புலம்பல் 4 : 1 (ECTA)
வீழ்ச்சியுற்ற எருசலேம் ஐயோ! பொன் இப்படி மங்கிப் போயிற்றே! பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து போயிற்றே! திருத்தலக் கற்கள் தெருமுனை எங்கும் சிதறிக் கிடக்கின்றனவே!
புலம்பல் 4 : 2 (ECTA)
பசும்பொன்னுக்கு இணையான சீயோனின் அருமை மைந்தர் இன்று குயவனின் கைவினையாம் மண்பாண்டம் ஆயினரே!
புலம்பல் 4 : 3 (ECTA)
குள்ளநரிகளும் பாலூட்டித் தம் குட்டிகளைப் பேணிக்காக்கும்! பாலைநிலத் தீக்கோழியென என் மக்களாம் மகள் கொடியவள் ஆயினளே!
புலம்பல் 4 : 4 (ECTA)
பால்குடி மறவாத மழலைகளின் நாவு தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்! பச்சிளங் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை அளித்திடுவார் யாருமிலர்!
புலம்பல் 4 : 5 (ECTA)
சுவையுணவு அருந்தினோர் நடுத்தெருவில் நலிகின்றனர்! பட்டுடுத்தி வளர்ந்தோர் குப்பைமேட்டில் கிடக்கின்றனர்!
புலம்பல் 4 : 6 (ECTA)
ஒருவரும் கை வைக்காமல் நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற சோதோமின் பாவத்தைவிட, என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே! [* தொநூ 19: 24 ]
புலம்பல் 4 : 7 (ECTA)
அவள் இளவரசர் பனியினும் தூயவராய்ப் பாலினும் வெண்மையராய்ப் பவளத்தினும் சிவந்த மேனியராய் நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்!
புலம்பல் 4 : 8 (ECTA)
இப்பொழுதோ, அவர்கள் தோற்றம் கரியினும் கருமை ஆனது; அவர்களைத் தெருக்களில் அடையாளம் காண இயலவில்லை! அவர்கள் தோல் எலும்போடு ஒட்டியிருந்தது. காய்ந்த மரம்போல் அது உலர்ந்து போனது!
புலம்பல் 4 : 9 (ECTA)
பசியினால் மாண்டவர்களினும் வாளினால் மாண்டோர் நற்பேறு பெற்றோர்! ஏனெனில், முன்னையோர் வயல் தரும் விளைச்சலின்றிக் குத்துண்டவர் போல் மாய்ந்தனர்!
புலம்பல் 4 : 10 (ECTA)
இரங்கும் பெண்டிரின் கைகள் தம் குழந்தைகளை வேகவைத்தன! என் மக்களாகிய மகள் அழிவுற்றபோது பிள்ளைகளே அன்னையர்க்கு உணவாயினர்! [* இச 28:57; எசே 5:10.. ]
புலம்பல் 4 : 11 (ECTA)
ஆண்டவர் தம் சீற்றத்தைத் தீர்த்துக் கொண்டார்; தம் கோபக் கனலைக் கொட்டினார்; சீயோனில் நெருப்பை மூட்டினார்; அது அதன் அடித்தளங்களை விழுங்கிற்று.
புலம்பல் 4 : 12 (ECTA)
பகைவரும் எதிரிகளும் எருசலேம் வாயில்களில் நுழைவர் என்று மண்ணுலகின் மன்னரோ பூவுலகில் வாழ்வோரோ நம்பவில்லை.
புலம்பல் 4 : 13 (ECTA)
நகரின் நடுவே நீதிமானின் இரத்தம் சிந்திய இறைவாக்கினரின் பாவமும் குருக்களின் குற்றமுமே இதற்குக் காரணமாம்!
புலம்பல் 4 : 14 (ECTA)
அவர்கள் குருடரெனத் தெருக்களில் தடுமாறினர்; அவர்கள்மீது இரத்தக் கறை எவ்வளவு படிந்திருந்ததெனில், அவர்கள் ஆடைகளைக்கூட எவராலும் தொட இயலவில்லை.
புலம்பல் 4 : 15 (ECTA)
விலகுங்கள்! தீட்டு! விலகுங்கள்! விலகுங்கள்!தொடாதீர்கள்! என்று அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்; அவர்கள் அகதிகளாய் அலைந்து திரிந்தார்கள். ‘இனி நம்மிடம் குடியிரார்,’ ‘இனி எம்மிடையே தங்கக்கூடாது’ என்று வேற்றினத்தார் கூறினர்.
புலம்பல் 4 : 16 (ECTA)
ஆண்டவரே தம் முன்னிலையினின்று அவர்களைச் சிதறடித்தார்; இனி அவர்களைக் கண்ணோக்கமாட்டார். குருவை மதிப்பார் இல்லை; முதியோர்க்கு இரங்குவார் இல்லை.
புலம்பல் 4 : 17 (ECTA)
உதவியை வீணில் எதிர்பார்த்து எம் கண்கள் பூத்துப்போயின! எம்மை விடுவிக்க இயலாத நாட்டினர்க்காய்க் கண் விழித்துக் காத்திருந்தோம்!
புலம்பல் 4 : 18 (ECTA)
எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது; எம் தெருக்களில் கூட எம்மால் நடக்க முடியவில்லை; எம் முடிவு நெருங்கிவிட்டது; எம் நாள்கள் முடிந்துவிட்டன; எம் முடிவு வந்து விட்டது.
புலம்பல் 4 : 19 (ECTA)
வானத்துப் பருந்துகளிலும் விரைவாய் எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்; மலைகளில் எங்களைத் துரத்தி வந்தார்கள்; பாலையில் எங்களுக்காய்ப் பதுங்கி இருந்தார்கள்.
புலம்பல் 4 : 20 (ECTA)
ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர், அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்! ‘அவரது நிழலில் வேற்றினத்தார் நடுவில் நாம் வாழ்வோம்’ என்று அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!
புலம்பல் 4 : 21 (ECTA)
ஊசு நாட்டில் வாழும் மகளே! ஏதோம்! அகமகிழ்ந்து அக்களித்திடு! கிண்ணம் உன்னையும் வந்தடையும்! நீ குடிவெறி கொண்டு ஆடையின்றிக் கிடப்பாய்!
புலம்பல் 4 : 22 (ECTA)
மகளே! சீயோன்! உன் குற்றப்பழி நீங்கிவிட்டது; உன் அடிமைத்தனம் இனியும் தொடராது; மகளே! ஏதோம்! உன் குற்றத்திற்காக நீ தண்டிக்கப்படுவாய்! உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22