லேவியராகமம் 15 : 1 (ECTA)
உடலில் ஏற்படும் தூய்மையற்ற ஒழுக்கு ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
லேவியராகமம் 15 : 2 (ECTA)
“இஸ்ரயேல் மக்களுக்கு நீங்கள் கூறவேண்டியது: [* மத் 8:4; மாற் 1:44; லூக் 5:14; 17: 14 ]
லேவியராகமம் 15 : 3 (ECTA)
ஒருவனுக்கு விந்து ஒழுக்கு இருப்பின் — உடலிலிருந்து அது வெளிப்பட்டாலும், உடலுள் அடக்கிவைக்கப்பட்டாலும் — அது அவனுக்குத் தீட்டு.
லேவியராகமம் 15 : 4 (ECTA)
விந்து ஒழுக்கு உடையவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டு; அவன் அமரும் இருக்கை அனைத்தும் தீட்டே.
லேவியராகமம் 15 : 5 (ECTA)
அவன் படுக்கையைத் தொடுபவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
லேவியராகமம் 15 : 6 (ECTA)
விந்து ஒழுக்கு உடையவன் அமர்ந்தவற்றின் மீது அமர்பவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
லேவியராகமம் 15 : 7 (ECTA)
அவன் உடலைத் தொடுபவனும் தன் உடைகளைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
லேவியராகமம் 15 : 8 (ECTA)
அவன் தீட்டற்ற ஒருவன்மீது உமிழ்ந்தால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன்.
லேவியராகமம் 15 : 9 (ECTA)
அவன் ஏறிப் பயணம் செய்பவை அனைத்தும் தீட்டு.
லேவியராகமம் 15 : 10 (ECTA)
அவன் அடியிலிருக்கும் எதையும் தொடுபவன் ஒவ்வொருவனும் மாலைமட்டும் தீட்டுடையவன். அதைச் சுமப்பவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன். * ‘லாகு’ என்பது எபிரேய பாடம்..
லேவியராகமம் 15 : 11 (ECTA)
அவன் தன்னைத் தண்ணீரில் கழுவாதிருக்கையில், தன்கையால் எவனைத் தொட்டாலும், அவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
லேவியராகமம் 15 : 12 (ECTA)
அவன் தொடும் மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; மரக்கலம் தண்ணீரில் அலசப்படவேண்டும்.
லேவியராகமம் 15 : 13 (ECTA)
அவனது ஒழுக்கு நின்று தீட்டு அகன்றால், அவன் தன்னைத் தீட்டகற்ற ஏழுநாள் காத்திருக்கவேண்டும்; பின்பு, அவன் தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்று நீரில் கழுவியதும், அவனது தீட்டு அகலும்.
லேவியராகமம் 15 : 14 (ECTA)
எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களை அல்லது புறாக் குஞ்சுகளை, சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் குருவிடம் கொடுக்க வேண்டும்.
லேவியராகமம் 15 : 15 (ECTA)
குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் செலுத்தி அவனுக்காக, ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.
லேவியராகமம் 15 : 16 (ECTA)
விந்து கழிந்தவனும் தன் உடலைக் கழுவுவான். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
லேவியராகமம் 15 : 17 (ECTA)
விந்து பட்டதோலும் உடையும் நீரால் கழுவப்படவேண்டும். மாலைமட்டும் அவை தீட்டாயிருக்கும்.
லேவியராகமம் 15 : 18 (ECTA)
அவனுடன் அவன் மனைவி படுத்திருந்தால், இருவரும் தண்ணீரில் முழுக வேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாயிருப்பர்.
லேவியராகமம் 15 : 19 (ECTA)
மாதவிலக்கில் இரத்தப்பெருக்குடைய பெண் ஏழுநாள் விலக்காய் இருப்பாள். அவளைத் தொடுபவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பர்.
லேவியராகமம் 15 : 20 (ECTA)
மாத விலக்கின்மீது எதன்மீது படுக்கிறாளோ, எவற்றின்மீது அமர்கிறாளோ அவை அனைத்தும் தீட்டே.
லேவியராகமம் 15 : 21 (ECTA)
அவள் படுக்கையைத் தொடுபவர் அனைவரும் தம் உடைகளைத் துவைத்து நீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாய் இருப்பர்.
லேவியராகமம் 15 : 22 (ECTA)
அவள் அமரும் மணையைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.
லேவியராகமம் 15 : 23 (ECTA)
அவள் படுக்கையின்மீதும் அவள் அமர்ந்த மணையின்மீதும் இருந்த எதையாகிலும் தொட்டவனும் மாலைமட்டும் தீட்டாய் இருப்பான்.
லேவியராகமம் 15 : 24 (ECTA)
ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீதுபட்டது என்றால், அவன் ஏழுநாள் தீட்டுடையவன்; அவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டே.
லேவியராகமம் 15 : 25 (ECTA)
பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே.
லேவியராகமம் 15 : 26 (ECTA)
அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப் படுக்கைக்கு ஒத்ததே; அவள் அமரும் அனைத்தும் தீட்டுக் காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்.
லேவியராகமம் 15 : 27 (ECTA)
அவற்றைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, நீரில் மூழ்கவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.
லேவியராகமம் 15 : 28 (ECTA)
அவள் தன் இரத்தப்பெருக்கு நின்றபின், ஏழு நாள் கழித்தபின் தீட்டற்றவள் ஆவாள்.
லேவியராகமம் 15 : 29 (ECTA)
எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களையோ புறாக் குஞ்சுகளையோ சந்திப்புக் கூடார வாயிலில் குருவிடம் கொண்டு வருவாள்.
லேவியராகமம் 15 : 30 (ECTA)
குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியும் மற்றதை எரி பலியுமாக்கி, அவளுக்காக ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.
லேவியராகமம் 15 : 31 (ECTA)
இஸ்ரயேல் மக்கள், தங்கள் நடுவே இருக்கும் எனது தங்குமிடத்தைத் தீட்டாக்கி, சாகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் தீட்டுகளிலிருந்து அவர்களை விலக்கி வைக்க வேண்டும்.
லேவியராகமம் 15 : 32 (ECTA)
விந்து ஒழுக்கினாலும் விந்து அழிவினாலும் தீட்டானவனுக்கும்
லேவியராகமம் 15 : 33 (ECTA)
தன் விலக்கினாலும் நோயுற்றவளுக்கும் — உடல் தூய்மையற்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் — தீட்டாயிருப்பவளோடு படுத்தவனுக்கும், உரிய சட்டம் இதுவே”.
❮
❯