லூக்கா 12 : 1 (ECTA)
அஞ்சாதீர்கள்
(மத் 10:28-31)
ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். [* மத் 16:6; மாற் 8: 15 ]
லூக்கா 12 : 2 (ECTA)
வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. [* மத் 4:22; லூக் 8: 17 ]
லூக்கா 12 : 3 (ECTA)
ஆகவே, நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.
லூக்கா 12 : 4 (ECTA)
என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்; உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
லூக்கா 12 : 5 (ECTA)
நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரமுள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
லூக்கா 12 : 6 (ECTA)
இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும், அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே.
லூக்கா 12 : 7 (ECTA)
உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.
லூக்கா 12 : 8 (ECTA)
மக்கள் முன்னிலையில் கிறிஸ்துவை ஏற்று அறிக்கையிடுதல்
(மத் 10:32-33; 12:32; 10:19-20)
“நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார்.
லூக்கா 12 : 9 (ECTA)
மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்.
லூக்கா 12 : 10 (ECTA)
மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். [* மத் 12:32; மாற் 3: 29 ]
லூக்கா 12 : 11 (ECTA)
தொழுகைக் கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதிலளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். [* மத் 10:19,20; மாற் 13:11; லூக் 21:14, 15 ]
லூக்கா 12 : 12 (ECTA)
ஏனெனில், நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார். [* மத் 10:19,20; மாற் 13:11; லூக் 21:14, 15 ]
லூக்கா 12 : 13 (ECTA)
அறிவற்ற செல்வன் உவமை கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார்.
லூக்கா 12 : 14 (ECTA)
அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார்.
லூக்கா 12 : 15 (ECTA)
பின்பு அவர் அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.
லூக்கா 12 : 16 (ECTA)
அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
லூக்கா 12 : 17 (ECTA)
அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான்.
லூக்கா 12 : 18 (ECTA)
‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’.
லூக்கா 12 : 19 (ECTA)
பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
லூக்கா 12 : 20 (ECTA)
ஆனால், கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார்.
லூக்கா 12 : 21 (ECTA)
கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”
லூக்கா 12 : 22 (ECTA)
கவலை வேண்டாம்
(மத் 6:25-34, 19-21)
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர்.
லூக்கா 12 : 23 (ECTA)
உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
லூக்கா 12 : 24 (ECTA)
காகங்களைக் கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?
லூக்கா 12 : 25 (ECTA)
கவலைப்படுவதால் உங்களுள் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?
லூக்கா 12 : 26 (ECTA)
ஆதலால், மிகச் சிறிய ஒரு செயலைக் கூடச் செய்யமுடியாத நீங்கள் மற்றவை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?
லூக்கா 12 : 27 (ECTA)
காட்டுச் செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கூர்ந்து கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை; ஆனால், சாலமோன்கூடத் தம் மேன்மையிலெல்லாம் அவற்றில் ஒன்றைப்போல் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். [* 1 அர 10:4-7; 2 குறி 9:3- 6 ]
லூக்கா 12 : 28 (ECTA)
“நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறிப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்வார் அல்லவா!
லூக்கா 12 : 29 (ECTA)
ஆதலால், எதை உண்பது, எதைக் குடிப்பது என நீங்கள் தேடிக்கொண்டிருக்க வேண்டாம்; கவலை கொண்டிருக்கவும் வேண்டாம்.
லூக்கா 12 : 30 (ECTA)
ஏனெனில், உலகு சார்ந்த பிற இனத்தவரே இவற்றையெல்லாம் தேடுவர். உங்களுக்கு இவை தேவையென உங்கள் தந்தைக்குத் தெரியும்.
லூக்கா 12 : 31 (ECTA)
நீங்கள் அவருடைய ஆட்சியை நாடுங்கள்; அப்பொழுது இவை உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.”
லூக்கா 12 : 32 (ECTA)
“சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.
லூக்கா 12 : 33 (ECTA)
உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.
லூக்கா 12 : 34 (ECTA)
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
லூக்கா 12 : 35 (ECTA)
விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
(மத் 24:45-51)
“உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். [* மத் 25:1- 13 ]
லூக்கா 12 : 36 (ECTA)
திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். [* மாற் 13:34-36; 1 பேது 1: 13 ]
லூக்கா 12 : 37 (ECTA)
தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
லூக்கா 12 : 38 (ECTA)
தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.
லூக்கா 12 : 39 (ECTA)
எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். [* மத் 24:43, 44 ]
லூக்கா 12 : 40 (ECTA)
நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.” [* மத் 24:43, 44 ]
லூக்கா 12 : 41 (ECTA)
அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார்.
லூக்கா 12 : 42 (ECTA)
அதற்கு ஆண்டவர் கூறியது: “தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?
லூக்கா 12 : 43 (ECTA)
தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.
லூக்கா 12 : 44 (ECTA)
அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.
லூக்கா 12 : 45 (ECTA)
ஆனால், அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்
லூக்கா 12 : 46 (ECTA)
அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.
லூக்கா 12 : 47 (ECTA)
தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.
லூக்கா 12 : 48 (ECTA)
ஆனால், அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”
லூக்கா 12 : 49 (ECTA)
பிளவு ஏற்படுதல்
(மத் 10:34-36)
“மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
லூக்கா 12 : 50 (ECTA)
ஆயினும், நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். [* மாற் 10: 38 ]
லூக்கா 12 : 51 (ECTA)
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
லூக்கா 12 : 52 (ECTA)
இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர்.
லூக்கா 12 : 53 (ECTA)
தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.” * மீக் 7:6..
லூக்கா 12 : 54 (ECTA)
காலத்தைக் கண்டுணர்தல்
(மத் 16:2-3)
இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழைவரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது.
லூக்கா 12 : 55 (ECTA)
தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது.
லூக்கா 12 : 56 (ECTA)
வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?
லூக்கா 12 : 57 (ECTA)
எதிரியோடு உடன்பாடு செய்துகொள்தல்
(மத் 5:25-26)
“நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?
லூக்கா 12 : 58 (ECTA)
நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார்.
லூக்கா 12 : 59 (ECTA)
கடைசிக் காசுவரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறமாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59