லூக்கா 21 : 1 (ECTA)
ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை
(மாற் 12:41-44) இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.
லூக்கா 21 : 2 (ECTA)
வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை* அதில் போடுவதைக் கண்டார். * இங்கு ‘காசு’ என்பது ஒரு தெனாரியத்தில் 1/128 பகுதி மதிப்புடைய ‘லெப்டான்’ ஆகும்..
லூக்கா 21 : 3 (ECTA)
அவர் “இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும்விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
லூக்கா 21 : 4 (ECTA)
ஏனெனில், அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.
லூக்கா 21 : 5 (ECTA)
எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்
(மத் 24:1-2; மாற் 13:1-2) கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.
லூக்கா 21 : 6 (ECTA)
இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.
லூக்கா 21 : 7 (ECTA)
வரப்போகும் கேடுபற்றி அறிவித்தல்
(மத் 24:3-14; மாற் 13:3-13) அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.
லூக்கா 21 : 8 (ECTA)
அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில், பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.
லூக்கா 21 : 9 (ECTA)
ஆனால், போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில், இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால், உடனே முடிவு வராது” என்றார்.
லூக்கா 21 : 10 (ECTA)
மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். [* தானி 9: 2 ]
லூக்கா 21 : 11 (ECTA)
பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.
லூக்கா 21 : 12 (ECTA)
இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். [* மத் 10:17-22; லூக் 12:11,12; யோவா 15: 20 ]
லூக்கா 21 : 13 (ECTA)
எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். [* மத் 10:17-22; லூக் 12:11,12; யோவா 15: 20 ]
லூக்கா 21 : 14 (ECTA)
அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். [* மத் 10:17-22; லூக் 12:11,12; யோவா 15: 20 ]
லூக்கா 21 : 15 (ECTA)
ஏனெனில், நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. [* மத் 10:17-22; லூக் 12:11,12; யோவா 15: 20 ]
லூக்கா 21 : 16 (ECTA)
ஆனால், உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.
லூக்கா 21 : 17 (ECTA)
என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.
லூக்கா 21 : 18 (ECTA)
இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.
லூக்கா 21 : 19 (ECTA)
நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.
லூக்கா 21 : 20 (ECTA)
எருசலேம் அழிவுபற்றிய முன்னறிவிப்பு
(மத் 24:15-21; மாற் 13:14-19) “எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள்.
லூக்கா 21 : 21 (ECTA)
அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம்.
லூக்கா 21 : 22 (ECTA)
ஏனெனில், அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும். [* ஓசே 9:7; 12:24; திவெ 11: 2 ]
லூக்கா 21 : 23 (ECTA)
அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில், மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள் மீது கடவுளின் சினமும் வரும்.
லூக்கா 21 : 24 (ECTA)
அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும் வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.
லூக்கா 21 : 25 (ECTA)
மானிடமகன் வருகை
(மத் 24:29-31; மாற் 13:24-27) “மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். [* எசா 13:10; எசே 32:7; யோவே 2:31; திவெ 6:12, 13 ]
லூக்கா 21 : 26 (ECTA)
உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.
லூக்கா 21 : 27 (ECTA)
அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். [* தானி 7:13; திவெ 1: 7 ]
லூக்கா 21 : 28 (ECTA)
இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”
லூக்கா 21 : 29 (ECTA)
அத்தி மர உவமை
(மத் 24:32-35; மாற் 13:28-31) இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமை சொன்னார்: “அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள்.
லூக்கா 21 : 30 (ECTA)
அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.
லூக்கா 21 : 31 (ECTA)
அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
லூக்கா 21 : 32 (ECTA)
அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
லூக்கா 21 : 33 (ECTA)
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.”
லூக்கா 21 : 34 (ECTA)
மானிடமகன் வரும் நாள் (34-35) மேலும் இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.
லூக்கா 21 : 36 (ECTA)
ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.
லூக்கா 21 : 37 (ECTA)
இயேசு பகல் நேரங்களில் கோவிலில் கற்பித்துவந்தார். இரவு நேரங்களிலோ ஒலிவம் என்று வழங்கப்பட்ட மலைக்குச் சென்று தங்கி வந்தார். [* லூக் 19: 47 ]
லூக்கா 21 : 38 (ECTA)
எல்லா மக்களும் கோவிலில் அவர் சொல்வதைக் கேட்கக் காலையிலேயே அவரிடம் வருவார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38