லேவியராகமம் 16 : 1 (ECTA)
பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள் ஆரோனின் புதல்வர் இருவர் ஆண்டவரது திருமுன்னிலையை நெருங்கியதால் சாவுக்குள்ளானபின், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
லேவியராகமம் 16 : 2 (ECTA)
“ஆரோனிடம் நீ கூற வேண்டியது; அவன் சாகாது இருக்க வேண்டுமெனில், தூயகத்தில் தொங்குதிரைக்கு உள்ளே இருக்கும் இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக, அவன் விரும்பும் போதெல்லாம் வரக்கூடாது; வந்தால் சாவுக்குள்ளாவான். ஏனெனில், இரக்கத்தின் இருக்கையின்மேல் மேகத்தில் நான் தோன்றுவேன். [* எபி 6: 19 ]
லேவியராகமம் 16 : 3 (ECTA)
ஒரு காளையைப் பாவம் போக்கும் பலியாகவும் ஓர் ஆட்டுக்கிடாயை எரிபலியாகவும் செலுத்தி ஆரோன் தூயகத்திற்குள் நுழையலாம். [* எபி 9: 7 ]
லேவியராகமம் 16 : 4 (ECTA)
அவன் புனித நார்ப்பட்டு மேற்சட்டை அணியவேண்டும். நார்ப்பட்டாலான உள்ளாடை, கச்சை, தலைப்பாகை அணிய வேண்டும். இந்தப் புனித ஆடைகளை நீராடிய பின்னரே அவன் அணியலாம்.
லேவியராகமம் 16 : 5 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் எரி பலிக்காக ஆட்டுக்கிடாய் ஒன்றையும் கொண்டுவர வேண்டும்.
லேவியராகமம் 16 : 6 (ECTA)
ஆரோன், பாவம் போக்கும் பலிக்குரிய காளையைத் தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
லேவியராகமம் 16 : 7 (ECTA)
வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் சந்திப்புக் கூடார வாயிலில், ஆண்டவர் திருமுன் நிறுத்த வேண்டும்.
லேவியராகமம் 16 : 8 (ECTA)
ஆண்டவருக்கென ஒன்றும் போக்கு ஆடாக விடப்படுவதற்கென ஒன்றுமாக அந்தக் கிடாய்கள்மேல் சீட்டு இடப்படும்.
லேவியராகமம் 16 : 9 (ECTA)
ஆண்டவருக்கெனச் சீட்டு விழுந்த ஆட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டும்.
லேவியராகமம் 16 : 10 (ECTA)
போக்கு ஆடாக விடப்படுவதற்கெனச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கிடாய், பாவக்கழுவாய்க்கெனப் பாலை நிலத்திற்கு அனுப்பப்படுமாறு, ஆண்டவர் திருமுன் உயிருடன் நிறுத்தி வைக்கப்படும்.
லேவியராகமம் 16 : 11 (ECTA)
ஆரோன் பாவம்போக்கும் பலிக்குரிய காளையைத் தன் குடும்பத்தாருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
லேவியராகமம் 16 : 12 (ECTA)
ஆரோன் கலசத்தை ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடத்து நெருப்புத்தணலால் நிரப்பிக்கொண்டு, பொடியாக்கப்பட்ட நறுமணமிக்க சாம்பிராணியும் எடுத்துக் கொண்டு, தொங்குதிரைக்கு உள்ளே வருவான்.
லேவியராகமம் 16 : 13 (ECTA)
அவன் சாகாதிருக்க, உடன்படிக்கைப் பேழையின்மேல் இருக்கும் இரக்கத்தின் இருக்கையைப் புனிதப்புகை மூடுமளவிற்கு ஆண்டவர் திருமுன் நெருப்பில் சாம்பிராணி போடுவான்.
லேவியராகமம் 16 : 14 (ECTA)
மேலும், அவன் கீழே நின்று கொண்டு, காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கைமீது தன் விரலால் தெளிப்பான். மீண்டும் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கை முன்னர் ஏழுமுறை தெளிப்பான்.
லேவியராகமம் 16 : 15 (ECTA)
மக்களின் பாவம்போக்கும் பலியான வெள்ளாட்டுக்கிடாயை அவன் அடித்து, அதன் இரத்தத்தைத் தொங்குதிரைக்கு உள்ளே கொண்டு செல்வான், காளையின் இரத்தத்தைக் தெளித்தது போலவே, இதனையும் இரக்கத்தின் இருக்கையின்மேலும், அதன் முன்னிலையிலும் தெளிப்பான். [* எபி 9: 12 ]
லேவியராகமம் 16 : 16 (ECTA)
இஸ்ரயேல் மக்களின் தீட்டுகளை முன்னிட்டும் அவர்களின் பாவங்களால் விளைந்த குற்றங்களை முன்னிட்டும் தீட்டுப்பட்ட தூயகத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்; அவர்களின் தூய்மையற்ற நிலைக்குள் அமைந்துள்ள சந்திப்புக் கூடாரத்துக்காகவும் அவன் அப்படியே செய்வான்.
லேவியராகமம் 16 : 17 (ECTA)
அவன் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் சபை மக்கள் அனைவருக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றும்படி தூயகத்திற்குள் சென்று, பாவக்கழுவாய் நிறைவேற்றிவிட்டு வெளியே வரும் வரை சந்திப்புக்கூடாரத்தில் எவரும் இருத்தல் கூடாது.
லேவியராகமம் 16 : 18 (ECTA)
அவன் ஆண்டவர் திருமுன் இருக்கிற பலிபீடத்திற்கு அருகில் வந்து அதற்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கிடாயின் இரத்தத்திலும் சிறிது எடுத்துப் பலிபீடக் கொம்புகளில் பூசுவான்.
லேவியராகமம் 16 : 19 (ECTA)
தன் விரலினால் அந்த இரத்தத்தை எடுத்து, ஏழு முறை அதன் மேல் தெளித்து, இஸ்ரயேல் மக்களின் தீட்டுகள் நீங்க அர்ப்பணிப்பான்.
லேவியராகமம் 16 : 20 (ECTA)
போக்கு ஆடு இவ்வாறு, அவன் தூயகத்திற்கும், சந்திப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் கழுவாய் நிறைவேற்றியபின், உயிரோடிருக்கிற ஆட்டுக்கிடாயைக் கொண்டுவருவான்.
லேவியராகமம் 16 : 21 (ECTA)
ஆரோன் இரு கைகளையும் உயிரோடிருக்கும் அந்தக் கிடாயின் மேல் வைத்து, இஸ்ரயேல் மக்களின் எல்லாக் குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் அறிக்கையிட்டு அதன் தலைமேல் சுமத்தி, அதைப் பாலை நிலத்துக்குக் கொண்டு செல்ல நியமிக்கப்பட்ட ஆள் மூலம் அங்கு அனுப்பிவிடுவான்.
லேவியராகமம் 16 : 22 (ECTA)
அந்த வெள்ளாட்டுக் கிடாய் அவர்களின் பாவங்களைச் சுமந்துகொண்டு தனிமையான இடத்திற்குச் செல்லும்; அந்த ஆள் அதைப் பாலைநிலத்தில் விட்டுவிடுவான்.
லேவியராகமம் 16 : 23 (ECTA)
ஆரோன் சந்திப்புக் கூடாரத்திற்கு வந்து, தூயகத்தில் உடுத்தியிருந்த நார்ப்பட்டு ஆடைகளை அங்கே களைந்து வைத்துவிடுவான். [* எசே 44: 19 ]
லேவியராகமம் 16 : 24 (ECTA)
பின்பு, அவன் தூய்மையான இடத்தில் குளித்துத் தன் ஆடைகளை அணிந்துகொண்டு தன் எரி பலியையும் மக்களின் எரிபலிகளையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
லேவியராகமம் 16 : 25 (ECTA)
பாவம் போக்கும் பலியின் கொழுப்பை அவன் பலிபீடத்தில் எரித்து விடுவான்.
லேவியராகமம் 16 : 26 (ECTA)
போகவிட்ட போக்கு ஆடாகிய வெள்ளாட்டுக் கிடாயைக் கொண்டு போய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்துக்குள் வருவான்.
லேவியராகமம் 16 : 27 (ECTA)
தூயகத்திற்குள் பாவம் போக்குவதற்கென இரத்தம் எடுக்கப்பட்ட காளையும் கிடாயும், பாளையத்திற்கு வெளியே கொண்டுபோகப்படும்; அவற்றின் தோல், இறைச்சி, சாணம் ஆகியவை நெருப்பில் சுட்டெரிக்கப்படும். [* எபி 13: 11 ]
லேவியராகமம் 16 : 28 (ECTA)
அவற்றை எரித்தவன் தன்உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்திற்குள் வருவான்.
லேவியராகமம் 16 : 29 (ECTA)
பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாளுக்கான நெறிமுறைகள் ஏழாம் மாதம் பத்தாம் நாள் குடிமக்களும் உங்களோடு வாழும் அன்னியரும் வேலை ஒன்றும் செய்யாமல் நோன்பிருக்க வேண்டும். இது உங்களுக்கு என்றுமுள் நியமம் ஆகும். * லேவி 23:26-32; எண் 29:7-11..
லேவியராகமம் 16 : 30 (ECTA)
அந்த நாளில் நீங்கள் தூய்மையாக்கப்படும்படி உங்களுக்கெனப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்; ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களுக்காகக் கழுவாய் நிறைவேற்றப்பட, நீங்கள் தூய்மையடைவீர்கள். * லேவி 23:26-32; எண் 29:7-11..
லேவியராகமம் 16 : 31 (ECTA)
அது உங்களுக்கு நோன்புநாள். அந்த நாள் நீங்கள் முழு ஓய்வெடுக்கும் ‘ஓய்வு நாள்’. இது என்றுமுள நியமம் ஆகும். * லேவி 23:26-32; எண் 29:7-11..
லேவியராகமம் 16 : 32 (ECTA)
அருள்பொழிவு செய்யப்பட்டு, தன் தந்தைக்குப் பின்னர் குருவாக நியமனம் பெற்றவனே பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். அவன் தூய உடைகளான நார்ப்பட்டு ஆடைகளை அணிந்து கொண்டு, * லேவி 23:26-32; எண் 29:7-11..
லேவியராகமம் 16 : 33 (ECTA)
தூயகத்திற்காகவும், சந்திப்புக் கூடாரத்திற்காகவும் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். குருக்களுக்காகவும், சபையின் எல்லா மக்களுக்காகவும் பாவக் கழுவாய் செய்வான். * லேவி 23:26-32; எண் 29:7-11..
லேவியராகமம் 16 : 34 (ECTA)
ஆண்டுக்கு ஒரு முறை இஸ்ரயேல் மக்களுக்காகவும் அவர்களுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் கழுவாய் நிறைவேற்ற வேண்டும். இது என்றுமுள நியமம் ஆகும் என்று சொல்” என்றார். ஆண்டவர் இட்ட ஆணையின்படி மோசே செய்தார். * லேவி 23:26-32; எண் 29:7-11..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34