லூக்கா 3 : 1 (ECTA)
3.திருப்பணிக்குத் தயார் செய்தல்திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்
(மத் 3:1-12; மாற் 1:1-8; யோவா 1:19-28)
திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.
லூக்கா 3 : 2 (ECTA)
அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.
லூக்கா 3 : 3 (ECTA)
“பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.
லூக்கா 3 : 4 (ECTA)
இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது:
‘ஆண்டவருக்காக வழியை
ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; [* எசா 40:3- 5 ]
லூக்கா 3 : 5 (ECTA)
பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். [* எசா 40:3- 5 ]
லூக்கா 3 : 6 (ECTA)
மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்’.” [* எசா 40:3- 5 ]
லூக்கா 3 : 7 (ECTA)
தம்மிடம் திருமுழுக்குப் பெறப் புறப்பட்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு யோவான், “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?
லூக்கா 3 : 8 (ECTA)
மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். [* யோவா 8: 33 ]
லூக்கா 3 : 9 (ECTA)
ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்” என்றார். [* மத் 7: 19 ]
லூக்கா 3 : 10 (ECTA)
அப்போது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். [* திப 2: 37 ]
லூக்கா 3 : 11 (ECTA)
அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” என்றார்.
லூக்கா 3 : 12 (ECTA)
வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். [* லூக் 7: 29 ]
லூக்கா 3 : 13 (ECTA)
அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” என்றார்.
லூக்கா 3 : 14 (ECTA)
படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார்.
லூக்கா 3 : 15 (ECTA)
அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.
லூக்கா 3 : 16 (ECTA)
யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால், என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
லூக்கா 3 : 17 (ECTA)
அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.
லூக்கா 3 : 18 (ECTA)
மேலும், பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
லூக்கா 3 : 19 (ECTA)
குறுநில மன்னன் ஏரோது தன் சகோதரன் மனைவியாகிய ஏரோதியாவை வைத்திருந்ததன் பொருட்டும் அவன் இழைத்த மற்ற எல்லாத் தீச்செயல்கள் பொருட்டும் யோவான் அவனைக் கண்டித்தார். [* மத் 14:3,4; 6:17, 18 ]
லூக்கா 3 : 20 (ECTA)
எனவே, அவன் தான் செய்த தீச்செயல்கள் எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலும் அடைத்தான். [* மத் 14:3,4; 6:17, 18 ]
லூக்கா 3 : 21 (ECTA)
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13-17; மாற் 1:9-11)
மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.
லூக்கா 3 : 22 (ECTA)
தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்
பொருட்டு நான் பூரிப்படைகிறேன்”
என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. * திபா 2:27; எசா 42:1; மத் 3:17; மாற் 1:11; லூக் 9:35..
லூக்கா 3 : 23 (ECTA)
இயேசுவின் மூதாதையர் பட்டியல்
(மத் 1:1-17)
இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது; அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்;
லூக்கா 3 : 24 (ECTA)
ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்;
லூக்கா 3 : 25 (ECTA)
யோசேப்பு மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா ஆமோசின் மகன்; ஆமோசு நாகூமின் மகன்; நாகூம் எஸ்லியின் மகன்; எஸ்லி நாகாயின் மகன்;
லூக்கா 3 : 26 (ECTA)
நாகாய் மாத்தின் மகன்; மாத்து மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா செமேயின் மகன்; செமேய் யோசேக்கின் மகன்; யோசேக்கு யோதாவின் மகன்;
லூக்கா 3 : 27 (ECTA)
யோதா யோவனானின் மகன்; யோவனான் இரேசாவின் மகன்; இரேசா செருபாபேலின் மகன்; செருபாபேல் செயல்தியேலின் மகன்;
லூக்கா 3 : 28 (ECTA)
செயல்தியேல் நேரியின் மகன்; நேரி மெல்கியின் மகன்; மெல்கி அத்தியின் மகன்; அத்தி கோசாமின் மகன்; கோசாம் எல்மதாமின் மகன்; எல்மதாம் ஏரின் மகன்; ஏர் ஏசுவின் மகன்;
லூக்கா 3 : 29 (ECTA)
ஏசு எலியேசரின் மகன்; எலியேசர் யோரிமின் மகன்; யோரிம் மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்;
லூக்கா 3 : 30 (ECTA)
லேவி சிமியோனின் மகன்; சிமியோன் யூதாவின் மகன்; யூதா யோசேப்பின் மகன்; யோசேப்பு யோனாமின் மகன்; யோனாம் எலியாக்கிமின் மகன்; எலியாக்கிம் மெலேயாவின் மகன்;
லூக்கா 3 : 31 (ECTA)
மெலேயா மென்னாவின் மகன்; மென்னா மத்தத்தாவின் மகன்; மத்தத்தா நாத்தானின் மகன்; நாத்தான் தாவீதின் மகன்;
லூக்கா 3 : 32 (ECTA)
தாவீது ஈசாயின் மகன்; ஈசாய் ஓபேதின் மகன்; ஓபேது போவாசின் மகன்; போவாசு சாலாவின் மகன்; சாலா நகசோனின் மகன்; நகசோன் அம்மினதாபின் மகன்;
லூக்கா 3 : 33 (ECTA)
அம்மினதாபு அத்மினின் மகன்; அத்மின் ஆர்னியின் மகன்; ஆர்னி எட்சரோனின் மகன்; எட்சரோன் பெரேட்சின் மகன்; பெரேட்சு யூதாவின் மகன்; யூதா யாக்கோபின் மகன்;
லூக்கா 3 : 34 (ECTA)
யாக்கோபு ஈசாக்கின் மகன்; ஈசாக்கு ஆபிரகாமின் மகன்; ஆபிரகாம் தெராகின் மகன்; தெராகு நாகோரின் மகன்; தெராகு நாகோரின் மகன்.
லூக்கா 3 : 35 (ECTA)
நாகோர் செரூகின் மகன்; செரூகு இரகுவின் மகன்; இரகு பெலேகின் மகன்; பெலேகு ஏபேரின் மகன்; ஏபேர் சேலாவின் மகன்;
லூக்கா 3 : 36 (ECTA)
சேலா காயனாமின் மகன்; காயனாம் அர்பகசாதின் மகன்; அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன்; நோவா இலாமேக்கின் மகன்;
லூக்கா 3 : 37 (ECTA)
இலாமேக்கு மெத்துசேலாவின் மகன்; மெத்துசேலா ஏனோக்கின் மகன்; ஏனோக்கு எரேதின் மகன்; எரேது மகலலேலின் மகன்; மகலலேல் கேனானின் மகன்; கேனான் ஏனோசின் மகன்;
லூக்கா 3 : 38 (ECTA)
ஏனோசு சேத்தின் மகன்; சேத்து ஆதாமின் மகன்; ஆதாம் கடவுளின் மகன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38