லேவியராகமம் 22 : 1 (ECTA)
காணிக்கைகளின் தூய்மை ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 22 : 2 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் எனக்கு நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்களால் ஆரோனும் அவன் பிள்ளைகளும் என் பெயரை இழிவுபடுத்தாதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறு. நானே ஆண்டவர்.
லேவியராகமம் 22 : 3 (ECTA)
அவர்களிடம் நீ கூற வேண்டியது: உங்கள் வழிமரபினருள் எவனும் தீட்டுப்பட்டிருந்து, இஸ்ரயேல் மக்கள் நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்கள் அருகில் வந்தால், அவன் என் முன் இராதபடி அழிவான். நானே ஆண்டவர்.
லேவியராகமம் 22 : 4 (ECTA)
ஆரோன் குடும்பத்தினரில் தொழுநோயாளியோ விந்து ஒழுக்கு உடையவனோ இருந்தால் குணமாகும் மட்டும் அவன் தூய பொருள்களை உண்ண வேண்டாம். பிணத்தால் தீட்டானதைத் தொட்டவனும் விந்தொழுகியவனும்,
லேவியராகமம் 22 : 5 (ECTA)
தீட்டு என ஒதுக்கிய ஊர்வனவற்றையோ, தீட்டான மனிதரையோ தொட்டவனும்,
லேவியராகமம் 22 : 6 (ECTA)
மாலைமட்டும் தீட்டுடன் இருப்பான். அவன் தூய பொருள்களை உண்ணாமல் தன் உடலைத் தண்ணீரால் கழுவ வேண்டும்.
லேவியராகமம் 22 : 7 (ECTA)
கதிரவன் மறைந்தபின் தூய்மை அடைவான், அப்பொழுது அவன் தூய பொருள்களை உண்ணலாம். ஏனெனில், அது அவன் உணவு.
லேவியராகமம் 22 : 8 (ECTA)
தானாய்ச் செத்ததையும், பீறிக் கிழிக்கப்பட்டதையும் அவன் உண்டு தீட்டாக வேண்டாம். நானே ஆண்டவர்.
லேவியராகமம் 22 : 9 (ECTA)
எனவே, தூய்மையானதைத் தீட்டாக்குவதால் தங்கள் மேல் பாவத்தைச் சுமத்திக்கொண்டு சாகாதவாறு, நான் ஒப்படைத்தவற்றை அவர்கள் காப்பார்களாக! நானே அவர்களைத் தூயோராக்கும் ஆண்டவர்!
லேவியராகமம் 22 : 10 (ECTA)
வேற்றினத்தார் எவரும் தூய பொருள்களை உண்ண வேண்டாம். குரு வீட்டிலுள்ள விருந்தினரும் கூலிக்காக வேலை செய்பவரும் தூய பொருளை உண்ண வேண்டாம்.
லேவியராகமம் 22 : 11 (ECTA)
குருவின் பணம் கொடுத்து வாங்கிய அடிமையும், அவன் வீட்டில் பிறந்தவனும் குருவின் உணவை உண்ணலாம்.
லேவியராகமம் 22 : 12 (ECTA)
குருவின் மணமுடித்த மகள் தூயபொருள்களை உண்ண வேண்டாம்.
லேவியராகமம் 22 : 13 (ECTA)
குருவின் குழந்தைகளற்ற கைம்பெண் அல்லது மணவிலக்குப் பெற்றவளான மகள் திரும்பிவந்து இளமையிலிருந்து தன் தந்தையோடு வாழ்ந்ததுபோல வாழ்ந்தாளாயின், தந்தையின் உணவில் பங்கு பெறலாம். ஆனால், பொது நிலையர் எவரும் அதை உண்ணலாகாது.
லேவியராகமம் 22 : 14 (ECTA)
தூய பொருளை அறியாமல் உண்பவர். அப்பொருளின் விலையில் ஐந்தில் ஒரு பங்கைக் கூடுதலாகக் கொடுத்து தூய பொருளுடன் குருவுக்குக் கொடுக்க வேண்டும்.
லேவியராகமம் 22 : 15 (ECTA)
ஆண்டவருக்கு இஸ்ரயேலர் நேர்ச்சையாக அளிக்கும் புனிதப் பொருள்களைக் குருக்கள் இழிவுக்கு உள்ளாக்கக்கூடாது.
லேவியராகமம் 22 : 16 (ECTA)
அப்புனிதப் பொருள்களை உண்டு இழிவுக்கு உள்ளாக்குவதால், அவர்கள் தண்டம் செலுத்தும் குற்றப்பழிக்கு ஆளாவர். ஏனெனில், நானே அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்!
லேவியராகமம் 22 : 17 (ECTA)
ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 22 : 18 (ECTA)
“ஆரோன், அவன் புதல்வர் மற்றும் இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூற வேண்டியது; இஸ்ரயேலரோ இஸ்ரயேலரிடையே தங்கியிருக்கும் அந்நியர்களோ தங்கள் பொருத்தனைக்கேற்ப அல்லது ஆர்வமிகுதியால் எரிபலியாகச் செலுத்தும் காணிக்கை
லேவியராகமம் 22 : 19 (ECTA)
அவரவர் விருப்பப்படியே மாடு, ஆடு, வெள்ளாடு எவற்றிலேனும் பழுதற்ற ஓர் ஆணாய் இருப்பதாக!
லேவியராகமம் 22 : 20 (ECTA)
பழுதான எதையும் உங்களுக்காகச் செலுத்தலாகாது. அது ஆண்டவருக்கு உகந்தது அன்று. * இச 17:1..
லேவியராகமம் 22 : 21 (ECTA)
சிறப்புப் பொருத்தனையோ, தன்னார்வக் காணிக்கையோ மாடுகளில் அல்லது ஆடுகளில் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினால், அது ஏற்கத்தக்கதாக அமைய, மாசுமறுவற்றதாய் இருத்தல் வேண்டும்.
லேவியராகமம் 22 : 22 (ECTA)
குருடு, ஊனம், நெரிவு, கழிச்சல் நோய், சொறி, சிரங்கு முதலிய குறைபாடுள்ளவற்றைச் செலுத்தாமலும் அவற்றை ஆண்டவரின் பலிபீடத்தில் எரிபலியாக்காமலும் இருப்பீர்களாக.
லேவியராகமம் 22 : 23 (ECTA)
உறுப்பு ஒழுங்கற்ற ஆடோ, மாடோ, மகிழ்வுப்பலி ஆகலாம். ஆனால், அது பொருத்தனைக்கு ஏற்றதன்று.
லேவியராகமம் 22 : 24 (ECTA)
விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும், காயம்பட்டதையும் விதை அடிக்கப்பட்டதையும் ஆண்டவருக்கு நீங்கள் காணிக்கை ஆக்காமலும் உங்கள் நாட்டில் பலியிடாமலும் இருப்பீர்களாக!
லேவியராகமம் 22 : 25 (ECTA)
வேற்றின மக்களிடமிருந்து இத்தகையவற்றை வாங்கி உங்கள் கடவுளுக்கு உணவுப் படையலாகச் செலுத்தாதீர். அவற்றில் கேடும் பழுதும் உள்ளன. அவை உங்கள் சார்பாக எற்றுக்கொள்ளப்பட மாட்டா.”
லேவியராகமம் 22 : 26 (ECTA)
ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 22 : 27 (ECTA)
ஒரு கன்று, செம்மறி, அல்லது வெள்ளாட்டுக்குட்டி பிறந்தால், ஏழு நாளளவும் தன் தாயிடம் அது இருக்கட்டும். எட்டாம் நாளிலிருந்து அது ஆண்டவருக்குரிய எரிபலியாகச் செலுத்தப்படும். இது விரும்பத்தக்கது.
லேவியராகமம் 22 : 28 (ECTA)
பசுவையும் அதன் கன்றையும் அல்லது ஆட்டையும் அதன் குட்டியையும் ஒரே நாளில் பலியிட வேண்டாம்.
லேவியராகமம் 22 : 29 (ECTA)
நன்றிப்பலியை ஆண்டவருக்குச் செலுத்தினால், அது உங்கள் சார்பாக ஏற்கத் தகுந்ததாக இருக்கட்டும்.
லேவியராகமம் 22 : 30 (ECTA)
அன்றே அது உண்ணப்படவேண்டும். விடியற்காலை மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வேண்டாம். நானே ஆண்டவர்!
லேவியராகமம் 22 : 31 (ECTA)
கட்டளைகளைக் கடைப்பிடித்து அவற்றிற்கேற்ப ஒழுகுங்கள். நானே ஆண்டவர்!
லேவியராகமம் 22 : 32 (ECTA)
இஸ்ரயேல் மக்களிடையே நான் தூயவராகக் கருதப்படுமாறு, என் திருப்பெயரை இழிவுப் படுத்தாதிருங்கள். நானே உங்களைப் புனிதர் ஆக்கும் ஆண்டவர்!
லேவியராகமம் 22 : 33 (ECTA)
உங்களுக்குக் கடவுளாய் இருக்குமாறு உங்களை எகிப்தினின்று அழைத்து வந்தேன். நானே ஆண்டவர்! என்று சொல்.”
❮
❯