லூக்கா 17 : 1 (ECTA)
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது; "பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு!
லூக்கா 17 : 2 (ECTA)
அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வதைவிட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.
லூக்கா 17 : 3 (ECTA)
எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள்.
லூக்கா 17 : 4 (ECTA)
ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, "நான் மனம் மாறிவிட்டேன்" என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள். "
லூக்கா 17 : 5 (ECTA)
திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" என்று கேட்டார்கள்.
லூக்கா 17 : 6 (ECTA)
அதற்கு ஆண்டவர் கூறியது; "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, "நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்" எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
லூக்கா 17 : 7 (ECTA)
"உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், "நீர் உடனே வந்து உணவருந்த அமரும்" என்று உங்களில் எவராவது சொல்வாரா?
லூக்கா 17 : 8 (ECTA)
மாறாக, "எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்" என்று சொல்வாரல்லவா?
லூக்கா 17 : 9 (ECTA)
தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?
லூக்கா 17 : 10 (ECTA)
அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், "நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்" எனச் சொல்லுங்கள். "
லூக்கா 17 : 11 (ECTA)
இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
லூக்கா 17 : 12 (ECTA)
ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,
லூக்கா 17 : 13 (ECTA)
"ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்" என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
லூக்கா 17 : 14 (ECTA)
அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.
லூக்கா 17 : 15 (ECTA)
அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;
லூக்கா 17 : 16 (ECTA)
அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
லூக்கா 17 : 17 (ECTA)
இயேசு, அவரைப் பார்த்து, "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
லூக்கா 17 : 18 (ECTA)
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!" என்றார்.
லூக்கா 17 : 19 (ECTA)
பின்பு அவரிடம், "எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது" என்றார்.
லூக்கா 17 : 20 (ECTA)
இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.
லூக்கா 17 : 21 (ECTA)
இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது" என்றார்.
லூக்கா 17 : 22 (ECTA)
பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது; "ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.
லூக்கா 17 : 23 (ECTA)
அவர்கள் உங்களிடம், "இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!" என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின் தொடரவும் வேண்டாம்.
லூக்கா 17 : 24 (ECTA)
வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிடமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.
லூக்கா 17 : 25 (ECTA)
ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.
லூக்கா 17 : 26 (ECTA)
நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும்.
லூக்கா 17 : 27 (ECTA)
நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.
லூக்கா 17 : 28 (ECTA)
அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள்.
லூக்கா 17 : 29 (ECTA)
லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன.
லூக்கா 17 : 30 (ECTA)
மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
லூக்கா 17 : 31 (ECTA)
"அந்நாளில் வீட்டின் மேல் தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம்.
லூக்கா 17 : 32 (ECTA)
லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
லூக்கா 17 : 33 (ECTA)
தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர்.
லூக்கா 17 : 34 (ECTA)
நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.
லூக்கா 17 : 35 (ECTA)
இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
லூக்கா 17 : 36 (ECTA)
(இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். ")
லூக்கா 17 : 37 (ECTA)
அவர்கள் இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, இது எங்கே நிகழும்?" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37

BG:

Opacity:

Color:


Size:


Font: