லூக்கா 23 : 1 (ECTA)
திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.
லூக்கா 23 : 2 (ECTA)
"இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்" என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
லூக்கா 23 : 3 (ECTA)
பிலாத்து அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்க, அவர், "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று பதில் கூறினார்.
லூக்கா 23 : 4 (ECTA)
பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" என்று கூறினான்.
லூக்கா 23 : 5 (ECTA)
ஆனால் அவர்கள், "இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்" என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
லூக்கா 23 : 6 (ECTA)
இதைக் கேட்ட பிலாத்து, "இவன் கலிலேயனா?" என்று கேட்டான்;
லூக்கா 23 : 7 (ECTA)
அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.
லூக்கா 23 : 8 (ECTA)
இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான்.
லூக்கா 23 : 9 (ECTA)
அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.
லூக்கா 23 : 10 (ECTA)
அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.
லூக்கா 23 : 11 (ECTA)
ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான்.
லூக்கா 23 : 12 (ECTA)
அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.
லூக்கா 23 : 13 (ECTA)
பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.
லூக்கா 23 : 14 (ECTA)
அவர்களை நோக்கி, "மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை.
லூக்கா 23 : 15 (ECTA)
ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு.
லூக்கா 23 : 16 (ECTA)
எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்" என்றான்.
லூக்கா 23 : 17 (ECTA)
(விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.)
லூக்கா 23 : 18 (ECTA)
திரண்டிருந்த மக்கள் அனைவரும், "இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்" என்று கத்தினர்.
லூக்கா 23 : 19 (ECTA)
பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டு கொலை செய்தத்காக சிறையிலிடப்பட்டவன்.
லூக்கா 23 : 20 (ECTA)
பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.
லூக்கா 23 : 21 (ECTA)
ஆனால் அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள்.
லூக்கா 23 : 22 (ECTA)
மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, "இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்" என்றான்.
லூக்கா 23 : 23 (ECTA)
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.
லூக்கா 23 : 24 (ECTA)
அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.
லூக்கா 23 : 25 (ECTA)
கலகத்தில் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.
லூக்கா 23 : 26 (ECTA)
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள்.
லூக்கா 23 : 27 (ECTA)
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.
லூக்கா 23 : 28 (ECTA)
இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.
லூக்கா 23 : 29 (ECTA)
ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது "மலடிகள் பேறுபெற்றோர்" என்றும் "பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்" என்றும் சொல்வார்கள்.
லூக்கா 23 : 30 (ECTA)
அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, "எங்கள் மேல் விழுங்கள்" எனவும் குன்றுகளைப் பார்த்து, "எங்களை மூடிக்கொள்ளுங்கள்" எனவும் சொல்வார்கள்.
லூக்கா 23 : 31 (ECTA)
பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!" என்றார்.
லூக்கா 23 : 32 (ECTA)
வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.
லூக்கா 23 : 33 (ECTA)
மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
லூக்கா 23 : 34 (ECTA)
அப்போது (இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்.) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.
லூக்கா 23 : 35 (ECTA)
மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், "பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்" என்று கேலிசெய்தார்கள்.
லூக்கா 23 : 36 (ECTA)
படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,
லூக்கா 23 : 37 (ECTA)
"நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர்.
லூக்கா 23 : 38 (ECTA)
"இவன் யூதரின் அரசன்" என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
லூக்கா 23 : 39 (ECTA)
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று "என்று அவரைப் பழித்துரைத்தான்.
லூக்கா 23 : 40 (ECTA)
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.
லூக்கா 23 : 41 (ECTA)
நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!" என்று பதிலுரைத்தான்.
லூக்கா 23 : 42 (ECTA)
பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான்.
லூக்கா 23 : 43 (ECTA)
அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.
லூக்கா 23 : 44 (ECTA)
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
லூக்கா 23 : 45 (ECTA)
கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
லூக்கா 23 : 46 (ECTA)
"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.
லூக்கா 23 : 47 (ECTA)
இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், "இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
லூக்கா 23 : 48 (ECTA)
இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.
லூக்கா 23 : 49 (ECTA)
அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
லூக்கா 23 : 50 (ECTA)
யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர்.
லூக்கா 23 : 51 (ECTA)
தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.
லூக்கா 23 : 52 (ECTA)
அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.
லூக்கா 23 : 53 (ECTA)
அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.
லூக்கா 23 : 54 (ECTA)
அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம்.
லூக்கா 23 : 55 (ECTA)
கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு,
லூக்கா 23 : 56 (ECTA)
திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56

BG:

Opacity:

Color:


Size:


Font: