புலம்பல் 2 : 1 (ECTA)
எருசலேமுக்குரிய தண்டனை ஐயோ! மகள் சீயோனை ஆண்டவர் தம் சினமென்னும் மேகத்தால் மூடினார்! அவர் இஸ்ரயேலின் மேன்மையை விண்ணினின்று மண்ணுக்குத் தள்ளினார்! அவரது சினத்தின் நாளில் தம் கால்மணையை மனத்தில் கொள்ளவில்லை!
புலம்பல் 2 : 2 (ECTA)
ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்; அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்; அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார்.
புலம்பல் 2 : 3 (ECTA)
அவர் வெஞ்சினம் கொண்டு இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்; பகைவன் வந்தபொழுது தம் வலக்கையைப் பின்புறம் மறைத்துக்கொண்டார்; சூழ்ந்திருக்கும் யாவற்றையும் எரிக்கும் தீப்பிழம்பென, அவர் யாக்கோபின் மீது பற்றியெரிந்தார்.
புலம்பல் 2 : 4 (ECTA)
எதிரி போலத் தமது வில்லை நாணேற்றினார்; பகைவன் போலத் தம் வலக்கையை ஓங்கினார்; கண்ணுக்கு இனியவை அனைத்தையும் அழித்தார்; மகள் சீயோனின் கூடாரத்தில் தம் சினத்தை நெருப்பெனக் கொட்டினார்.
புலம்பல் 2 : 5 (ECTA)
என் தலைவர் எதிரி போலானார்; அவர் இஸ்ரயேலை அழித்தார்; அதன் கோட்டை கொத்தளங்களைத் தகர்த்தார்; மகள் யூதாவின் அழுகையையும் புலம்பலையும் மிகுதியாக்கினார்.
புலம்பல் 2 : 6 (ECTA)
தோட்டத்துப் பரணைப் பிரித்தெறிவது போலத் தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்; சபை கூடும் இடத்தையும் அழித்தார்; சீயோனில் ஆண்டவர் விழாக்களையும் ஓய்வுநாளையும் மறக்கச் செய்தார்; அவர் வெஞ்சினமுற்று அரசனையும் குருவையும் வெறுத்து ஒதுக்கினார்.
புலம்பல் 2 : 7 (ECTA)
என் தலைவர் தம் பலிபீடத்தை வெறுத்தொதுக்கினார். தம் திருத்தூயகத்தைக் கைவிட்டார்; அதன் கோட்டைச் சுவர்களைப் பகைவரிடம் கையளித்தார்; விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோல ஆண்டவரின் இல்லத்தில் அவர்கள் ஆரவாரம் செய்தனர்;
புலம்பல் 2 : 8 (ECTA)
மகள் சீயோனின் மதிலை அழிக்க ஆண்டவர் திட்டமிட்டார்; அதற்கென நூலினால் அளந்தார்; அதை அழிப்பதை நிறுத்தத் தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை; அரணும் மதிலும் புலம்பச் செய்தார்; அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன.
புலம்பல் 2 : 9 (ECTA)
அவளின் வாயிற்கதவுகள் மண்ணில் புதைந்து கிடந்தன; அதன் தாழ்களை உடைத்துச் சிதறடித்தார்; அவளின் அரசனும் தலைவர்களும் வேற்றினத்தாரிடையே உள்ளனர்! திருச்சட்டம் இல்லை; அவளின் இறைவாக்கினரும் ஆண்டவரின் காட்சி பெறவில்லை.
புலம்பல் 2 : 10 (ECTA)
மகள் சீயோனின் பெரியோர் தரையில் மௌனமாய் அமர்ந்துள்ளனர்; அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்; சாக்கு உடை உடுத்தியுள்ளனர்; எருசலேமின் கன்னிப் பெண்கள் தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர்.
புலம்பல் 2 : 11 (ECTA)
என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது! என் மக்களாகிய மகள் நசுக்கப் பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்!
புலம்பல் 2 : 12 (ECTA)
அவர்கள் தங்கள் அன்னையரிடம், ‘அப்பம், திராட்சை இரசம் எங்கே?’ என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப்போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்!
புலம்பல் 2 : 13 (ECTA)
மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்?
புலம்பல் 2 : 14 (ECTA)
உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்; நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் சொல்லவில்லை; அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்!
புலம்பல் 2 : 15 (ECTA)
அவ்வழியாய்க் கடந்து செல்வோர் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள் எருசலேமை நோக்கித் தலையை ஆட்டிச் சீழ்க்கையடித்தனர்! “அழகின் நிறைவும் மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா?” என்றனர்.
புலம்பல் 2 : 16 (ECTA)
உன் எதிரிகள் அனைவரும் உன்னை நோக்கிக் கோணல்வாய் காட்டுகின்றனர்; சீழ்க்கையடித்துப் பற்களை நறநற வென்று கடிக்கின்றனர்; ‘நாம் அவளைப் பாழாக்கினோம்’ என்றனர். ‘இந்நாளுக்காகவே நாம் காத்திருந்தோம்; இப்போதுதான் நம்மால் அதைக் காணமுடிந்தது’ என்றனர்.
புலம்பல் 2 : 17 (ECTA)
ஆண்டவர் தாம் திட்டமிட்டபடியே செய்தார்; நெடுநாள்களுக்குமுன் தாம் முன்னெச்சரிக்கை செய்தவாறு செயல்பட்டார்; ஈவிரக்கமின்றி இடித்துத் தள்ளினார்; உன் எதிரிகளை மகிழ்ச்சியடையச் செய்தார்; பகைவனின் ஆற்றலைப் பெருகச் செய்தார்.
புலம்பல் 2 : 18 (ECTA)
அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!
புலம்பல் 2 : 19 (ECTA)
எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெருமுனையில் பசியால் மயங்கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!
புலம்பல் 2 : 20 (ECTA)
கண்ணோக்கும் ஆண்டவரே! எண்ணிப் பாரும்; யாருக்கு இப்படிச் செய்திருக்கின்றீர்? பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் கனிகளையே, கைக்குழந்தைகளையே, தின்ன வேண்டுமோ? குருவும், இறைவாக்கினரும் என் தலைவரின் திருத்தூயகத்தில் கொல்லப்படவேண்டுமோ?
புலம்பல் 2 : 21 (ECTA)
வீதிகளின் புழுதியில் சிறியோரும் பெரியோரும் வீழ்ந்து கிடக்கின்றனர்! என் கன்னியரும் காளையரும் வாளால் வீழ்த்தப்பட்டனர்! உமது சீற்றத்தின் நாளில் ஈவிரக்கமின்றி அவர்களைக் கொன்று குவித்தீர்!
புலம்பல் 2 : 22 (ECTA)
திருவிழாவுக்கு அழைப்பது போல, எப்பக்கமும் எனக்கெதிராகப் பேரச்சத்தை வரவழைத்தீர்! ஆண்டவரது சீற்றத்தின் நாளில் உயிர்தப்பிப் பிழைத்தவரோ எஞ்சியவரோ எவரும் இல்லை! நான் பேணி வளர்த்தவர்களை என் எதிரி கொன்றழித்தான்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22