECTA)
எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள். [* திப 10:1, 22 ]
லூக்கா 7 : 6 (ECTA)
இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்; “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.
லூக்கா 7 : 7 (ECTA)
உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால், ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
லூக்கா 7 : 8 (ECTA)
நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்.”
லூக்கா 7 : 9 (ECTA)
இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
லூக்கா 7 : 10 (ECTA)
அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.
லூக்கா 7 : 11 (ECTA)
நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர்பெறுதல் அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர்.
லூக்கா 7 : 12 (ECTA)
அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.
லூக்கா 7 : 13 (ECTA)
அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்” என்றார்.
லூக்கா 7 : 14 (ECTA)
அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றார்.
லூக்கா 7 : 15 (ECTA)
இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.
லூக்கா 7 : 16 (ECTA)
அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். [* மத் 16:14- 16 ]
லூக்கா 7 : 17 (ECTA)
அவரைப்பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.
லூக்கா 7 : 18 (ECTA)
இறையாட்சியின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்
(மத் 11:2-19)
யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து,
லூக்கா 7 : 19 (ECTA)
“வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா?” எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார்.
லூக்கா 7 : 20 (ECTA)
அவர்கள் அவரிடம் வந்து, “‘வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?’ எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்று சொன்னார்கள்.
லூக்கா 7 : 21 (ECTA)
அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார்.
லூக்கா 7 : 22 (ECTA)
அதற்கு அவர் மறுமொழியாக, “நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. [* எசா 35:5,6; 61:1; திப 3: 8 ]
லூக்கா 7 : 23 (ECTA)
என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்” என்றார்.
லூக்கா 7 : 24 (ECTA)
யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்ற பிறகு இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்; “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
லூக்கா 7 : 25 (ECTA)
இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த ஒரு மனிதரையா? பளிச்சிடும் ஆடை அணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரச மாளிகையில் அல்லவா இருக்கின்றனர்!
லூக்கா 7 : 26 (ECTA)
பின்னர், யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
லூக்கா 7 : 27 (ECTA)
‘இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது. [* மலா 3: 1 ]
லூக்கா 7 : 28 (ECTA)
மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆயினும், இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
லூக்கா 7 : 29 (ECTA)
திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர். [* மத் 21:32; லூக் 3: 12 ]
லூக்கா 7 : 30 (ECTA)
ஆனால், பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள். [* மத் 21:32; லூக் 3: 12 ]
லூக்கா 7 : 31 (ECTA)
பின்னர் இயேசு, “இத் தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்?
லூக்கா 7 : 32 (ECTA)
இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை’ என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.
லூக்கா 7 : 33 (ECTA)
எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவுமில்லை; திராட்சை மது குடிக்கவுமில்லை; அவரை, ‘பேய் பிடித்தவன்’ என்றீர்கள்.
லூக்கா 7 : 34 (ECTA)
மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்.
லூக்கா 7 : 35 (ECTA)
எனினும், ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று” என்றார்.
லூக்கா 7 : 36 (ECTA)
பாவியான ஒரு பெண் நறுமணத் தைலம் பூசுதல்
(மத் 26:6-13; மாற் 14:3-9; யோவா 12:1-8)
பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
லூக்கா 7 : 37 (ECTA)
அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். [* மத் 26:7; மாற் 14:3; யோவா 12: 3 ]
லூக்கா 7 : 38 (ECTA)
இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். [* மத் 26:7; மாற் 14:3; யோவா 12: 3 ]
லூக்கா 7 : 39 (ECTA)
அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
லூக்கா 7 : 40 (ECTA)
இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார்.
லூக்கா 7 : 41 (ECTA)
அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். * ஒரு தெனாரியம் என்பது ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்..
லூக்கா 7 : 42 (ECTA)
கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார்.
லூக்கா 7 : 43 (ECTA)
சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.
லூக்கா 7 : 44 (ECTA)
பின்பு, அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.
லூக்கா 7 : 45 (ECTA)
நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.
லூக்கா 7 : 46 (ECTA)
நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
லூக்கா 7 : 47 (ECTA)
ஆகவே, நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில், இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார்.
லூக்கா 7 : 48 (ECTA)
பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
லூக்கா 7 : 49 (ECTA)
“பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
லூக்கா 7 : 50 (ECTA)
இயேசு அப்பெண்ணை நோக்கி, “உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50