புலம்பல் 1 : 1 (ECTA)
எருசலேமின் துன்பங்கள் அந்தோ! மக்கள் மிகுந்த மாநகர் தனியளாய் அமர்ந்தனளே! நாடுகளில் மாண்புடையாள் விதவைபோல் ஆனாளே! மாநிலங்களின் இளவரசி அடிமைப்பெண் ஆயினளே!
புலம்பல் 1 : 2 (ECTA)
ஆறாத் துயருற்று இரவில் அவள் அழுகின்றாள்; அவளின் கன்னங்களில் கண்ணீர் வடிகின்றது; அவளின் காதலரில் தேற்றுவார் எவரும் இல்லை; அவளின் நண்பர் அனைவரும் அவளுக்குத் துரோகம் செய்து பகைவர் ஆயினர்.
புலம்பல் 1 : 3 (ECTA)
இன்னலுற்ற அடிமையான யூதா நாடுகடத்தப்பட்டாள்! வேற்றினத்தாருடன் தங்கியிருக்கும் அவள் அமைதி பெறவில்லை! துரத்தி வந்தோர் இடுக்குகளிடையே அவளை வளைத்து பிடித்தனர்!
புலம்பல் 1 : 4 (ECTA)
விழாக்களுக்குச் செல்பவர் யாருமில்லை; சீயோனுக்குச் செல்லும் வழிகள் புலம்புகின்றன; அவள் நுழைவாயில்கள் பாழடைந்துள்ளன; அவள் குருக்கள் பெருமூச்சு விடுகின்றனர்; அவளின் கன்னிப் பெண்கள் ஏங்கித் தவிக்கின்றனர்; அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று.
புலம்பல் 1 : 5 (ECTA)
உயர் தலைவர் ஆயினர் அவளின் எதிரிகள்! வளமுடன் வாழ்கின்றனர் அவளின் பகைவர்! அவளுடைய பல்வேறு குற்றங்களுக்காக ஆண்டவர் அவளைத் துன்பத்திற்கு உட்படுத்தினார்! அவள் குழந்தைகளை எதிரிகள் கைதியாக்கிக்கொண்டு போயினர்.
புலம்பல் 1 : 6 (ECTA)
அனைத்து மேன்மையும் மகள் சீயோனை விட்டு அகன்றது; அவள் தலைவர்கள் பசும்புல் காணா மான்கள்போல் ஆயினர். துரத்தி வருவோர் முன் அவர்கள் ஆற்றல் அற்றவர் ஆயினர்.
புலம்பல் 1 : 7 (ECTA)
எருசலேம், தன் துன்ப நாள்களிலும், அகதியாய் வாழ்ந்தபோதும், முன்னாள்களில் தனக்கிருந்த நலன்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தாள்; அவளின் மக்கள் எதிரிகளின் கைகளில் சிக்கினார்கள்; அவளுக்கு உதவி செய்வார் யாருமில்லை; அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள் அவளை ஏளனம் செய்தனர்.
புலம்பல் 1 : 8 (ECTA)
ஏராளமாய்ப் பாவம் செய்தாள் எருசலேம்; அதனால் அவள் கறைப்பட்டவள் ஆனாள்; அவளை முன்பு மதித்த அனைவரும் அவமதித்தனர்; அவளுடைய திறந்த மேனியைக் கண்டனர்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னோக்கித் திரும்பினாள்.
புலம்பல் 1 : 9 (ECTA)
ஐயகோ! அவள் தீட்டு அவள் ஆடையில் தெரிகின்றதே! அவள் தனக்கு வரவிருப்பதை நினைவில் கொள்ள வில்லை! அவளது வீழ்ச்சி அதிர்ச்சியைத் தருகின்றது! அவளைத் தேற்றுவார் யாரும் இல்லை! “ஆண்டவரே என் துன்பத்தைப் பாரும்! பகைவன் பெருமை பெற்றுவிட்டான்!”
புலம்பல் 1 : 10 (ECTA)
ஒப்பற்ற அவளது விருப்பமான பொருளனைத்தின்மீதும் கைவைத்தான் பகைவன்! வேற்றினத்தார் உம் சபைக்கு வருவதைத் தடை செய்தீர்! அன்னார் அவளது திருத்தலத்தில் நுழைவதை அவள் பார்த்து நின்றாள்!
புலம்பல் 1 : 11 (ECTA)
உணவைத் தேடி அவளின் மக்கள் அனைவரும் ஓலமிடுகின்றனர்! உயிரைக் காத்திடத் தம் ஒப்பற்ற பொருள்களை உணவுக்காகத் தந்தனர்! “ஆண்டவரே என்னைக் கண்ணோக்கும்! நான் எத்தகு இழிநிலைக்கு உள்ளானேன் என்று பாரும்!”
புலம்பல் 1 : 12 (ECTA)
இவ்வழியாய்க் கடந்து செல்வோரே! உங்களுக்குக் கவலை இல்லையா? அனைவரும் உற்றுப் பாருங்கள்! எனக்கு வந்துற்ற துயர்போல வேறேதும் துயர் உண்டோ? ஆண்டவர் தம் வெஞ்சின நாளில் என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினார்.
புலம்பல் 1 : 13 (ECTA)
மேலிருந்து அவர் நெருப்பினை என் எலும்புகளுக்குள் இறங்கச் செய்தார்! என் கால்களுக்கு வலை விரித்தார்! அவர் என்னைப் பின்னடையச் செய்தார்! அவர் என்னைப் பாழாக்கினார்! நாள் முழுவதும் நான் சோர்ந்து போகிறேன்.
புலம்பல் 1 : 14 (ECTA)
என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது; அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன; அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்; நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.
புலம்பல் 1 : 15 (ECTA)
என் தலைவர் என்னிடமுள்ள வலியோர் அனைவரையும் அவமதித்தார்; என் இளைஞரை அடித்து நொறுக்க அவர் எனக்கு எதிராக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; மகள் யூதாவாகிய கன்னியை, ஆலையில் திராட்சைப் பழத்தைப் பிழிவதுபோல, என் தலைவர் கசக்கிப் பிழிந்தார்.
புலம்பல் 1 : 16 (ECTA)
இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன்; என் இரு கண்களும் கண்ணீரைப் பொழிகின்றன; என் உயிரைக் காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில் உள்ளார்; பகைவன் வெற்றி கொண்டதால் என் பிள்ளைகள் பாழாய்ப் போயினர்.
புலம்பல் 1 : 17 (ECTA)
சீயோன் தன் கைகளை உயர்த்துகின்றாள்; அவளைத் தேற்றுவார் யாருமில்லை; சூழ்ந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்; எருசலேம் அவர்களிடையே தீட்டுப்பொருள் ஆயிற்று.
புலம்பல் 1 : 18 (ECTA)
ஆண்டவரோ நீதியுள்ளவர்; நான் அவரது வாக்குக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தேன்; அனைத்து மக்களினங்களே, செவிகொடுங்கள்; என் துயரத்தைப் பாருங்கள்; என் கன்னிப்பெண்களும் இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர்.
புலம்பல் 1 : 19 (ECTA)
என் காதலர்களை அழைத்தேன்; அவர்களோ என்னை ஏமாற்றினர்; என் குருக்களும் பெரியோரும் தங்கள் உயிரைக் காத்திட உணவு தேடுகையில், நகரில் பசியால் மாண்டனர்.
புலம்பல் 1 : 20 (ECTA)
ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கும்! துயரில் நான் மூழ்கியுள்ளேன்! நான் பெருங் கலகம் செய்துள்ளேன்! என் குலை நடுங்குகின்றது! என் இதயம் வெடிக்கின்றது! வெளியே வாளுக்கு இரையாகினர் என் பிள்ளைகள்! வீட்டினுள்ளும் சாவு மயம்!
புலம்பல் 1 : 21 (ECTA)
நான் விடும் பெருமூச்சை அவர்கள் கேட்டார்கள்; என்னைத் தேற்றுவார் யாரும் இல்லை; என் எதிரிகள் அனைவரும் எனக்கு நேரிட்ட தீங்கைப்பற்றிக் கேள்வியுற்றனர்; நீரே அதைச் செய்தீர் என மகிழ்ச்சி அடைகின்றனர்! நீர் அறிவித்த நாளை வரச் செய்யும்! அவர்களும் என்னைப்போல் ஆகட்டும்!
புலம்பல் 1 : 22 (ECTA)
அவர்கள் தீச்செயல்கள் அனைத்தும் உம் திருமுன் வருவதாக! என் அனைத்துக் குற்றங்களின் பொருட்டு, நீர் என்னைத் தண்டித்தது போல், அவர்களையும் தண்டியும்! விம்மல்கள் மிகப் பல! என் இதயம் சோர்ந்துபோயிற்று!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22