லேவியராகமம் 2 : 1 (ECTA)
தானியப் படையல்கள் ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக உணவுப்படையல் செய்ய வந்தால், அவர் படையல் மெல்லிய மாவாய் இருக்கட்டும். அவர் அதன் மேல் எண்ணெய் வார்த்து சாம்பிராணிப் பொடி தூவி,
லேவியராகமம் 2 : 2 (ECTA)
அதை ஆரோனின் புதல்வராகிய குருக்களிடம் கொண்டு வருவார். குரு அந்த எண்ணெய், சாம்பிராணி கலந்த அந்த மாவில் கை நிறைய எடுப்பார். நினைவுப் படையலாக அதைக் குரு பலிபீடத்தின் மேல் எரிப்பார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப் பலி ஆகும்.
லேவியராகமம் 2 : 3 (ECTA)
உணவுப் படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் உரியது. ஆண்டவருக்கான நெருப்புப்பலிகளில் அது மிகவும் தூயது.
லேவியராகமம் 2 : 4 (ECTA)
நேர்ச்சையாக அடுப்பிலே சுட்ட உணவுப்படையலைச் செலுத்தினால், அது எண்ணெயில் பிசைந்த மெல்லியமாவில் செய்த புளிப்பற்ற அதிரசங்களும், எண்ணெயில் தோய்த்த அடைகளுமாய் இருக்கட்டும்.
லேவியராகமம் 2 : 5 (ECTA)
உனது நேர்ச்சை தட்டையான சட்டியில் சுட்ட உணவுப்படையலாக இருந்தால், அது எண்ணெய் வார்த்த புளிப்பற்ற மெல்லிய மாவால் செய்யப்பட வேண்டும்.
லேவியராகமம் 2 : 6 (ECTA)
அதைத் துண்டுகளாகப் பிட்டு அதன்மேல் எண்ணெய் விட வேண்டும், அது ஓர் உணவுப் படையல்.
லேவியராகமம் 2 : 7 (ECTA)
உனது நேர்ச்சை, சட்டியில் செய்யப்படுகிற உணவுப்படையல் எனில், அது மெல்லிய மாவால் எண்ணெயில் செய்யப்படவேண்டும்.
லேவியராகமம் 2 : 8 (ECTA)
இம்முறையில் செய்யப்பட்டவற்றை ஆண்டவருக்கு உணவுப் படையலாகச் செலுத்துவாயாக. அது குருவிடம் வந்து சேரும்போது அவர் அதைப் பலிபீடத்துக்குக் கொண்டு போவார்.
லேவியராகமம் 2 : 9 (ECTA)
குரு உணவுப் படையலிலிருந்து நினைவுப்படையலைத் தனித்தெடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிப்பார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி.
லேவியராகமம் 2 : 10 (ECTA)
உணவுப்படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் உரியது. ஆண்டவருக்கான நெருப்பும் பலிகளில் இது மிகவும் தூயது.
லேவியராகமம் 2 : 11 (ECTA)
ஆண்டவருக்குச் செலுத்தும் உணவுப்படையல் எதுவும் புளிப்பேறியதாய்ச் செய்யப்படலாகாது. புளிக்காரம், தேன் எதையுமே ஆண்டவருக்கு நெருப்புப்பலியாக்க வேண்டாம்.
லேவியராகமம் 2 : 12 (ECTA)
அவற்றை, முதற்பலன் படையலாக ஆண்டவருக்குச் செலுத்தலாம். ஆனால், இவை இனிய நறுமணமாகப் பலிபீடத்தில் எரிக்கப்படலாகாது.
லேவியராகமம் 2 : 13 (ECTA)
நேர்ச்சையான எந்த உணவுப்படையலும் உப்பிடப்பட வேண்டும். உன் உணவுப் படையலில் கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக் குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக.
லேவியராகமம் 2 : 14 (ECTA)
முதற்பலன்களின் உணவுப் படையலை ஆண்டவருக்கு செலுத்தினால், அறுவடையான கதிர்களை நெருப்பில் வாட்டி உதிர்த்து, உன் முதற்பலன்களின் உணவுப் படையலாகச் செலுத்த வேண்டும்.
லேவியராகமம் 2 : 15 (ECTA)
அதன்மேல் எண்ணெய் ஊற்றிச் சாம்பிராணி போடவேண்டும். இதுவும் ஓர் உணவுப் படையலே.
லேவியராகமம் 2 : 16 (ECTA)
உதிர்க்கப்பட்டவற்றிலும் எண்ணெயிலுமிருந்து நினைவுப் படையலுக்கான பகுதியை குரு எடுத்துச் சாம்பிராணியோடு எரித்து விடுவார். இது ஆண்டவருக்கான நெருப்புப்பலி.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16